ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்
படிமம்:ஒசூர் சந்திரசூடேசுவரர் கோயில்.jpg
பெயர்
புராண பெயர்(கள்):விருஷபாசலம், சம்பகாத்ரி, பிபதாராத்ரி, கௌதேய பர்வதம்
பெயர்:ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:ஒசூர்
மாவட்டம்:கிருட்டிணகிரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சந்திரசூடேசுவரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:மரகதாம்பிகை
உற்சவர் தாயார்:மனோன்மணி
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:மரகதசரோவரம் (பச்சைக்குளம்)
ஆகமம்:காமிகமம்
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அம்மாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்
  • தேர்த் திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: கங்கர்
வரலாறு
தொன்மை:பொ.ஊ. 9–10 ஆம் நூற்றாண்டு

ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு பழமையான கோயிலாகும்.[1] கல்வெட்டுகளில் இந்த ஊரானது முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, செவிடைப்பாடி என்று குறிப்பிடப்படுகிறது. பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், தொடருந்து நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் ஏழுக்கு அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சாலையும், 200 படிகள் கொண்ட நடைபாதையும் உள்ளன. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும்.

தொன்மவியல்

படிமம்:Oosor Hosur , Salem District.jpg
1860-ல் எடுக்கப்பட்ட கோயிலின் புகைப்படம்
படிமம்:Sri Chandra Choodeswara Temple.jpg
ஸ்ரீ சந்திர சூடேசுவரர் கோயில்

இக்கோயிலைப் பற்றி நிலவும் ஒரு தொண்மக் கதை, ஒரு காலத்தில் தர்மதேவன் சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். அவரின் தவத்தின் பயனாக காட்சியளித்த சிவனிடம் தன்னை சிவனின் வாகனமாக ஏற்றுக்ளொள்ள வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அவரைக் காளையாக மாற்றி வாகனமாக்கிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தர்மதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி அதில் உமையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுமாறு வேண்டினார். அதன்படி சிவன் இங்கு ரிசப வடிவில் விருஷபாசலம் என்னும் ஒரு மலையை உருவாக்கி அங்கேயே தங்கினார்.

பின்னர் தேவியை இங்கே அழைத்துவர ஒரு திருவிளையாடல் புரியும் விதமாக ஒளிவீசும் உடும்பு வடிவமெடுத்து கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த தேவிக்கு அருகில் வந்தார். இந்த அதிசய உடும்பைக் கண்ட உமை அதைப் பிடிக்க எண்ணி தன் தோழிகளுடன் சென்றார். அந்த மரகத நிற உடும்பு அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டி சென்றது ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலைத் தீண்ட, தேவியின் உடல் பச்சை நிறத்தை அடைந்தது. இதற்கிடையில் தேவியின் தோழிகள் தாகத்தால் தவித்து தண்ணீரைத் தேடி கானகம் முழுவதும் அலைந்தனர் ஆனால் அங்கு ஆறோ குளமோ எதுவும் காணாமல் தவித்தனர். அவர்கள் தேவியை வேண்ட தேவி தன்னுடன் தோன்றிய நதியாகிய அலக்நந்தனை அங்கு ஒரு வாவியை உருவாக்கப் பணித்தாள். அலக்நந்தனால் உருவாக்கப்பட்ட குளத்தில் நீராட தேவி இறங்கியதும் அதில் உள்ள நீரானது பச்சை நிறத்தை அடைந்தது. இதுவே தற்போது பச்சைக்குளம் என்று அழைக்கப்படும் மரகதசரோவரம் ஆகும்.

மீண்டும் தேவியின் கண்களில் அகப்பட்ட அந்த உடும்பானது அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். அந்த மலை உச்சியில் இருந்த சண்பக மரத்தில் அந்த உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முனிவரான முத்கலர் என்பவரும் அதைப் பார்த்தார். சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணர் என்பவரைக் கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் அவ்உடும்பை பிடிக்க எத்தனித்தபோது உடும்பு மறைந்தது. உடும்பு மறைந்ததைக் கண்டு தேவி திகைத்தாள் அது மறைய இந்த முனிவர்களே காரணம் என சினந்து, உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், அதைக் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவ்விருவரும் வேட்டுவ குலத்தில் பிறக்கும்படியும் சபித்தாள். அதைக் கேட்ட அந்த முனிவர்கள் தேவியிடம் இறைஞ்சினார்கள். ஆத்திரத்தில் சிவபக்தர்களை சபித்ததர்க்காக வருந்திய தேவி சிவனை நினைத்து வேண்டினாள். அப்போது அங்கு சிவன் உமையின் முன்பு தோன்றினார். இதையடுத்து முனிவர்களும் தேவியும் சிவனை வணங்கி வேண்டினர். அதைத்தொடர்ந்து தர்மதேவனுக்கு தான் அளித்த வாக்கின்படி இங்கு சிலகாலம் தங்கவே உடும்புவடிவில் இங்கு வந்ததாக சிவன் கூறினார். முனிவர்கள் அவரிடம் சாபவிமோசனம் அளிக்குமாறு வேண்டினர். தேவியின் வாக்கு பொய்யாகக்கூடாது. எனவே அவளது வாக்கின்படி இருவரும் வேட்டுவக் குலத்தில் பிறந்து வளர்ந்து வாருங்கள். இம்மலையின் மீது என்னை உடும்புவடிவில் காணும்போது சாபவிமோசனம் பெறுவீர்கள் என அருளினார். இதன் பிறகு அதன்படியே முனிவர்கள் ஒரு வேட்டுவனுக்கு ஊமை மற்றும் செவிடான இரட்டையர்களாக பிறந்து வளர்ந்து இந்த மலைமீது உடும்புவடிவில் உள்ள சிவனைக் கண்டு சாபவிமோசனம் பெற்றனர்.[2]

வரலாறு

கோயில் தங்கத் தேர்
படிமம்:Hosur ther.jpg
ஒசூர் தேர்

கோயிலில் உள்ள கணபதிச் சிற்றாலயம் கங்கர்களின் சிற்பக்கூறுகளை கொண்டுள்ளது எனவும், உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள், சூரியன் திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்றும் கருதப்படுகிறன. இக்கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ஒசூர் பகுதியில் கங்கர்களின் பொ.ஊ. 9, 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. பொ.ஊ. 1261-ல் போசளர் ஆட்சி காலத்தில், திரிபுவனமல்ல பூர்வாதிராச அத்தியாழ்வார் மகன் தர்மத்தாழ்வார் இக்கோயிலின் நம்பிராட்டியை (மரகதம்மாள்) எழுந்தருளச் செய்தார்.[3]

செவிடநாயனார்-சந்திரசூடேசுவரர்

சோழர்களின் ஆட்சி காலமான பொ.ஊ. 11, 12-ம் நூற்றாண்டுகளில் இத்தல இறைவன் செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டார் என அழைக்கப்பட்டார். பொ.ஊ. 13-ம் நூற்றாண்டுவரை இப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். பொ.ஊ. 14-ம் நூற்றாண்டில் விசயநகர ஆட்சிகாலத்தில் சூடநாதா எனவும் சூடலிங்கையா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ஊர் பெயர் செவிடபாடி-செவிடவாடி-சூடவாடி என மருவியிருக்கிறது. அதைப் போல செவிடநாயனார்-சூடநாதர்-சூடநாதேசுவரர்-சூடேசுவரர் என்றாகி சந்திர சூடேசுவர் என அழைக்கப்பட்டுவருகிறார்.[4]

திருக்கோயிலமைப்பு

இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. இக்கோயில் மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன.[5]

தேர்த்திருவிழா

இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது சிறப்பு.

அன்னதானம்

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "சூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் அழிவின் விளிம்பில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2017/01/03185951/Hosur-Lunar-cutesvararIn-the-entourage-of-destruction.vpf. பார்த்த நாள்: 20 July 2024. 
  2. "பாவங்கள் நீங்கும் சந்திர சூடேஸ்வரர்!". டைம்சு ஆப் இந்தியா. https://tamil.hindustantimes.com/astrology/history-of-hosur-sri-chandra-choodeswara-temple-131669706021761.html. பார்த்த நாள்: 20 July 2024. 
  3. ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 9
  4. ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 12
  5. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர் பக்கம்96

வெளி இணைப்புகள்

  • "Tourism in Krishnaigir district". Government of India. Archived from the original on 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  • அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், தினமலர்-கோயில்கள்