காலகாலேசுவரர் கோயில்
காலகாலேசுவரர் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°08′07″N 77°02′04″E / 11.13528°N 77.03444°E |
பெயர் | |
பெயர்: | கோவில்பாளையம் காலகாலேசுவரர் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் மாவட்டம் |
அமைவு: | கோவில்பாளையம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காலகாலேசுவரர் |
தாயார்: | கருணாகரவல்லி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | ஏராளம். சோழர் காலக் கல்வெட்டுகள் அதிகம், ஹோய்சலர் நாட்டுக் கல்வெட்டு ஒன்று.[1] |
காலகாலேசுவரர் கோவில், (kalakaleswarar Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார்.[2]
அமைவிடம்
கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 209) கோயம்புத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கோவில்பாளையம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.
கோவில்
இது ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு சிவன் காலகாலேசுவரராக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி). கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.
சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.[1] சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.
கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.
மூலவர் | காலகாலேசுவரர் |
உற்சவர் | |
அம்மன்/தாயார் | கருணாகரவல்லி |
தல விருட்சம் | |
தீர்த்தம் | காலபொய்கை தீர்த்தம் |
ஆகமம்/பூஜை | |
பழமை | 1000-2000 வருடங்களுக்கு |
புராண பெயர் | கௌசிகபுரி |
பெயர்க் காரணம்
உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் (யமன்) இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பது தொன் வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.
சிறப்பு
திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது.[1]
தலவரலாறு
விசுவாமித்திரர்
தவம் செய்து விசுவாமித்திர முனிவராக மாறிய கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் ’திருநீற்றுமேடு’ என்று வழங்கப்படுகின்றது.[1]
எமதேவர்
திருக்கடையூரில் மார்க்கண்டேயரையும் சிவபெருமானையும் அவமதித்ததற்குப் பரிகாரமாக சிவபெருமான் எமதேவனை கொங்கு நாட்டின் கோவில்பாளையத்தில் வழிபடக்கூற, அவ்வாறே இங்கு வந்து தமது தண்டத்தினால் பூமியை அழுத்தி தீர்த்தம் ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தி மண்ணைக்குழைத்து சிவலிங்கத் திருமேனி செய்து வழிபட்டு பலன் பெற்றார் எமதேவர். தரிசனமளித்த சிவபெருமானிடம் எமதேவர் திருக்கடையூரில் தரிசிப்போருக்குத் தரும் பலனை இத்தலத்தில் தரிசிப்போருக்கும் தர வேண்டினார்.சிவபெருமானும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால் அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையான திருத்தலமாக வழிபடப்படுகின்றது.[1]
கரிகால் சோழன்
காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன்.[1]
கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார்.[1]
குறிப்புகள்
- திருப்பூரில் 1,100 ஆண்டுகள் பழமையான தலீகீஸ்வரர் கோவிலின் சுவர்களில் ஒன்பது கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
- அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்