கங்கா நாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு திருமதி
கங்கா நாயர்
Ganga Nayar

மலேசிய சட்டமன்ற உறுப்பினர்
சிலாங்கூர் மாநிலத்தின் செரண்டா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1969–1974
மலாயா தொழிலாளர் கட்சி தோற்றுநர்
கட்சி உருவாக்கம்: 1978
தனிநபர் தகவல்
பிறப்பு (1923-08-03)3 ஆகத்து 1923
யாழ்ப்பாணம், சிலோன், (இப்போது இலங்கை)
இறப்பு 3 ஏப்ரல் 2009(2009-04-03) (அகவை 85)[1][2]
அரசியல் கட்சி மலாயா தொழிலாளர் கட்சி (1958-1972)
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) (1972-1974)
ஜனநாயக செயல் கட்சி (DAP) (1974-1978)
தேசிய நம்பிக்கை கட்சி (1978-2009)
வாழ்க்கை துணைவர்(கள்) சி.வி.நாயர்
பிள்ளைகள் 8
பணி அரசியல்வாதி

கங்கா நாயர் (ஆங்கிலம்: Ganga Nayar; மலாய்: Ganga Nayar; சீனம்: 恒河纳亚尔) (பிறப்பு: 3 ஆகத்து 1923; இறப்பு: 3 ஏப்ரல் 2009)[3] என்பவர் மலேசிய தொழிலாளர் கட்சியை நிறுவிய இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய அரசியல்வாதி ஆவார். மலேசியாவில் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.[4]

மலேசிய வரலாற்றில் மலேசிய மாநிலச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி (First Indian Woman to be elected to a Legislature in Malaysia) எனும் பெருமையும் இவருக்கு உண்டு. 1969-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் செரண்டா சட்டமன்றத் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார்.[5]

அரசியல் வாழ்க்கை

1958-ஆம் ஆண்டில், கங்கா நாயர் தம் 34-ஆவது வயதில் மலாயா தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.

அவர் அரசியலுக்குள் வந்த போது அவரின் முதல் கருத்துரை:

  • அரசியலுடன் சேவை செய்வதும், அரசியல் இல்லாமல் பணியாற்றுவதும் வேறு. அரசியலில் இருக்கும்போது அதிகாரத்துடன் தீவிரமாகப் பணியாற்றலாம். அரசியல் இல்லாமல், செயலற்ற முறையில்தான் பணியாற்ற முடியும்.

சோசலிச முன்னணி

1960-களில் தொழிலாளர் கட்சி (Labour Party) மற்றும் சோசலிச முன்னணி (மலாயா மக்கள் சோசலிச முன்னணி) கட்சி (Malayan Peoples' Socialist Front) ஆகிய இரு கட்சிகளும் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தினால் அழுத்தப்பட்டன. அதன் பிறகு கங்கா நாயர் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) கட்சியில் (Parti Gerakan Rakyat Malaysia) சேர்ந்தார். இந்தக் கட்சி 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டது.

கெராக்கான் கட்சியின் மகளிர் பிரிவுக்கான முதல் தலைவராகப் பதவி உயர்ந்தார். 1969-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், 14,000 வாக்காளர்களைக் கொண்ட செரண்டா மாநிலத் தொகுதியில்; கெராக்கான் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவர் செந்தூல் கெராக்கான் கிளையின் தலைவராக இருந்த போதிலும், செரண்டாவில் போட்டியிட வற்புறுத்தப்பட்டார்.

செதாபாக் நாடாளுமன்றத் தொகுதி

1974-ஆம் ஆண்டில், அவர் கெராக்கான் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார். கோலாலம்பூர், செத்தாபாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். 1975-ஆம் ஆண்டில், ஜனநாயக செயல் கட்சியின் டாமன்சாரா கிளையின் தலைவராக இருந்தபோது, கட்சியில் இருந்து விலகினார்.

கங்கா நாயர் 1978-ஆம் ஆண்டு சனவரியில் தொழிலாளர்க் கட்சியை (Worker's Party) நிறுவினார். இந்தக் கட்சிக்குப் பெண்கள் கட்சி (Women's Party) எனும் புனைப்பெயர் உண்டு. அதன் தலைவராக வழிநடத்தினார். 1978-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் கட்சியின் தனி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

மேலும் சுங்கை பீசி நாடாளுமன்றத் தொகுதி (Sungei Besi Parliamentary Constituency) மற்றும் சுங்கைவே மாநிலத் தொகுதியிலும் (Sungei Way State Constituency) போட்டியிட்டார். எனினும் இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.

தேசிய நம்பிக்கை கட்சி

கங்கா நாயர் 1978-ஆம் ஆண்டில் உருவாக்கிய தொழிலாளர்க் கட்சி தற்போது அமாணா தேசிய நம்பிக்கை கட்சி (Parti Amanah Negara) என பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்தக் கட்சி 2015-ஆம் ஆண்டில் இருந்து பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஒரு கட்சியாகச் செயல்படுகிறது. அதன் இப்போதைய தலைவர் முகமது சாபு.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

கங்கா நாயரின் தந்தையார் மலேசிய உச்ச நீதிமன்றத்தில் உதவிப் பதிவாளராக (Assistant Registrar Malaya Supreme Court) பணிபுரிந்தார். அவர் மலாயாவின் இலங்கைச் சமூகத்தின் தலைவராகவும் அறியப்பட்டார். தாயார் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். கங்கா நாயர் பத்திரிகையாளரான சி.வி. நாயர் (C.V Nayar) என்பவரை மணந்தார். அவர்களுக்கு 8 குழந்தைகள்.

கங்கா நாயர் தம்முடைய 86-ஆவது வயதில் கோலாலம்பூர் செபுத்தே நகர்ப் பகுதியில் இருந்த அவருடைய இல்லத்தில் காலமானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கங்கா_நாயர்&oldid=24075" இருந்து மீள்விக்கப்பட்டது