கே. ஆர். கல்யாணராமன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கே. ஆர். கல்யாணராமன் |
---|---|
பிறப்புபெயர் | கே. ஆர். கல்யாணராமன் |
பிறந்ததிகதி | 1 சூலை 1919 |
இறப்பு | ஏப்ரல் 4, 2001 | (அகவை 81)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
துணைவர் | சங்கரி |
பிள்ளைகள் | மார்க்கபந்து |
மகரம் என்ற புனைபெயரில் எழுதிய கே. ஆர். கல்யாணராமன் (சூலை 1, 1919 – ஏப்ரல் 4, 2001) தமிழக எழுத்தாளரும், தொகுப்பாசிரியரும் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
கல்யாணராமன் 1944 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். க. ரா என்ற புனைபெயரில் 1944 கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவருக்கு கல்யாணராமனின் பிறந்த இராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டி அப்பெயரிலேயே எழுத வேண்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.[2]
இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும்[1], இலங்கை தினகரன் பத்திரிகையிலும்[3] வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்சு நிறுவனம் வெளியிட்டது. இவரது படைப்புகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன.[1] புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார்.
மலேசியா,[1] சிங்கப்பூர்,[1] இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றியுள்ளார்.[4]
மறைவு
கேட்டவரம்பாளையத்தில் ஒரு பஜனை நிகழ்ச்சிக்காகச் செல்லும் வழியில், மதுராந்தகம் அருகே பயணம் செய்த பேருந்திலேயே 2001 ஏப்ரல் 4 அன்று தனது 81-வது அகவையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 நட்புடன் வாழ்ந்த மகரம், திருப்பூர் கிருஷ்ணன், தினமணி, 26-09-2012
- ↑ பூவை எஸ். ஆறுமுகம் (பெப். 1967). புனைபெயரும் முதல் கதையும். மீனாட்சி புத்தக நிலையம். பக். 12. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/36.
- ↑ சமூகத்தொண்டன், 1961 ஆண்டு மலர், யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத் திங்கள் இதழ்
- ↑ கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 16, 1958