காமஞ்சேர் குளத்தார்
காமஞ்சேர் குளத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் குறுந்தொகை 4 எண் கொண்ட பாடலாக உள்ளது. பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர்.
கண்ணைக் காமக் கண்ணீர் நிறைந்த குளமாக்கிக் காட்டிய புதுமையால் இவர் இப்பெயர் பெற்றார்.
பாடல்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
பாடல் தரும் செய்தி
கண் ஒரு குளம். அதில் காமக்கண்ணீர் நிறைந்திருக்கிறது. குளத்து நீர் குளுமையாக இருக்கும். அதன் நீர் பயிரை வளர்க்கும். கண்ணில் தேங்கும் காமக் கண்ணீரோ கண் குளத்துக் கரையாகிய இமையைத் தீய்த்துச் சுட்டெரிக்கும்.
இந்தக் கண்ணீரொடு வாழ்வதற்காகவே என் காதலர் எனக்கு அமைந்துள்ளார். ஆனால் அவருக்கு அந்தக் காமக்கண்ணீர்க் குளம் அமையவில்லை.
நெஞ்சே! நொந்து தொலைக!
நெஞ்சே! நொந்து தொலைக!
நெஞ்சே! நொந்து தொலைக!