கார்க்கி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கார்க்கி என்பது 1970 களில் வெளியான முற்போக்கு தமிழ் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்தது. இது இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சியை ஆதரிக்கும் இலக்கிய ஏடாக விளங்கியது.

வரலாறு

கார்க்கி இதழின் ஆசிரியராக கவிஞர், ஓவியர், பொதுவுடமை சிந்தனையாளர் இளவேனில் இருந்தார்.[1] மார்க்சியக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை கார்க்கி வெளியிட்டது. முற்போக்கு எழுத்தாளர்களில் பலர் அவ்வப்போது எழுதியுள்ளனர். உலக இலக்கியப் பிரச்னைகளிலும் அக்கறை காட்டியது.

சோவியத் உருசிய எழுத்தாளர் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது, அது பலவிதமான சர்ச்சைகள் உருவாயின. 'பாஸ்டர்நாக்கும் நோபல் பரிசும்' சம்பந்தமான கட்டுரை ஒன்றை ‘கார்க்கி' பிரசுரித்தது. அதேபோல ஸோல்லெனிட்ஸின் என்ற உருசியப் படைப்பாளிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோதும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் பரவலாக நிலவின. ஸோல்ஸெனிட்ஸின் பற்றியும், அவருடைய படைப்பு, பாத்திரமும் குறித்தும் 'கார்க்கி' கட்டுரைகள் வெளியிட்டது.

‘இலக்கியம் பற்றிய லெனினியக் கொள்கை', 'எங்கள் சகாப்தத்தின் மகாகவி மயாகோவ்ஸ்கி', 'இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்', 'புரட்சிக் கவிஞன் பெட்டோபி' ( அங்கேரியக் கவிஞர்) இப்படி கனமான விஷயங்களைப் வெளியிடுவதில் 'கார்க்கி' ஆர்வம் காட்டியது.

முழுக்க முழுக்க வர்க்கத் தன்மையும் மார்க்சியப் பார்வையும் கொண்ட போக்குடன் சிரமங்களோடு இளவேனில் 'கார்க்கி' யை நடத்தினார். அடிக்கடி பத்திரிகை வராமலே போனது. நீண்ட ஒரு இடைக்காலத்துக்குப் பிறகு, 'கார்க்கி' யின் அளவைச் சுருக்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு தனி விஷயத்தைக் கொண்ட சிறு வெளியீடாகப் பிரசுரிக்க முனைந்தார். இதை 'கார்க்கியின் தொடர் வெளியீட்டியக்கம்' என்று அறிவித்தார்.

1981இல் மீண்டும் 'கார்க்கி' புதிய வடிவத்தோடும் புது வேகத்தோடும் தலைகாட்டியது. இலக்கியம், அரசியல் ஆகியவற்றுடன் திரைப்படம், நாடகம் ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த முனைந்தது. இத்தன்மையிலும் இது தொடர்ந்து வர இயலாது போயிற்று. பிறகும், கார்க்கி அவ்வப்போது வெளிவருவதும், சில இதழ்களோடு நின்று போவதும் ஒரு வழக்கமாகிவிட்டது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கார்க்கி_(இதழ்)&oldid=17655" இருந்து மீள்விக்கப்பட்டது