கொல்லங்கொண்டான் (பாளையம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

Coordinates: 9°29′N 77°41′E / 9.49°N 77.69°E / 9.49; 77.69

கொல்லங்கொண்டான் is located in தமிழ் நாடு
கொல்லங்கொண்டான்
கொல்லங்கொண்டான்
கொல்லங்கொண்டான்

கொல்லங்கொண்டான் என்பது சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டியர் மன்னனால் வாண்டையார் என்ற தளபதிக்கு கொடுக்கப்பட்ட கிராமங்களாகும். பிற்பாடு நாயக்கர் காலத்தின் போது மதுரை 72 பாளையங்களாக பிரிந்த போது அதனுள் ஒன்றாக அடங்கியது.[1] இது இராஜபாளையம் பகுதியில் உள்ளது.[2]

வாண்டாயத் தேவன்

அந்த வாண்டையார் வம்சத்தில் வந்த வாண்டாயத்தேவன் பரங்கியரை எதிர்த்து பாளையக்காரர் போர்களில் பூலித்தேவன் கீழ் பங்கு கொண்டான்.

முதற்போர்

பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர். 1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.

இரண்டாம் போர்

1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.

மகன்

இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.

வலைவீச்சு

இவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

கொல்லங்கொண்டான் ஜமினை ஆட்சி செய்த அரசர்கள்

1.வாண்டயத்தேவன்

2. வாண்டயத்தேவன்

3.பூபதி வாண்டயார் மற்றும் பூமி வாண்டயார்

4.பொன்னையா திருமலை வாண்டயார்

5.சங்கர பாண்டிய திருமலை வாண்டயார்-முத்தம்மாள் நாச்சியார்

6.பொன்னையா திருமலை வாண்டயார்-ராமலெட்சுமி நாச்சியார்

7.ஹரிஹர புத்திர சங்கர நாராயண தக்ஷினா மூர்த்தி திருமலை வாண்டயார் –முத்துலெட்சுமி நாச்சியார்

8.லிங்கசுந்தரதாஸ் திருமலை வாண்டயார்

9.நடராஜன் திருமலை வாண்டயார்-ராஜலெட்சுமி நாச்சியார்

10.லிங்க சுந்தர திருமலை வாண்டயார்

11.லிங்க ராஜேந்திர திருமலை வாண்டயார்-பழனியம்மாள் நாச்சியார்

12.சங்கர் திருமலை வாண்டயார்-தனலெட்சுமி நாச்சியார்

13.கபிராஜன் திருமலை வாண்டயார்-லெட்சுமி நாச்சியார்

14.மகேஷ் திருமலை வாண்டயார்- பூங்கோதை நாச்சியார்

15. ராஜசேகர் திருமலை வாண்டயார்

16. ஹரிகரன் திருமலை வாண்டயார்

17. ஜெயஸ்ரீ நாச்சியார்- ராஜன்

18. மனிஷா நாச்சியார்

மூலம்

  • குங்குமம் வார இதழ் கட்டுரை[3]

மேற்கோள்கள்

  1. "Virudhunagar District Welcomes You". Archived from the original on 2019-05-14. பார்க்கப்பட்ட நாள் 2012-07-19.
  2. A History of Tinnevelly by Bishop R.Caldwell
  3. இரா. மணிகண்டன் (மார்ச் 2011). "வீரப்புலி வாண்டாயத் தேவன்". குங்குமம் (8): 124 - 129. doi:23 மார்ச் 2011.