கமலாலயன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கமலாலயன் KAMALALAYAN |
---|---|
பிறந்ததிகதி | 1955 ஆகத்து 4 |
பிறந்தஇடம் | தமிழ்நாடு, திண்டுக்கல் |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
பணியகம் | கருவியாக்குனர், களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்- வயது வந்தோர் கல்வித் திட்டம், குழந்தைத் தொழிலாளர் திட்டம், நமது கிராமம் திட்டம், சமச்சீர்க் கல்வி பாடநூல்கள், கையேடுகள் உருவாக்கப்பணி, முழு நேர சுதந்திர எழுத்தாளர் |
கல்வி நிலையம் | திண்டுக்கல் நேரு நினைவு உயர்நிலைப்பள்ளி,கருவி அச்சு அமைக்கும் பயிற்சி நிலையம், திண்டுக்கல். |
வகை | சிறுகதை,கட்டுரை, மொழி பெயர்ப்பு, பாடநூல்கள், வாழ்க்கை வரலாறு |
துணைவர் | ஜெயந்தி |
பிள்ளைகள் | பிரதிபா, பிரசன்ன குமார் |
கமலாலயன் (Kamalalayan) என்பவர் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் ஒரு முழுநேர எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
திண்டுக்கல் நகரில் 1955-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதி கமலாலயன் பிறந்தார். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். திண்டுக்கல் நேரு நினைவு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1971-ஆம் ஆண்டு அன்றைய பதினோராம் வகுப்பு வரை படித்தார். இதே நகரில் தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கருவி - அச்சு அமைக்கும் பயிற்சி நிலையத்தில் மூன்றாண்டு கால கருவியாக்குனர் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார்.
சென்னை, வேலூர் நகரத் தொழிற்சாலைகளில் 1975 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை கருவியாக்குனராகப் பணியாற்றினார். பின்னர் ‘அறிவொளி இயக்கம் என அழைக்கப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் ஒன்றிய, மைய மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இதே காலகட்டத்தில், கடைசி நான்காண்டு காலம் ’நமது கிராமம்’ திட்டத்தின் மாநிலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகவும் பணி செய்தார். திருவள்ளூர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் இயக்குனராக இரண்டு ஆண்டு காலம் பணியாற்றினார். சென்னை சங்கர் ஐ.ஏ.எசு. அகாடமியில் 2013-2016-ஆம் ஆண்டுகளில் ஒரு மொழிபெயர்ப்பாளராகப் பணி செய்தார். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் சமச்சீர்க்கல்வி, புதிய பாடநூல் உருவாக்கம் போன்ற பணிகளிலும் பங்களித்துள்ளார். அறிவியல் சார்ந்த சிறுநூல்கள் பலவற்றை பள்ளி நூலகப் பயன்பாட்டுக்காக உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டுத்திட்டம், மாநில பள்ளிசாராக் கல்விக் கருவூலம், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையம் ஆகிய அமைப்புகளுக்காகக் கையேடுகள், பயிற்சி நூல்கள் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளார். மாநில அளவில் சிறந்த களப்பணியாளர் என்பதற்கான ‘மால்கம் ஆதிசேஷய்யா விருது’ மாநில பள்ளிசாராக் கல்விக் கருவூலம் மூலம் இவருக்கு வழங்கப்பட்டது. நமது கிராமம் திட்டத்தின் சிறந்த மாநிலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
எழுத்துலக அறிமுகம்
1970-ஆம் ஆண்டு மத்தாப்பு என்ற சிறுவர் இதழில் வெளியான முதல் கதையின் மூலம் எழுத்துலகில் கமலாலயன் அறிமுகமானார். பார்வைகள்மாறும் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, சிவகங்கை அன்னம் பதிப்பக வெளியீடாக 1990- ஆம் ஆண்டு வெளி வந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுதிகள், நான்கு வாழ்க்கை வரலாற்று நூல்கள், 11 மொழி பெயர்ப்பு நூல்கள், இதழ் தொகுப்பு நூல் ஒன்று. ஆக மொத்தம் இருபத்திரண்டு நூல்கள் இதுவரை பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.
கல்கி, குங்குமம், இதயம் பேசுகிறது, தினமணி கதிர், சுபமங்களா, தீபம், கணையாழி, புதியபார்வை, செம்மலர், புதியபுத்தகம் பேசுது, உங்கள்நூலகம்,[1] மேன்மை, இந்து தமிழ் திசை, இளைஞர் முழக்கம், சிகரம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் கமலாலயனின் ஏராளமான கதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ஒரு நூல் விமர்சகராகவும் கமலாலயன் பல்வேறு அரங்குகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
1. பார்வைகள் மாறும்-1990
2. தட்டுப்படாத காலடிகள் –2016
கட்டுரைத் தொகுப்புகள்
1. நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி –2005
2. நூலகங்களுக்குள் ஒரு பயணம்-2005
3. மானுட வீதி-2008
4. இசை நிறை வாழ்க்கை-2013
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
1. கோதாவரி பாருலேகர் சுயசரிதை-2008
2. அமெரிக்க கறுப்பினப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யூன்-2011
3. சக்கர நாற்காலியில் ஒரு பேரறிஞர் –சிடீபன் ஆகிங் –2013
4. நிலவோடு வான்முகில்- பின்னணிப்பாடகி ஏ.பி.கோமளாவின் வரலாறு -2018
மொழிபெயர்ப்ப்பு நூல்கள்
1. மார்க்சியமும்,கலாச்சாரப்பணியும் –நாராயண் சூர்வே -2005
2. புவிமுழுமைக்குமான நீதி –சே-கு-வேரா கட்டுரைகள் –2006
3. எதார்த்தத்தை வாசித்தாலும்,எழுதுதலும்- பாவ்லோ பிரையிரே-2012
4. மிச்சம் மீதி- முனைவர் ஆனந்த் பாண்டியன்,எம்.பி. மாரியப்பன் –2012
5. தமிழகத்தில் தேவதாசிகள்-கே.சதாசிவம் –2014
6. என்,ஜி,ஒ,க்களின் உண்மைச் சுயரூபம் –பி,ஜே.ஜேம்சு -2016
7. திரையகம்- முனைவர் ஆனந்த் பாண்டியன்-2017
8. சோமநாதர்-வரலாற்றின் பல குரல்கள்-ரொமிலா தாபர் –2017
9. மஹத்-முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்-ஆனந்த் டெல்டும்டே -2018
10. துணிவின் பாடகன் பாந்த்சிங்-நிருபமா ராவ்-2019
11. 'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் - வாழ்க்கைப் பயணம் -2020 [2]
இதழ்தொகுப்பு
1.சிகரம்-மாத இதழ் தொகுப்பு –2006