கே. வி. எஸ். வாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. வி. எஸ். வாஸ்
கே. வி. எஸ். வாஸ்.jpg
முழுப்பெயர் வேதாந்தம்
சீனிவாச ஐயங்கார்
பிறப்பு 1912
பிறந்த இடம் கும்பகோணம்,
தமிழ்நாடு
மறைவு 30-08-1988
மற்ற பெயர்கள் ரஜனி, வால்மீகி
அறியப்படுவது எழுத்தாளர்,
பத்திரிகையாளர்
கல்வி முதுமாணி
(பொருளாதாரம்)
பணி பத்திரிகை ஆசிரியர்
வாழ்க்கைத் வேதவல்லி
துணை

கே. வி. எஸ். வாஸ் (1912 – ஆகத்து 30, 1988) இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளராக, எழுத்தாளராக விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ்நாடு, கும்பகோணத்தில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 15 வயதிலேயே இவரது கத்திச் சங்கம் என்ற சிறுகதை சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பாப்புலர் மேகசீன் (Popular Magazine) என்ற இதழையும் நடத்தினார்.[1] சுதேசமித்திரன் வார இதழில் இவர் எழுதிய 'கரும்பூதம் அல்லது கள்வனைக் காதலித்த காரிகை' என்னும் தொடர்கதை 1937 ஏப்ரல் 18 முதல் வெளிவந்தது.[2] கண்டி அரசி டோனா கத்தரீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கண்டியரசி என்ற வரலாற்றுப் புதினத்தை 1940 இல் எழுதி வெளியிட்டார்.[3]

இலங்கை வருகை

1930 ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து 1942 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார். அவரது அயராத உழைப்பினாலும் எழுத்துத் திறமையினாலும் வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் 1953 ஆம் ஆண்டில் பிரதம ஆசிரியராகப் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், மற்றும் சமூகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார்.

எழுத்தாளராக

வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற பல துப்பறியும் புதினத் தொடர்களை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பல ஆன்மீகக் கதைகளும் எழுதினார். இவரது தொடர்கதைகள் பல அக்காலத்திலே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. ஈழத்தின் கதை என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இத்தொடரை 2008 ஆம் ஆண்டில் அவரது மகன் கே. வி. எஸ். மோகன் (கதம்பம் மோகன்) நூலாக வெளியிட்டார்.

சென்னை த இந்து பத்திரிகைக்கும் மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கும் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார். கல்கி வார இதழில் இலங்கைக் கடிதம் என்ற தலைப்பில் வாராந்தம் இலங்கைச் செய்திகளை வெளியிட்டார்.[4]

1975 ஆம் ஆண்டில் வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார். இவரது மனைவியின் பெயர் வேதவல்லி. இவர்களுக்கு 3 பிள்ளைகள். மகன் கே. வி. எஸ். மோகன் 'கதம்பம்' என்ற மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்

  1. அன்னலட்சுமி ராஜதுரை, புகழ்பூத்த பத்திரிகாசிரியராகவும் நாவலாசிரியராகவும் மிளிர்ந்த கே. வி. எஸ். வாஸ், வீரகேசரி, ஆகத்து 6, 2012
  2. சுதேசமித்திரன் வாரப்பதிப்பு, ஏப்ரல் 18, 1937, பக். 2
  3. சந்திரோதயம், 5 சூன் 1940, பக். 60, சென்னை
  4. 4.0 4.1 மோகன், கதம்பம் (18 நவம்பர் 2012). "இன்றைய ஈழத்து பிரபல எழுத்தாளர்களின் முதல் ஆக்கத்திற்கு களம் தந்தது கதம்பமே". தினகரன். Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2012.
"https://tamilar.wiki/index.php?title=கே._வி._எஸ்._வாஸ்&oldid=2578" இருந்து மீள்விக்கப்பட்டது