கண்டி நாயக்கர்
கண்டி நாயக்கர் பரம்பரை නායක්කාර රාජවංශය | |
---|---|
அரச மரபு | |
கண்டி இராச்சியக் கொடி | |
நாடு | இலங்கை, இந்தியா |
நிறுவிய ஆண்டு | 1739 |
நிறுவனர் | சிரீ விசய இராசசிங்கன் |
இறுதி ஆட்சியர் | சிரீ விக்கிரம இராசசிங்கன் |
தற்போதைய தலைவர் | இராசா மோகன் பாபு |
கலைப்பு | 1815 இல் கண்டி ஒப்பந்தத்திற்கு இணங்க |
கண்டி நாயக்கர் என்போர் இலங்கையின் கண்டி அரசை ஆண்ட, தென்னிந்திய நாயக்கர் அரச மரபைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். இவர்கள் கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்தனர். இலங்கையின் கடைசி அரச மரபும் இதுவே. இவர்கள் தொடக்கத்தில் விசயநகரப் பேரரசின் கீழ் பாளையக்காரராக இருந்து பின்னர் சுதந்திர அரசமரபை உருவாக்கிய மதுரை நாயக்க மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கண்டிய அரசமரபினருடன் செய்துகொண்ட மணத்தொடர்புகளின் வழியாகவே இவர்களுக்குக் கண்டியரசின் அரசுரிமை கிடைத்தது. இம் மரபைச் சேர்ந்த நான்கு அரசர்கள் கண்டியை ஆண்டுள்ளனர். இவர்கள் இந்துக்களாக இருப்பினும் இலங்கையில் பௌத்தமதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.
மரபின் தோற்றம்
கண்டி நாயக்கர் மரபுக்கு முந்திய கண்டி அரச மரபினர் எப்போதுமே மதுரை நாயக்கர் அல்லது தஞ்சாவூர் நாயக்கர் மரபிலிருந்து பெண் கொண்டனர். கண்டி அரச மரபின் கடைசி அரசன் வாரிசு இல்லாமல் இறந்தபோது, மதுரை நாயக்கர் மரபைச் சேர்ந்த அரசியின் தம்பி மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டு அரசனாக்கப்பட்டான். அக்காலத்தில் வழக்கில் இருந்த மருமக்கதாயம் என்னும் முறையை ஒட்டியே இவ்வாறு செய்யப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசர்களும் இம் மரபில் இருந்தே வந்தனர்.
கண்டி நாயக்க மன்னர்கள்
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம். [1]
- சிரீ விசய இராசசிங்கன் (1739 - 1747)
- கீர்த்தி சிரீ இராசசிங்கன் (1747 - 1782)
- சிரீ இராசாதி இராசசிங்கன் (1782 - 1798)
- சிரீ விக்கிரம இராசசிங்கன் (1798 - 1815)
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
மூலங்கள்
- ஆங்கிலத்தில்
- Robert Binning, A Journal of Two Years' Travel in Persia, Ceylon, etc. Volume 1. (Wm. H. Allen & Co., 1857)
- Horace Hayman Wilson, The history of British India, from 1805 to 1835. (James Madden, 1858)