கே. ஆர். சோமசுந்தரம்
கூட்டுறவுக் காவலர் | |
தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் மலேசியா நிர்வாகத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1973 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோமசுந்தரம் இரத்தினசாமி பிள்ளை 30 மார்ச் 1930 தெலுக் இந்தான் பேராக் மலேசியா |
தேசியம் | மலேசியர் |
துணைவர் | லோகநாயகி சோமசுந்தரம் |
உறவுகள் | துணைவியார் |
பிள்ளைகள் | டத்தோ டாக்டர் கிளி காந்திராஜ் (1955) கீதாரஞ்சனி ஜெயக்குமார் (1957) காஞ்சனாதேவி தர்ஷன் (1959) கிளி ஆனந்தராஜ் (1960) கற்பனாதேவி (1963) கிளி ரத்தினராஜ் (1966) |
வாழிடம்(s) | கோலாலம்பூர், மலேசியா |
முன்னாள் கல்லூரி | நியூ காசல் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா 2000 |
வேலை | தமிழ்மொழி ஆர்வலர் |
தொழில் | மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அறங்காவலர் |
மந்திரி சபை | மலேசிய மேலவை உறுப்பினர் மலேசியாவின் ஐ.நா. பிரதிநிதி மலேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தவர் |
உடைமைத்திரட்டு | மலேசிய ஏயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்பு - வாரிய உறுப்பினர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | http://tansrisomas.blogspot.com/ |
டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் (பிறப்பு: மார்ச் 30, 1930) மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்;[1] இந்தியாவின் விடுதலைக்காக மலாயாவில் இருந்து போராடியவர்; நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தலைமை அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றியவர்.
மலேசியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று, சுதந்திரப் பிரகடனத்தைப் படித்த முதல் தமிழர்; ஐக்கிய நாட்டுச் சபையில் மலேசியாவைப் பிரதிநிதித்த மூத்த தமிழர்; மலேசியாவில் தமிழ்க்கலை, பண்பாடு, மொழி, இலக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாகப் பங்காற்றி வரும் ஒரு தமிழ் ஆர்வலர்.
வரலாறு
இரத்தினசாமி பிள்ளை
கே.ஆர். சோமசுந்தரத்தின் தந்தையாரின் பெயர் இரத்தினசாமி பிள்ளை. தாயாரின் பெயர் அன்னக்கிளி. இரத்தினசாமி பிள்ளை 1902-ஆம் ஆண்டு தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவிலூரில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது மலாயாவுக்கு வந்தார். மலாயாவில் இருந்த பிரித்தானியர்களிடம் உதவியாளராக வேலை செய்தார்.
இரத்தினசாமி பிள்ளைக்கு 19 வயதாகும் போது, பேராக் மாநிலத்தில் தெலுக் இந்தான் நகருக்கு அருகில் இருக்கும் நோவா ஸ்கோஷியா எனும் தோட்டத்தில், தலைமைக் கங்காணியாக இருந்த ஆறுமுகம் என்பவரின் இளையமகள் அன்னக்கிளி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் 1921-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். முதலில் பிறந்த பெண் குழந்தையும், அடுத்துப் பிறந்த பெண் குழந்தையும் இறந்துவிட்டனர். மூன்றாவதாக 1927-ஆம் ஆண்டு சொக்கலிங்கம் என்பவர் பிறந்தார். அவருக்குப் பின் நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தையும் இறந்துவிட்டது. ஐந்தாவதாக 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் நாள் பிறந்தவர் கே.ஆர். சோமசுந்தரம். இரத்தினசாமி பிள்ளை தமது தாயார் சுந்தரம்பாள் அம்மையார் நினைவாகத் தமது இளைய மகனுக்குச் சோமசுந்தரம் என்று பெயர் வைத்தார்.
திருக்கோவிலூர் பயணம்
1932-ஆம் ஆண்டு இரத்தினசாமி பிள்ளை தன் மனைவி பிள்ளைகளுடன், தன் சொந்த ஊரான திருக்கோவிலூருக்குத் திரும்பிச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய குடும்பத்தை தமிழகத்திலேயே விட்டுவிட்டு மலாயா திரும்பினார். மலாயாவில் வேலை செய்து வந்த இரத்தினசாமி பிள்ளை பணமும் பொருள்களையும் குடும்பத்தாருக்கு அனுப்பி வந்தார்.
சொக்கலிங்கமும், சோமசுந்தரமும் கீழையூரில் உள்ள தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து தங்களது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்கள். அப்போது கே.ஆர். சோமசுந்தரத்திற்கு வயது நான்கு. இந்தச் சூழ்நிலையில் அன்னக்கிளி அம்மையாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஓர் ஆண்டிற்குப் பின் அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. 1935-ஆம் ஆண்டு அன்னக்கிளி அம்மையார் இறந்தார்.
மலாயாவுக்குத் திரும்புதல்
மலாயாவில் இருந்த இரத்தினசாமி பிள்ளை தன் மனைவி இறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தார். அப்போதைய காலத்தில் மலாயாவில் இருந்து தமிழகம் செல்ல குறைந்தது ஏழு அல்லது எட்டு நாள்கள் பிடிக்கும். செய்தி அறிந்தவுடன் வேலை செய்யும் நிறுவனத்தில் மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு இரத்தினசாமி பிள்ளை திருக்கோவிலூக்குச் சென்றார்.
ஈமச் சடங்குகளைச் செய்து முடித்து விட்டு, மீண்டும் மலாயா திரும்ப எண்ணினார். ஆனால், உறவினர்கள் அவருக்கு கிளியம்மாள் எனும் பெண்ணை மறுமணம் செய்து வைத்தனர். தன் இரண்டாம் மனைவி, கே.ஆர். சோமசுந்தரம் ஆகியோருடன் மலாயாவிற்குப் புறப்பட்டார். மூத்தமகன் சொக்கலிங்கம் செல்லவில்லை.
சுங்கை துக்காங் தோட்டம்
மலாயாவுக்குத் திரும்பிய கே.ஆர். சோமசுந்தரம், நிபோங் திபாலுக்கு அருகில் இருக்கும் கிரியான் தோட்டத்தில் வசிக்கத் தொடங்கினார். 1936-ஆம் ஆண்டு அங்கு இருந்த ஆங்கிலோ சீனப் பள்ளியில், முதல் வகுப்பில் சேர்ந்தார். இப்போது அந்தப் பள்ளி மெதடிஸ்ட் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மாலையில் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து தமிழ்மொழியைக் கற்றார். மூன்றாம் வகுப்பு வரை பள்ளியின் உபகாரச் சம்பளம் பெற்று படித்து வந்தார். தன் ஆசிரியர்களான துரைசாமி, இரத்தினம் போன்றவர்களின் பாராட்டுகளைப் பெற்றார். சாரணர் சிறுவர்கள் பிரிவில் இணைந்து பயிற்சியும் பெற்றார்.
பின்னர், அவருடைய தந்தை சுங்கை பட்டாணியில் உள்ள சுங்கை துக்காங் தோட்டத்திற்கு மாறிச் சென்றார். அதனால், கே.ஆர். சோமசுந்தரமும், அவருடைய அண்ணன் சொக்கலிங்கமும் நிபோங் திபாலில் இருந்த பூக்கடை காளியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்தனர். தாயார் மறைந்த பிறகு தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாது தமது தந்தையுடனும் இல்லாமல் வேறு ஒருவர் வீட்டில் தங்கி வாழும் வாழ்க்கை சோமசுந்தரத்தை, அந்தச் சிறு வயதிலேயே பெரிதும் பாதித்தது.
மேற்கோள்கள்
- ↑ "Y.Bhg. Tansri Dato Dr. K.R.Somasundram PSM., DPMS., AMN., JP., Ed.D." Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-06.
உசாத்துணை
- Villaalan, T.K.S (2010). Tan Sri Soma Valzhkai Varalaru. Wangsa Maju, Setapak, Kualal Lumpur: Percetakan KM. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-41426-8-1.