ஒன்பதாம் பத்து (பதிற்றுப்பத்து)
புலவர் | பெருங்குன்றூர் கிழார்
பதிற்றுப்பத்து - 9ஆம் பத்து - செய்திச்சுருக்கம்
கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
பதிகம்
பாடிய புலவர் - பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்ட அரசன் - இளஞ்சேரல் இரும்பொறை
பாடிப் பெற்ற பரிசில் - 32,000 காணம் பொற்காசு. இது மருள் இல்லாத புலவர் மருளும்படி தரப்பட்டது. மற்றும் அவருக்குத் தெரியாமல் அவரது நல்வாழ்வுக்கு வேண்டிய பலவகையான வளங்களையும் நல்கினான். அவ்வாறு அவருக்குத் தெரியாமல் கொடுக்கப்பட்டவை; ஊர், மனை, ஏர், அரிய அணிகலச் செல்வங்கள் முதலானவை.
இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறை என்று பதிகம் குறிப்பிடுகிறது. குட்டுவன் இரும்பொறையை 8ஆம் பத்து பாட்டுடைத் தலைவன் என்று எடுத்துக்கொள்கின்றனர். இரும்பொறை என்னும் பெயர்கொண்ட அரசர்களைத் தனியே தொகுத்து எண்ணிப் பார்த்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இளஞ்சேரல் இரும்பொறையின் தாய் மையூர் கிழான் என்பவனுக்கும் வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்னும் பெருமகளுக்கும் பிறந்த மகள். இவளது பெயர் தெருயவில்லை.
பாடல் 81 - நிழல்விடு கட்டி
நாட்டை அடிமைப்படுத்தும் கொள்ளைச் செயல்களை மாற்றி இவன் தன் மனைவியிடம் சென்று மகிழ்வோடு வாழவேண்டும் என்று இப்பாடலில் இவன் அறிவுறுத்தப்படுகிறான். இவன் மனைவி கொல்லிமலை மலர்களைச் சூடுவாள் என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இவன் கொல்லிமலைப் பெண்மணி எனத் தெரியவருகிறது.
பாடல் 82 - வினை நவில் யானை
'நிலந்தரு திருவின் நெடியோய்' (நிலந்தரு திருவின் நெடியோன்) என்று இவன் விளிக்கப்படுகிறான். பகைவர் கொல்லக் கொல்லக் குறையாத படைப்பெருக்கம் கொண்டவன் என்றும், பரிசிலர் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கவன் என்றும் இவனது பெருமை பேசப்படுகிறது.
பாடல் 83 - பஃறோறொழுதி (பல் தோல் தொழுதி)
குருகு இனம் தமது வெண்சிறகுகளை விரித்து வானத்தில் பறப்பது போல தோற்படையையும், தேர்ப்படையையும் இவன் நடத்திச் செல்வதைக் காணும்போது இனிமையாகத்தான் உள்ளது. ஆனால் அது அவன் பகைவர்க்கு இன்னாததாக உள்ளது.
பாடல் 84 - தொழில் நவில் யானை
பூழியர் கோ என்றும், பொலந்தேர்ப் பொறையன் என்றும் இவன் போற்றப்படுகிறான். வெற்றிகள் பல பெற்று இவன் நாளவையில் வீற்றிருப்பது இனிய காட்சி என்கிறார் புலவர்.
பாடல் 85 - நாடுகாண் நெடுவரை
நறவூர் இப் பாடலில் 'சூடா நறவு' என்று தெளிவுபடுத்தப்படுகிறது. இந்த நகரின் நாண்மகிழ் இருக்கையில் (நாளவையில்) இவன் வீற்றிருந்தான். இவன் போர் நடத்தியபோது பெரும்பூண் சென்னியர் பெருமான் படை தன் வேல்கள் பலவற்றைப் போர்க்களத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டதாம். இது செல்வக் கடுங்கோ வழியாதனைப் பாடிக் கபிலன் (கபிலர்) பெற்ற ஊர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாம்.
பாடல் 86 - வெந்திறல் தடக்கை
வென்வேல் பொறையன் என்று போற்றப்படும் இவன் இல்லோர் புன்கண் தீர நல்குவான் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவன், இவனது நாட்டில் ஓடும் வானி ஆற்று (சிறுவானி ஆறு) நீரைக் காட்டிலும் ஈரமுடையவனாக விளங்கினான்.
பாடல் 87 - வெண்டலைச் செம்புனல்
பல்வேல் பொறையன் என்றும் போற்றப்படும் இவன் ஆற்றுநீரில் மிதந்துவரும் கரும்பைக் காட்டிலும் இனியவன். பாடினிக்குப் பரிசில் நல்குவதில் இவன் தவறுவது இல்லையாம்.
பாடல் 88 - கல் கால் கவணை
வெற்றி கண்ட முன்னோர்
- குட்டம் தொலைய வேலிட்டவன் - 5 கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
- கடம்பு முதல் தடிந்தவன் - 5 கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
- கழுவுள் அரசனைப் போரில் புறங்கண்டவன் - 8 பெருஞ்சேரல் இரும்பொறை
- அண்டர் ஓட்டியவன் - 3 பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- நன்னனைத் தேய்த்தவன் - 4 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
- அயிரை பரவியவன் - 3 பல்யானைச் செல்கெழு குட்டுவன்
இவர்களின் மருகன் (வழிவந்தவன்)
கவண் உமிழும் கோட்டையைக் கொண்ட கொங்கர்களின் கோமகன் (அரசன்)
தொண்டித் துறைமுகத்தைத் தனதாக்கிக்கொண்டவன்.
பேரியாறு (பெரியாறு) பல பொருள்களை அடித்துக்கொண்டு செல்வது போல வந்தவரெல்லாம் இவன் தந்த புருள்களுடன் சென்றனர்.
வேங்கை பூத்த மலையிலிருந்து ஒழுகும் அருவி போன்ற மால்பினை உடையவன்
ஓவியம் போன்ற மகளிர் நடுவில் சாயிறு போல் விளங்கும் இவனைக் காண வந்ததாகக் கூறி அரசனை வாழ்த்துகிறார் புலவர்.
பாடல் 89 - துவராக் கூந்தல் (தகரம் பூசியதால் மகளிர் கூந்தல் உலர்வும், ஈர மினுமினுப்பும் கொண்டதாக இருந்தது)
இவனது கோல் செம்மையாய் இருந்ததால் நாட்டில் நல்லமழை பெய்து உயர்நிலை உலகமும் போற்ற இவன் நாட்டு மக்கள் மகிழ்வாக வாழ்ந்தனர். இவனும் தன் வடமீன் புரையும் வதுவை மகளிரோடு இனிதாக வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.
பாடல் 90 - வலிகெழு தடக்கை
மக்கள் அச்சம் இல்லாமல் வாழவும், அறக்கடவுள் வாழ்த்தும்படியாகவும், ஈர நெஞ்சமோடு இனிது ஆண்டவன் இந்த அரசன். மாந்தரன் அரசனின் வழித்தோன்றல். இவன் வானம் போல அளக்க முடியாதவன். கடல் போல் அள்ள அள்ளக் குறையாதவன். பல மீன்களுக்கிடையே தோன்றும் திங்களைப் போல சுற்றம் சூழ வாழ்பவன். உரம் பெற்ற கடலில் வேலிட்டவனோடு ஒப்பிடுகையில் உம்பல் என்னும் பெருங்களிறு போன்றவன்.
- கட்டுச்சோறு உண்ணும் ('கட்டிப் புழுக்கு') கொங்கர் மக்களின் அரசன்.
- சருக்கரைப் பொங்கல் உண்ணும் ('மட்டப் புகா') குட்டுவரிடையே அரிமா.
- கணையமரம் போன்ற தோளினை உடைய பூழியர் மக்களுக்குக் கவசம் போன்றவன்.
- மரந்தை நகரைக் கொண்ட நாட்டைத் தனதாக்கிக்கொண்டவன்
- பன்மொழி பேசும் வயவர் வாழும் கட்டூர் மக்களுக்கு வேந்தன்
- கவரி வீசத் தேர்மீது இருந்துகொண்டு வேல் வீசுவதிலும், வில்லாண்மை தோன்ற அம்பு எய்வதிலும் வல்லவன்.
- காஞ்சிப்போரில் வல்ல வயவர்களின் பெருமகன்.
- காவிரி போல நல்லழகும் வளமும் பெற்ற பெண்மகளின் கணவன்.
- நாளை உள்ளடக்கிய திங்கள், திங்களை உள்ளடக்கிய ஆண்டு, ஆண்டை உள்ளடக்கிய ஊழி, ஊழியை உள்ளடக்கிய அல்பெயர் எண் என்னும் எண்ணிக்கையில் இவனது வாழ்நாள் பல்க வேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.