கற்கோவளம்
கற்கோவளம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°48′32″N 80°15′3″E / 9.80889°N 80.25083°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ செயலகம் | வடமராட்சி வடக்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (நேர வலயம்) |
கற்கோவளம் என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஓர் ஊராகும்.[1] இது வங்கக்கடலை கிழக்குப்புற எல்லையாகக் கொண்ட ஊராகும். இது பருத்தித்துறைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.[2] இவ்வூருக்கு அருகாமையில் தும்பளை, வராத்துப்பளை, புனிதநகர் ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.[2]
கற்கோவள மக்கள் கடற்றொழிலினை முக்கிய தொழிலாகக் கொண்டு தங்களுடைய வாழ்க்கைச் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றனர். இவ்வூரில் சிறீகும்பி முத்துமாரி அம்மன், கும்பி முருகன், வீரபத்திரர் போன்ற ஆலயங்கள் உள்ளன. இவ்வாலயங்களைக் களமாகக் கொண்டு கூத்துகள், இசைநாடகங்கள், கும்மி, கரகம், உடுக்கு, நடனம் எனப் பல்வேறுபட்ட கலைவடிவங்கள் இங்கு வளர்ச்சியடைந்து வருகின்றன.
பெயர்க் காரணம்
கடலுக்குள் கற்களைக் கொண்ட நீண்ட தரைமுனை யுள்ள ஊர் என்பதே கற்கோவளம் எனப்பட்டது என பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிடுகிறார்.[2]
கற்கோவள மக்களின் மரபுக்கலைகள்
கிராமிய வழிபாட்டு முறைகள் உள்ள பல ஆலயங்கள் கற்கோவளத்தில் உண்டு. தொடக்கக் காலங்களில் கிராமிய வழிபாட்டு முறையிலிருந்து தற்பொழுது பூசகர்களால் பூசை செய்யப்பட்டு வந்தாலும் இவ்வாலயங்களில் பொங்குதல், வேள்வி செய்தல், உருவாடுதல் , மடைபரப்புதல், பஜனைசெய்தல் போன்றன நடைபெற்று வருகின்றன. சச்சியம்மன், முனியப்பர் போன்ற ஆலயங்களில் வருடாவருடம் மடை செய்யப்பட்டு வருகின்றது. இம்மடையின்பொழுது கள்ளு, சாராயம், போன்ற குடிவகைகளும் இறைச்சி, மீன், முட்டை, பழங்கள் போன்ற உணவுவகைகளும் படைக்கப்படுவதோடு ஆண்களும் பெண்களும் உருவாடி குடிவகைகள், உணவு வகைகளைத் தாமும் உண்டு பிறருக்கும் கொடுப்பார்கள். கும்மியடித்தல், உடுக்கடித்தல் போன்ற சந்தர்ப்பங்களிலும் உருவாடி கட்டுச்சொல்லுகின்ற வழமையும் உண்டு.
கற்கோவளத்து மக்களால் அறிக்கை செய்யப்படுகின்ற கலைவடிவங்களாக கும்மி, கரகம், உடுக்கு, கூத்து, இசைநாடகம் போன்ற கலைகள் காணப்படுகின்றன. கும்மியடிப்பதன் மூலம் அம்மனை மகிழ்விக்கலாம் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடையே காணப்படுகின்றது. இவர்களுடைய குலதெய்வமாக விளங்குகின்ற கும்பிமணல் முத்துமாரியம்மன் கோவிலில் கும்மியடித்தலும், கும்மியடித்து முடிந்தபின்பு பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடித்து மகிழ்வதும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து நடைபெற்றுவருகின்றது. தொன்றுதொட்டு கும்மியடிப்பதில் சிறுவர்கள் முதல் வயதுமுதிர்ந்த பெண்கள் வரை ஊரிலேயுள்ள அனைவரும் கலந்து கொள்ளுவார்கள். கும்பி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமிக்கு முதல் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவின் பொழுதும் தொடர்ந்து ஒன்பது நாட்கள் கும்மியடிப்பார்கள்.
இங்குள்ள ஆலயங்கள்
- கும்பிமணல் பதியுறை முத்துமாரியம்மன் கோவில்
- கற்கோவளம் பேச்சியம்மன் ஆலயம்
- கற்கோவளம் புனித செபஸ்தியார் ஆலயம்
இங்குள்ள பாடசாலைகள்
- கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை
காட்சியகம்
மேற்கோள்கள்
- ↑ சன்னிதிச் செல்வம், வல்வை ந. அனந்தராஜ்
- ↑ 2.0 2.1 2.2 கற்கோவளம் கிராமம் கும்மியடித்தல் கலை பயில் நிலையில் உள்ள கிராமம் பற்றிய அறிமுகம், பா.இரகுவரன், ஜீவநதி திசம்பர் 2020