கொண்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும். அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.பகை அரசரின் பெண்களை வெற்றி கண்ட அரசன் தம் ஊருக்கு கொண்டு வருவான்.சிலர் விரும்பி ஏற்றுக் கொள்வர். சிலர் அடங்காதவர்.

கொண்டி - சொல்

அஞ்சாமல் யாமத்தில் யாழ் முழவு போன்ற இசைக்கருவிகளுடன் நடனம் ஆடும் மகளிர் "கொண்டி மகளிர்" எனப்பட்டனர் [1] பெற்றோர் சொல்லுக்கும் ஊருக்கும் கட்டுப்படாமல் மனம் போன போக்கில் திரியும் பெண்ணை இக்காலத்திலும் கொண்டிப்பெண் என்பர். தற்காலத்திலும் கிராமங்களில் குறும்பு செய்யும் சிறுவர்களை கொண்டிப்பய என விளிக்கும் வழக்கம் உள்ளது.

கொண்டி மகளிர் (சங்ககாலம்)

அரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் திமிர் பிடித்தவரை, வெற்றி கண்ட அரசன் அவர்கள் மகளிரை சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர்.

கொண்டி மகளிர்

கொண்டி மகளிரும் இத்தகையவர்களே. இவர்களை அடங்காப் பிடாரிப் பெண்கள் எனலாம். இவர்கள் ஊரின் கட்டுக் காவலுக்கு அடங்காதவர்கள்.

மதுரைக்காஞ்சி

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணித்துக் கொண்டுவரப்பட்டு மதுரையில் வாழ்ந்த கொண்டி மகளிர் பசும்பொன் அணிகலன்கள் அணிந்து பகட்டிக் கொண்டு திரிவர் என்றும், இவர்களைக் கண்டால் மக்கள் நெஞ்சே நடுங்குவர் என்றும், வானவ மகளிர் போல யாழ், முழவு இசைகளுக்கு ஏற்ப மன்றில் ஆடுவர் என்றும், குளித்து மினுக்கிக்கொண்டு அவரவர் மனைகளில் பொய்தல் ஆடுவர் என்றும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. [2]

பட்டினப்பாலை

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டி மகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது. [3] [4]

கொண்டி மள்ளர்

கொண்டி என்பது கட்டுக்கடங்காப் போராற்றல். மள்ளர் எனப்பட்ட போர் வீரர்களில் பலர் இத்தகைய கொண்டி மள்ளர்களாக விளங்கினர். கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் தன் போர் வெற்றிக்குப் பின்னர் கொண்டி மள்ளர்களுக்குப் போர்யானைகளைப் பரிசாக வழங்கினான். [5]

உசாத்துணைகள்

  • கொண்டி மள்ளர் - பதிற்றுப்பத்து 43
  • கொண்டி மகளிர் - மது. 583, பட். 246

மேற்கோள்

  1.    
    வானவ மகளிர் மான, கண்டோர்
    நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
    யாம நல் யாழ் நாப்பண் நின்ற
    முழவின் மகிழ்ந்தனர் ஆடி - புறநானூறு 78

  2. வானவ மகளிர் மான, கண்டோர்
    நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
    யாம நல் யாழ் நாப்பண் நின்ற
    முழவின் மகிழ்ந்தனர் ஆடி -மதுரைக் காஞ்சி

  3. கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
    அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
    மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
    வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில், - பட்டினப்பாலை

  4. தொல் கொண்டி, துவன்று இருக்கை
    பல் ஆயமொடு பதி பழகி,
    வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
    சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
    மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
    புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும், - பட்டினப்பாலை

  5. கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக 25 - பதிற்றுப்பத்து 43
"https://tamilar.wiki/index.php?title=கொண்டி&oldid=19864" இருந்து மீள்விக்கப்பட்டது