கரு. அழ. குணசேகரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
முனைவர் கரு. அழ. குணசேகரன் |
---|---|
பிறந்ததிகதி | 12 மே 1955 |
பிறந்தஇடம் | மாரந்தை, பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 17 சனவரி 2016 | (அகவை 60)
குடியுரிமை | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கே. ஏ. குணசேகரன் என அழைக்கப்படும் கரு. அழ. குணசேகரன் (12 மே 1955 - 17 சனவரி 2016) தமிழக எழுத்தாளர். இவர் இலக்கிய ஆர்வலரும், நாட்டுப்புறவியல் நாடகவியல், தலித்தியம் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்கவரும், பாடகரும், திரைப்படக் கலைஞருமாவார். புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்த்துக்கலைப் பள்ளியின் (நாடகத்துறை) தலைவராக இருந்தவர்.
வாழ்வும்,கல்வியும்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ(தமிழ் இலக்கியம்) முனைவர் பட்ட ஆய்வு(நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து), 1978 இல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களிடம் நாடகப் பயிற்சி பெற்றார்.
பணிகள்
நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தைப் படைத்துள்ளார். 'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாகச் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார்.
எழுதிய நூல்கள்
- பதிற்றுப்பத்து[1]
- சி.வை.தாமோதரம் பிள்ளை [2]
- கரகாட்டம்
- பலி ஆடுகள்
- நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
- நாட்டுப்புற நிகழ்கலைகள்
- பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு [3]
- நாட்டுப்புற மண்ணும் மக்களும்[4]
- தமிழகப் பழங்குடி மக்கள்
- இசை நாடக மரபு
- நாட்டுப்புற இசைக்கலை
- பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்
- தலித் அரங்கியல்
- இசைமொழியும் இளையராஜாவும்
உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
விருதுகள்
- இவர் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது,
- நாடகத் துறைக்காகப் புதுவை அரசின் கலைமாமணி விருது,
- மதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994ஆம் ஆண்டு சதங்கை விருது[5]
- கனடா தமிழ் இலக்கியச் சங்க தலித் இசைக் குரிசில் பட்டம்
மறைவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குணசேகரன், உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 2016 சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.
- ↑ http://www.vijayapathippagam.com/index.php?option=com_virtuemart&view=category&virtuemart_category_id=475[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%85%E0%AE%B4.+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=2
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்61