குமுதா ராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமுதா ராமன்
Kumutha Raman
பிறப்புமே 19, 1979 (1979-05-19) (அகவை 45)
ஜொகூர் ஜெயா, ஜொகூர்
இறப்பு13 சூலை 2021
புத்ராஜெயா மருத்துவமனை; புத்ராஜெயா
தேசியம் மலேசியா
குடியுரிமைமலேசியர்
கல்விநார்த்தம்பிரியா பல்கலைக்கழகம், நியூகாசல், இங்கிலாந்து
(University of Northumbria Newcastle)
பணிவழக்கறிஞர்; வங்கி அதிகாரி; முன்னாள் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரின் சிறப்பு அதிகாரி.
செயற்பாட்டுக்
காலம்
2008 - 2018
அறியப்படுவதுமலேசிய இசுலாமிய கட்சிக்கான முதல் முசுலீம் அல்லாத வேட்பாளர்
ஜொகூர் திராம் சட்டமன்றத் தொகுதி

குமுதா ராமன் (ஆங்கிலம்: Kumutha Raman; மலாய்: Kumutha a/p Raman; சீனம்: 库穆塔拉曼) (பிறப்பு: 19 மே 1979; இறப்பு: 13 சூலை 2021) என்பவர் மலேசிய இசுலாமிய கட்சிக்கான முதல் முசுலீம் அல்லாத சட்டமன்ற வேட்பாளர்; மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சில் சிறப்பு அதிகாரியாக (Special Officer of the Deputy Minister of Women, Family and Community Development) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி; வழக்கறிஞர் ஆகும்.[1]

மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றத்தின் உறுப்பினர்; ஜொகூர் மாநில மன்றத்தின் மகளிர் பிரிவின் தலைவி. அத்துடன் ஒரு மலேசிய இசுலாமிய கட்சியின் சார்பில் மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் முசுலீம் அல்லாதவர் எனும் சிறப்பும் இவரிடம் உள்ளது.

மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய இந்தத் தமிழ்ப் பெண்மணி, 2021 சூலை 13-ஆம் தேதி, கோவிட் 19 தொற்று காரணமாக புத்ராஜெயா மருத்துவமனையில், தம் 43-ஆவது வயதில் காலமானார்.

பொது

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆகிய இரு தேர்தல்களில் ஜொகூர் திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போதைய கிளாந்தான் மந்திரி பெசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அவர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று திராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.[2]

இசுலாமிய கட்சியில் இந்துப் பெண்மணி

மலேசிய இசுலாமிய கட்சியின் சட்டவிதி முறை அமைப்பின் அடிப்படையில், அந்தக் கட்சி முசுலீம்களை மட்டுமே அதன் உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் மன்றம் அமைக்கப்பட்டது என்பது அந்தக் கட்சி முசுலீம் அல்லாதவர்களுக்கும் தன் வாசலைத் திறந்து விடுவதற்கான ஒரு சிறிய மறுமலர்ச்சியாக கருதப்பட்டது.

குமுதா ராமன் ஓர் இந்துப் பெண்மணி. மலேசிய இசுலாமிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதல் முசுலீம் அல்லாதவர். மலேசிய அரசியல் வரலாற்றில் அது ஒரு புதுமை நிகழ்வாக இருந்தது. இருப்பினும், மலேசிய இசுலாமிய கட்சியின் சட்ட அமைப்பு; முசுலீம் அல்லாதவர்களை அதன் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை.[3]

முசுலீம் கட்சியில் புதிய அரசியல்

அதன் காரணமாக குமுதா ராமன், மக்கள் நீதிக் கட்சியின் (Parti Keadilan Rakyat) (PKR) சீட்டு (Ticket) மூலமாகப் போட்டியிட்டார். இந்த அனுமதி பிகேஆர் கூட்டணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் கிடைக்கப் பெற்றது.

அப்போது மலேசிய இசுலாமிய கட்சி; பிகேஆர் கூட்டணியின் (Pakatan Rakyat Coalition) ஓர் அங்கமாக இருந்தது. அந்த வகையில் குமுதா ராமன் ஒரு முசுலீம் கட்சியில் ஒரு புதிய அரசியலுக்கு வழி வகுத்துக் கொடுத்தார் என்றும் சொல்லப் படுகிறது.[4]

தேர்தல்

2008-ஆம் ஆண்டு தேர்தல் குமுதாவின் முதல் தேர்தல். பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்டார். அம்னோ வேட்பாளர் மாவ்லிசான் பூஜாங் (Maulizan Bujang) (BN-UMNO) என்பவரிடம் 8,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர் மன்ற மகளிர் பிரிவுத் தலைவி எனும் தகுதியில் ஜொகூர் திராம் தொகுதியில் போட்டியிட்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குமுதாவுக்கு 2,605 வாக்குகள்; பாரிசான் நேசனல், ம.சீ.ச கட்சியைச் சேர்ந்த தான் செர் புக் (Tan Cher Puk) என்பவருக்கு 16,777 வாக்குகள்; பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின், ஜசெகவைச் சேர்ந்த லியோவ் சாய் துங் (Liow Cai Tung) என்பவருக்கு 32,342 வாக்குகள் கிடைத்தன.

தனிப்பட்ட வாழ்க்கை

குமுதா இராமன், 1979 மே 19-ஆம் தேதி பிறந்தவர். ஜொகூர் மாநிலத்தின் தலைநகர் ஜொகூர் பாரு புறநகர்ப் பகுதியான ஜொகூர் ஜெயாவில் வளர்ந்தவர். ஜொகூர் ஜெயா (Sekolah Menengah Taman Johor Jaya 1) உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் படித்தார். பின்னர் சுல்தான் இப்ராகிம் பெண்கள் பள்ளியில் (Sultan Ibrahim Girls School) ஆறாம் படிவம் படித்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்து, நியூகாசல் நகரில் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் (University of Northumbria Newcastle) சட்டம் பயின்றார். பின்னர் மலேசியாவுக்குத் திரும்பி ஒரு வங்கியில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். சமூகப் பொது அமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகள் செய்து வந்தார்.

மகளிர் அணியின் தலைவி

மலேசியாவின் முன்னாள் மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணை அமைச்சர் (Ministry of Women, Family and Community Development) சித்தி சைலா யூசோப் அவர்களின் சிறப்பு அதிகாரியாகச் சேவை செய்தவர். அத்துடன் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர் மன்ற மகளிர் அணியின் தலைவியாகவும் பொறுப்பு வகித்தார்.[5]

மலேசிய இசுலாமிய கட்சியைப் பிரதிநிதித்தாலும் அனைத்து மலேசிய மக்களுக்கும் நல் சேவைகளைச் செய்து வந்தார். தமிழ், மலாய் மொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நன்றாகச் சொற்பொழிவு ஆற்றக் கூடியவர்.

புத்ராஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

2021 சூலை மாதத் தொடக்கத்தில் அவருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புத்ராஜெயா மருத்துவமனையின் (Putrajaya Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் சிகிச்சைகள் பயன் அளிக்காத நிலையில் அவர் உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 43.[6][7]

குமுதா ராமன், ஓர் இசுலாமியச் சமயக் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும்; அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றாலும்; அவர் மதங்களைத் தாண்டி நின்று, ஒரே மலேசியா (One Malaysia) எனும் மலேசியக் கொள்கையில் திடமாய்ப் பயணித்தார் என புகழப் படுகின்றார்.

மேற்கோள்

  1. "Kumutha Rahman is a Malaysian politician who is a member of the PAS Supporters Club, a club started by PAS for non-Muslim supporters". PRU @ Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  2. "In 2008, PAS fielded non-Muslim candidate Kumutha Rahman who is also from the PAS Supporters Club but under the PKR ticket". Malaysiakini. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  3. BENJAMIN, NELSON. "PAS Supporters Congress chief Hu Pang Chaw and its women's wing chief R. Kumutha Raman are the two non-Malays contesting under the PAS banner in Johor". The Star (in English). பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. Lim (林川興), Idham (13 April 2013). "In 2008, PAS fielded non-Muslim candidate Kumutha Rahman who is also from the PAS Supporters Club but under the PKR ticket". பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  5. "Special officer to Deputy Minister dies from Covid-19 complications". New Straits Times. 13 July 2021. https://www.nst.com.my/news/nation/2021/07/708034/special-officer-deputy-minister-dies-covid-19-complications. 
  6. "PAS supporters club women's wing chief Kumutha passes away due to Covid-19". The Star (Malaysia). 13 July 2021. https://www.thestar.com.my/news/nation/2021/07/13/pas-supporters-club-women039s-wing-chief-kumutha-passes-away-due-to-covid-19. 
  7. "Presiden PAS ucap takziah kepada keluarga mendiang Kumutha". Harakah. 13 July 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குமுதா_ராமன்&oldid=25016" இருந்து மீள்விக்கப்பட்டது