கதப் பிள்ளையார்
கதப் பிள்ளையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் ஐந்து உள்ளன. இவை; குறுந்தொகை 64, 265, 350, நற்றிணை 135, புறநானூறு 380. இவை தரும் செய்திகள் இங்குத் தொகுத்துக் காட்டபடுகின்றன.
புறநானூறு 380
இந்தப் பாடலின் அடிகள் பல சிதைந்துள்ளன.
இந்தப் பாடலின் கொளுக் குறிப்பு 'நாஞ்சில் வள்ளுவனைப் பாடியது' என்று குறிப்பிடுகிறது. பாடலில் இவன் வல்வேல் கந்தன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவனைத் 'தென்னவன் வயமறவன்' என்று புலவர் குறிப்பிடுகிறார். இதனால் இவனைப் பாண்டியனின் படைத்தலைவன் என்று உணரமுடிகிறது.
இவன் தென்கடல் முத்தும், வடமலைச் சந்தனமும் அணிந்திருப்பானாம். இவனைக் கண்டதும் புலவரின் சுற்றத்தார் கவலையை மறந்து பூரித்துப் போனார்களாம்.
நாஞ்சில் நாட்டில் பலா அதிகம். இதன் கடற்பகுதியில் முத்துக் குளிப்பார்களாம். கடற்கரையில் குளவிப் பூவும், கூதளம்பூவும் கொழித்துக் கிடக்குமாம்.
அறிவியல்
'மிசைப் பெய்த நீர் கடற் பரந்து முத்தாகுந்து' என்னும் தொடரில் மழைநீர் கிளிஞ்சலில் நுழைந்து முத்தாகும் அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.
நற்றிணை 135
தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். தலைவி ஊருக்குத் தெரிந்துவிடுமே என அஞ்சுவதாகத் தோழி எண்ணுகிறாள். தலைவியிடம் சொல்வது போன்று தலைவனுக்குக் கேட்கும்படி சொல்கிறாள்.
அவர் கடலோரம் உள்ள இறுகிய மணலில் தேரில் வந்து நம்மோடு சிரித்து விளையாடுவதற்கு முன்னர் இந்த ஊர் மிகவும் இனியது. (இனி இவரோடு சிரித்தால் ஊர் தூற்றுமே)
குறுந்தொகை 64
தாய்ப்பசு வழி நெடுகச் சென்று மேய்ந்துவிட்டு வீடு திரும்பும்வரையில் அதன் கன்று ஏக்கத்தோடு தாய்ப்பசுவுக்காகக் காத்திருப்பதைப் போல பொருள் தேடச் சென்ற அவர் வரவுக்காக நாம் காத்திருக்கிறோம் - என்கிறாள் தலைவி. (இவர் திரும்புவார் என்பதில் உள்ள நம்பிக்கையைத் தலைவி தோழிக்குப் புலப்படுத்தும் பாடல் இது)
குறுந்தொகை 265
தலைவியைத் திருமணம் செய்துகொள்ளத்தான் தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான் என்கிறாள் தோழி, தலைவியிடம். (இவன் சான்றோன் எனவே விரைவில் திரும்புவான் என்பது கருத்து)
பண்பாடு
வண்டுகளுக்காக வாயைத் திறந்துகொண்டு காந்தள் மலர்ந்திருக்கும். அதுபோலச் சான்றோர் (இங்குத் தலைவன்) பிறருக்காகத் தன் கடமையைச் செய்யப் (பொருள் தேடிவரச்) சென்றிருக்கிறான் என்கிறாள் தோழி.
குறுந்தொகை 380
அரசனின் வெற்றி முழக்கம் போல வானம் இடித்து வானம் தெரியாமல் மழை பொழிந்ததால் ஈங்கைப் பூ பூத்துக் கொட்டுகிறது. அவர் வருவதற்கு முன்னர் அவர் சொன்ன பனிக்காலம் வந்துவிட்டதே - என்கிறாள் தோழி தலைவியிடம். (தலைவியின் கவலையைப் போக்கத் தோழி முந்திக்கொள்கிறாள்.)
செடியினம்
வண்ணங்கள் பல நிறைந்த ஈங்கை மலர் பனிக்காலத்தில் பூத்து உதிரும்.