கந்தப்பன் செல்லத்தம்பி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கந்தப்பன் செல்லத்தம்பி
கந்தப்பன் செல்லத்தம்பி.jpg
முழுப்பெயர் கந்தப்பன்
செல்லத்தம்பி
பிறப்பு 27-03-1935
பிறந்த இடம் ஆரையம்பதி,
மட்டக்களப்பு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
நாடகம், கூத்து
பணி அரச பணி
பெற்றோர் கந்தப்பன்,
குறிஞ்சிப் பிள்ளை


கந்தப்பன் செல்லத்தம்பி (பிறப்பு: மார்ச் 27, 1935) இவர் ஆரையூர் இளவல் என்று அறியப்பட்ட ஒரு ஈழத்து மூத்த நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ‘செல்லத்தம்பி’ மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். இவரின் மனைவி தவமணிதேவி. இளஞ்திருமாறன், இளஞ்செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச்செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி இவரின் பிள்ளைகள்

தொழில்

தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.

கலைத்துறை

1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள், நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப்பயணம் தொடர்கின்றது. 1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்’ எனும் நாடகமே இவரின் கன்னிப்படைப்பாகும். இதிலிருந்து மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளன. க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்’ எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.

நாடகங்கள்

இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

  • புராதன நாடகங்கள்
  • இத்திகாச நாடகங்கள்
  • இலக்கிய நாடகங்கள்
  • வரலாற்று நாடகங்கள்
  • சமூக நாடகங்கள்

புராதன நாடகங்கள்

இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

  1. சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953),
  2. குழந்தைக் குமரன் (1960),
  3. கற்பனை கடந்த ஜோதி (1963),
  4. வினைதீர்க்கும் விநாயகன் (1968),
  5. பிட்டுக்கு மண் (1970),

இத்திகாச நாடகங்கள்

இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

  1. இராம இராச்சியம் (1948),
  2. இதய கீதம் (1950),
  3. நீறு பூத்த நெருப்பு (1972),
  4. மானம் காத்த மாவீரன் (1972),
  5. நெஞ்சிருக்கும் வரை (1973),
  6. பார்த்தசாரதி (1974),
  7. பிறப்பின் உயிர்ப்பு (1974),
  8. பிறை சூடிய பெருமான் (1975),
  9. தெய்வப் பிரசாதம் (1980)

இலக்கிய நாடகங்கள்

இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

  1. கலி கொண்ட காவலன் (1972),
  2. கொடை வள்ளல் குமணன் (1980),
  3. உண்மையே உயர்த்தும் (1981),
  4. உலகத்தை வென்றவர்கள் (1982)

வரலாற்று நாடகங்கள்

இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

  1. போர் புயல் (1966),
  2. இதுதான் முடிவா? (1967),
  3. சிங்களத்து சிங்காரி (1969),
  4. நிலவறையிலே… (1969),
  5. விதியின் சதியால் (1970),
  6. விதைத்ததை அறுப்பார்கள் (1970),
  7. திரைச் சுவர் (1973),
  8. கரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974),
  9. தர்மம் காத்த தலைவன் (1976),
  10. வெற்றித் திருமகன் (1976),
  11. பட்டத்தரசி (1977).

சமூக நாடகங்கள்

இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

  1. அம்மாமிர்தம் (1948)
  2. யாதும் ஊரே… (1948)
  3. உயிருக்கு உயிராய்.. (1948)
  4. நாலும் தெரிந்தவன் (1949)
  5. எல்லோரும் நல்லவரே! (1951)
  6. இதயக் கோயில் (1962)
  7. வாழ்ந்தது போதுமா? (1962)
  8. உன்னை உனக்கு தெரியுமா? (1963)
  9. படித்தவன் (1963)
  10. எல்லோரும் வாழ வேண்டும் (1963)
  11. தா… தெய்யத் தோம் (1964),
  12. சித்தமெல்லாம் சிவன் (1964),
  13. குதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964),
  14. கண்கள் செய்த குற்றம் (1965),
  15. மகா சக்தி (1965),
  16. கறி தின்னும் கறிகள் (1965)
  17. பார்த்தால் பசி தீரும் (1966)
  18. தாமரை பூக்காத் தடாகம் (1966)
  19. வேலிக்குப் போட்ட முள் (1966)
  20. பஞ்சாமிர்தம் (1967)
  21. அடுத்த வீட்டு அக்கா (1968)
  22. அது அப்படித்தான் - நகைச்சுவை (1968),
  23. ஆத்ம தரிசனம் (1968)
  24. குருவிக் கூடுகள் (1969)
  25. படைத்தவனைப் படைத்தவர்கள் (1970)
  26. வெற்றிலை மாலை (1970),
  27. மாமியார் வீடு (1970),
  28. பொழுது விடிஞ்சா தீபாவளி (1970),
  29. தேடிவந்த தெய்வங்கள் (1970),
  30. ஆறும் நாறும் (1971)
  31. பொழுதலைக் கேணி (1971)
  32. வேரில் பழுத்த பலாää (1973)
  33. அந்த ஒரு விநாடி? (1974)
  34. போடியார் வீட்டு பூவரசு (1974)
  35. நெருஞ்சிப் பூக்கள் (1975)
  36. குடும்பம் ஒரு கோயில் (1977)
  37. இருளில் இருந்து விளக்கு (1977)
  38. எல்லாம் உனக்காக (1978)
  39. கடன்படு திரவியங்கள் (1978)
  40. சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள் (1980)
  41. ஆனந்தக் கூத்தன் (1980)
  42. மனமே மாமருந்து (1980)
  43. மன்னிக்க வேண்டுகிறேன் (1981)
  44. சேவை செய்தாலே வாழலாம் (1981)
  45. தெய்வங்கள் வாழும் பூமி (1982)
  46. ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984)
  47. தொடரா முறிகள் (1985)
  48. கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம் (1986)
  49. நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992)
  50. நல்லவையே வல்லவை (1992)
  51. உன்னுள் ஒருவன் (1993)
  52. வேண்டாம்… வேண்டவே வேண்டாம் (1994)
  53. என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் (1995)
  54. இறைகாக்கும் (1995)
  55. பாடசாலையும் சமூகமும் (2007)

சின்னத்திரையில்

ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்’ (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980 சூன் 6 ஆம் நாள் மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென கருதப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் இவரே.

வானொலியில்

இவரின் ‘அலங்கார ரூபம்’ (தென்மோடி) 1971, ‘சுபத்திரா கல்யாணம்’ (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப்பியது.

இலக்கியத்துறை

நாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க பணியினைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்’ எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • ‘விபுலானந்தர் வாழ்கின்றார்.’
  • நீறு பூத்த நெருப்பு

மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என அறியமுடிகிறது.

  • ‘இறை காக்கும்’ (நாடகங்கள்) தொகுப்பு நூல்
  • ‘கோடு கச்சேரி’ (நாவல்)
  • ‘மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்’
  • ‘வாழ்ந்தது போதுமா?’ (சிறுகதைகள் தொகுப்பு)
  • ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்’ (வரலாறு)

பெற்ற கௌரவங்கள்

இவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளன. இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான ‘கலாபூசணம்’ விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கந்தப்பன்_செல்லத்தம்பி&oldid=2544" இருந்து மீள்விக்கப்பட்டது