கவைமகன்
கவைமகன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். இவர் தமது இயற்பெயரைப் பதிவு செய்யாமையான் இப்பாடலின் ஆற்றல் மிக்க தொடராகிய கவைமகன் என்ற தொடராலேயே இப்புலவர் அழைக்கப்படுகிறார். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 324 ஆகும்.
பாடல்
'கொடுந்தாள் முதலைக் கொல்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இன மீன் இருங்கழி நீந்தி நீ நின்
நலன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது
கவைமகன் நஞ்சு உண்டாஅங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே'
பாடல் தரும் செய்தி
- கவைமகன் = ஒரு நேரம் உள்ள புத்தி, மறு நேரம் இல்லாமல் நெஞ்சம் கவைக்கோல்(கவட்டைக் குச்சி) போல் பிளவு பட்டிருக்கும் பித்துப் பிடித்தவன்.
முதலை மேயும் வழியில் யாரும் செல்லமாட்டார்கள். நீயோ (ஆண் முதலை போல்) அந்த வழியில் வருகிறாய். அது உன் நல்ல காலம். அந்த எண்ணம் ஒருபக்கம். இவளோ விளைவை எண்ணிப் பார்க்காமல் உன்னோடு கூடி மகிழ்கிறாள். அது அவளது மடமை. இது மற்றொரு பக்கம். இரு வேறு நினைவுகளோடு நான் பித்துப் பிடித்தவள் போல இருக்கிறேன். இந்த நிலையில் நான் இவளை உனக்குத் தந்தால் அது பித்தன் நஞ்சை உண்பது போல் ஆகும் - இவ்வாறு தோழி தலைவனிடம் சொல்லி தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறாள்.
மேற்கோள்கள்
கவைமகன்