கோணங்கி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோணங்கி
கோணங்கி
இயற்பெயர்/
அறியும் பெயர்
கோணங்கி
பிறப்புபெயர் இளங்கோ
பிறந்தஇடம் தமிழ் நாடு
பணி எழுத்தாளர்
அறியப்படுவது கல்குதிரை
குறிப்பிடத்தக்க படைப்புகள் மதினிமார்கள் கதை, பாழி, பிதிரா, இருள்வ மௌத்திகம்

கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் இளங்கோ.

வாழ்க்கைக் குறிப்பு

1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர்.[1] கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.

இலக்கியப் பணி

1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்ற தமிழ் எழுத்தாளர்களை வாசிப்பவர். தமக்கென்று தனித்த நடையை உருவாக்கியிருப்பவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர்; இலக்கியவாதிகளின் நண்பர். பாழி, பிதிரா, த, நீர்வளரி என்ற இவருடைய நான்கு நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன.

நூல்கள்

  • மதினிமார்கள் கதை (சிறுகதைத்தொகுப்பு, 1986)
  • கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதைத்தொகுப்பு, 1989)
  • பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதைத்தொகுப்பு, 1992)
  • பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (சிறுகதைத்தொகுப்பு, 1994)
  • உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (சிறுகதைத்தொகுப்பு, 1997)
  • பாழி (நாவல், 2000)
  • பிதிரா (நாவல், 2004)
  • இருள்வ மௌத்திகம் (கதைத்தொகுப்பு, 2007)
  • சலூன் நாற்காலியின் சுழன்றபடி (சிறுகதைத் தொகுப்பு, 2008) - மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது.
  • (நாவல், 2014)
  • நீர்வளரி (நாவல், 2020)

கோணங்கியின் எழுத்து

இவரது எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத விதத்தில் மாறுபட்ட பொருண்மையில் இருக்கும்.

பாலியல் குற்றச்சாட்டு

28 பிப்ரவரி 2023 அன்று ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக் இராமச்சந்திரன் கோணங்கியின் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.[2] அதன்படி கார்த்திக் "மணல் மகுடி" நாடக குழுவில் இருந்தபோது கோணங்கி தட்டச்சு செய்ய வேண்டும் என்று தனியே அழைத்து, பாலியல் சீண்டல்களைச் செய்ததாகக் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பல முன்னாள் மாணவர்களும் முன்வந்து தாங்களும் இதை போன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டது.[3] இதற்கு மறுப்பாக தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது என கோணங்கி தெரிவித்தார்.[4]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோணங்கி&oldid=3995" இருந்து மீள்விக்கப்பட்டது