காரை சுந்தரம்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காரை சுந்தரம்பிள்ளை
காரை சுந்தரம்பிள்ளை.png
முழுப்பெயர் செல்லர்
சுந்தரம்பிள்ளை
பிறப்பு 20-05-1938
பிறந்த இடம் காரைநகர்,
யாழ்ப்பாணம்
மறைவு 21-09-2005
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர் செல்லர்,
தங்கம்

முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டம்பர் 21, 2005) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

தொழில்

1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே/மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

இவற்றைவிட திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.

எழுத்துத் துறையில்

புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.

எழுதிவெளியிட்ட நூல்கள்

கவிதை நூல்கள்
  • தேனாறு (1968) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • சங்கிலியம் (1970) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • தவம் (1971)
  • உறவும் துறவும் (1985)
  • பாதை மாறியபோது (1986)
  • காவேரி (1993)
ஆய்வு நூல்கள்
  • ஈழத்து இசை நாடக வரலாறு (1990) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • இந்து நாகரிகத்திற்கலை (1994) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • சிங்கள பாரம்பரிய அரங்கம் (1997)
  • வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
  • ஈழத்து மலையகக் கூத்துக்கள் (2006)- இறுதியாக எழுதிய நூல்
பிற நூல்கள்
  • பூதத்தம்பி நாடகம் (2000)
  • விவேக சிந்தாமணி - உரைநடை
  • நாடக தீபம் - தொகுத்தது
  • உளவியல் - பதிப்பித்தது
  • கல்வியியல் - பதிப்பித்தது
  • புள்ளிவிபரவியல் - பதிப்பித்தது

பெற்ற பரிசுகள்

  • பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும்
  • யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
  • அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
  • 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
  • தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு
  • யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும்
  • ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு
  • யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது

யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.

இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதாகும்.

மேடையேற்றிய முக்கிய நாடகங்கள்

  • சமூக நாடகங்கள்: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே
  • இதிகாச புராண நாடகங்கள்: பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தயமந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்
  • ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், மித்தா மாணிக்கமா, காமன் கூத்து
  • சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்

உசாத்துணை நூல்கள்

  • கவிஞர்காரை - நினைவு மலர்(2005)
  • மணி விழா மலர்(1998)
  • மற்றும் காரை அவர்களின் நூல்களின் அணிந்துரைகள்
"https://tamilar.wiki/index.php?title=காரை_சுந்தரம்பிள்ளை&oldid=2561" இருந்து மீள்விக்கப்பட்டது