கீ. இராமலிங்கனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கீ. இராமலிங்கனார்
கீ. இராமலிங்கனார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கீ. இராமலிங்கனார்
பிறந்ததிகதி 1899
பிறந்தஇடம் கீழச்சேரி, சென்னை
இறப்பு 1986 (அகவை 86–87)
கல்வி பச்சையப்பன் கல்லூரி
அறியப்படுவது தமிழறிஞர்
பெற்றோர் இரத்தின முதலியார்,
பாக்கியத்தம்மாள்

கீ. இராமலிங்கனார் என அழைக்கப்படும் கீ. இராமலிங்கம் (1899 - 1986) என்பவர் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, தொண்டு செய்த அறிஞர் ஆவார். இதனால் இவர் ஆட்சிமொழிக் காவலர் என அழைக்கப்படுகிறார்.

பிறப்பும் கல்வியும்

இவர் சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரி என்னும் கிராமத்தில் இரத்தின முதலியார் பாக்கியத்தம்மாள் இணையருக்கு 1899 ஆம் ஆண்டு பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சீயோன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து, வெஸ்லி கல்லூரியில் பயின்றபோது திரு.வி.க., சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்றார். பின் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

தொழில்

படிப்புக்குப்பின் தமிழகத் தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தர், சார் பதிவாளர், நகரவை ஆணையர், கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தமிழ்ப் பணிகள்

இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தில் 1956 ஆம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஆட்சிச் சொற்கள் சில எனும் அரிய நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார். இராமலிங்கனார் 1958 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர், நாளுக்கு நாள் ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது. தமிழ் வளர்ச்சி இயக்கம் என்ற துறை உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன. சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் அறிஞர் இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1]

எழுதிய நூல்கள்

கீ. இராமலிங்கனார் 1930-இலிருந்து எழுதிய 17 நூல்கள்:[2]

  1. இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு குமரன் அச்சகம், காஞ்சிபுரம் - 1930
  2. வழிகாட்டும் வான்பொருள்” - இரெட்டியப்பட்டி அடிகளார் சங்கம், அருள் நகர், அரசூர் (அஞ்சல்)
  3. உண்மை நெறி விளக்கம்” - ஆராய்ச்சி உரை, தென் ஆர்க்காடு மாவட்டம் - 1936
  4. நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு - 1954
  5. திருவெம்ன்பாவை - விளக்கத் தெளிவுரை, தருமயாதீன வெளியீடு - 1955
  6. தமிழ் ஆட்சிச் சொற்கள் - ஆட்சிச் சொல் ஆக்கும் முறையை விளக்குவது. விசாலாட்சிப் பதிப்பகம், மதுரை - 1959.
  7. ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள், அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்களால் வெளியிடப்பெற்றது.; சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு - 1968.
  8. தமிழ் மண முறை - இலக்கிய மேற்கோளுடன் வெளியிட்டவர் இரா. முத்துக்குமாரசாமி, தமிழ் ஆட்சியர், வாலாசாபாத்து, செங்கற்பட்டு மாவட்டம். சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து கீ.இராமலிங்கனார் அவர்களால் 18-01-1973 -அன்று வாலாஜாபாத்தில் வெளியிடப்பட்டது.
  9. ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை, சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு - 1977.
  10. ”தமிழில் எழுதுவோம்” - தமிழில் ஆட்சி நடத்த ஊக்குவிப்பது. அமைச்சர் வீரப்பன் தலைமையில் வெளியிடப்பெற்றது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
  11. திருமுறைச் சமுதாயம்” - ஆராய்ச்சி நூல். மாம்பாக்கம், குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  12. ஐந்து நிலைகள்” - ஆராய்ச்சி நூல், மாம்பாக்கம் குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  13. Tamil Marriages, Modes of Performance and Significance, Translation of my talk in Tamil published by the Institute of Tradtional Culture, Madras University
  14. ஆட்சிச் சொல் அகராதி - பொது - செம்மை செய்தும், ஆக்கியும் பெருக்கியது. முதல் இரண்டு பதிப்புகள், 1958 - 1964, அரசினர் வெளியீடு. ஆ. “துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும் - துறைக்கு ஒரு சுவடியாக - அரசினர் வெளியீடு - 1958 - 1964.
  15. தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசு பணித்தவாறு மொழிபெயர்த்துத் தந்தது. - 1974.
  16. புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசு பணித்தவாறு மொழி பெயர்த்துத் தந்தது - 1975
  17. தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும், தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம், குமரன் அச்சகம், காஞ்சிபுரம்.

மேற்கோள்கள்

  1. பி. தயாளன் (24 மே 2016). "ஆட்சி மொழிக் காவலர்' கீ.இராமலிங்கனார்!". கீற்று. Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
  2. கீ.இராமலிங்கனார் (1986). என் வரலாறு. 8, கிழக்குப் பூங்காச் சாலை, செனாய்நகர், சென்னை - 600 030: தமிழ்மணம்.{{cite book}}: CS1 maint: location (link)
"https://tamilar.wiki/index.php?title=கீ._இராமலிங்கனார்&oldid=26044" இருந்து மீள்விக்கப்பட்டது