ஏ. வி. பி. ஆசைத்தம்பி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. வி. பி. ஆசைத்தம்பி
ஏ. வி. பி. ஆசைத்தம்பி
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
துவக்கம் 1957
முடிவு 1962
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
துவக்கம் 1967
முடிவு 1971
முன்னவர் ஜோதி வெங்கடாசலம்
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை), இந்தியா
துவக்கம் 1977
முடிவு 1979
பிரதமர் மொராசி தேசாய்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆ. வ. ப. ஆசைத்தம்பி
பிறந்ததிகதி (1924-09-24)செப்டம்பர் 24, 1924
பிறந்தஇடம் விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஏப்ரல் 7, 1979(1979-04-07) (அகவை 54)
பணி அரசியல்வாதி
துணைவர் பரமேசுவரி
பிள்ளைகள் மகன்கள்:(1) காந்திராசன் (2) செளந்திரபாண்டியன் மகள் 1

ஆசைத்தம்பி வன்னியப்பெருமாள் பழனியப்பன் ஆசைத்தம்பி என்னும் ஏ. வி. பி. ஆசைத்தம்பி (செப்டம்பர் 24, 1929 - ஏப்ரல் 7, 1979) தமிழக அரசியல்வாதி; எழுத்தாளர்; இதழாளர்; தமிழக சட்டமன்ற உறுப்பினர்; இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர்.

பிறப்பும் கல்வியும்

ஆசைத்தம்பி 1924செப்டம்பர் 24ஆம் நாள் விருதநகரில் பழனியப்பன், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1930ஆம் ஆண்டில் விருதுநகரில் உள்ள சத்திரிய வித்தியாசாலையில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார்; அங்கேயே ஆறாம் வகுப்பு வரை பயின்றார். 1937ஆம் ஆண்டில் பாளையம்கோட்டையில் உள்ள தூய சான்சு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து ஏழு, எட்டாம் வகுப்புகளை, அப்பள்ளியின் விடுதியில் தங்கி, பயின்றார். 1940ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பை விருதுநகர் நாடார் நகர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1941ஆம் ஆண்டில் விருதுநகர் சத்திரிய வித்தியாசாலையில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பைப் பயின்று, தோல்வி அடைந்தார்.[1]

திருமணமும் குடும்பமும்

ஆசைத்தம்பி 1944ஆம் ஆண்டு மே திங்கள் 28ஆம் நாள் பரமேசுவரி என்பவரை மணந்தார். பெரியார் ஈ. வெ. இரா. அத்திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவ்விணையர்களுக்கு காந்திராசன், செளந்திர பாண்டியன் என்னும் இரு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். மகன்கள் இருவரும் வணிகத்தில் ஈடுபட்டனர்.[2]

அரசியல் ஈடுபாடு

ஆசைத்தம்பிக்கு தந்தையாரான பழனியப்பன் நீதிக்கட்சியில் ஈடுபாடுடையவர். எனவே ஆசைத்தம்பியும் மாணவப் பருவத்திலேயே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் கருத்துகளால் கவரப்பட்டார்.

அக்கருத்துகளை பரப்புவதற்காக விருதுநகரில் இளைஞர் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். அக்கழகத்தில் பாரிசுடர் கே. டி. கே. தங்கமணி (பின்னாளில் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகப் புகழ்பெற்றவர்) உள்ளிட்ட பலரை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார்; தானும் சொற்பொழிவாற்றிப் பழகினார். 1942 ஆகத்து 9 ஆம் நாள் முதன்முறையாக பெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார்.[3]

சுயமரியாதை இயக்கத்தில்

1942ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற திராவிட தொண்டர் படை மாநாட்டில் பங்கேற்றார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று சில மாதங்கள் வணிகத்தில் ஈடுபட்டார். மீண்டும் விருதுநகருக்குத் திரும்பி தனது அரசியற் பணியைத் தொடர்ந்தார்.

1944சூன் 4ஆம் நாள் விருதுநகரில் திராவிட மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ஆசைத்தம்பி அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

1946ஆம் ஆண்டு மே மாதம் குடந்தையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத்தில்

1944ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் சேலத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ”தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்” என்னும் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. ஆசைத்தம்பி அக்கழகத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அக்கழகத்தில் விருதுநகர் நகரக் கழகச் செயலாளர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், மாநிலக் கழக செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார். அக்காலத்தில் அவர் ஆற்றிய அரசியல் பணிகளில் சில:

  • 1948ஆம் ஆண்டு மே திங்கள் 8, 9ஆம் நாள்களில் தூத்துக்குடியில் திராவிடர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் திராவிடநாட்டின் படத்தைத் திறந்து வைத்துச் சொற்பொழிவு ஆற்றினார்.
  • 1948ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23, 24ஆம் நாள்களில் ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் 19ஆவது மாநாடு சிறப்பு மாநாடாகக் கூடியது. 1938இல் நடந்த முதல் இந்தித் எதிர்ப்புப் போராட்டங்களில் மரணமடைந்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் படத்தை ஆசைத்தம்பி திறந்து வைத்து உரையாற்றினார்.
  • 1949ஆம் ஆண்டில் விருதுநகரில் பாரதிதாசன் தலைமையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதில் பெரியார் ஈ. வெ. இரா, கா. ந. அண்ணாதுரை, சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக ஆசைத்தம்பி பணியாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்

பெரியார் ஈ. வெ. இரா., மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து பலர் பிரிந்து சென்றனர். அவர்கள் சென்னை இராயபுரத்தில் உள்ள இராபின்சன் பூங்காவில் 1949செப்டம்பர் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். ஆசைத்தம்பியும் திராவிடர் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கழகத்தில் பொதுக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார். அக்கழகத்தின் உறுப்பினராக இருந்த காலத்தில் பின்வரும் பொறுப்புகளை நிறைவேற்றினார்:

1961ஆம் ஆண்டில் ஈ. வெ. கி. சம்பத்து தலைமையில் ஓரணியினர் தி. மு. க.விலிருந்து விலகிச் சென்று தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினர். அப்பொழுது ஆசைத்தம்பி சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

  • 1969 ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு தானி, வாடகையுந்து ஓட்டுநர் தொழிற்சங்கம் (Tamil Nadu Taxi and Auto-Drivers' Union), சென்னை தானி ஓட்டுநர்கள் கூட்டுறவுச் சங்கம் வரையறுக்கப்பட்டது (Madras Auto rickshaw Drivers' Cooperative Society limited) ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்தார்.[4]

எழுத்துப் பணி

மாணவப் பருவத்தில் சொற்பொழிவுக்கலையைக் கற்ற ஆசைத்தம்பி, பள்ளிப் படிப்பு முடிந்ததும் தன்னுடைய எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். விருதுநகரில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த இயக்க இதழ்களுக்கு அறிக்கையாக அனுப்பத் தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த 1943ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஏன் பிரிய வேண்டும்? என்னும் கட்டுரையை எழுதினார். அக்கட்டுரை சி. பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் இதழில் வெளிவந்தது. அதுவே இவருடைய முதற்கட்டுரை ஆகும்.[5] அதனைத் தொடர்ந்து குடியரசு, திராவிட நாடு, விடுதலை முதலியன போன்ற திராவிட இயக்க இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளிவந்தன. அக்கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து 1944ஆம் ஆண்டில் திராவிடர்கள் என்னும் நூலை விருதுநகர் இளைஞர் கழகம் வெளியிட்டது. இதுவே இவருடைய முதல் நூல் ஆகும்.[6]

இதழ்கள்

திராவிட இயக்கத்தின் இதழ்கள் பலவற்றில் எழுதி வந்த ஆசைத்தம்பி, 1948ஆம் ஆண்டில் தனி அரசு என்னும் திங்கள் இதழைத் தொடங்கினார்.[7] அதில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். சில ஆண்டுகளில் அவ்விதழை மாதமிருமுறை இதழாக மாற்றினார்.[8] பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை நாளிதழாக வெளியிட்டார். மேலும் திராவிட சினிமா என்னும் இதழையும் நடத்தினார்.[9]

திரைத் துறையில்

ஆசைத்தம்பி மாடர்ன் தியேட்டர்சின் சர்வாதிகாரி (1951) என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார். பாரதிதாசன் உரையாடல் எழுதிய வளையாபதி திரைப்படத்திலும் சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார்.[9]

நூல்கள்

ஆசைத்தம்பி 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். துப்பறியும் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் நூல்கள் போன்றவை இவற்றில அடங்கும். அவை:

வ.எண் நூலின் பெயர் வகை வெளியான ஆண்டு பதிப்பகம் குறிப்புகள்
01 அரசகுமாரி புனைவு ? ?
02 அவள் வாழ்வு ? ? ?
03 அழகு எரிந்தது அரசியல் ? ?
04 அறிவுரைகள் ? ? ?
05 அறைகூவல் அரசியல் ? ?
06 அன்பழகன் ஆட்சி புனைவு ? ?
07 ஆண்களை நம்பலாமா? புனைவு ? ?
08 இரவில் வந்தவள் புனைவு ? ?
09 இருண்ட வாழ்வு ? ?
10 என் மாமி புனைவு ? ?
11 எகிப்திய எழுச்சி அரசியல் 1954 எண்ணப்பூங்கா, சென்னை
12 கசந்த கரும்பு புனைவு-புதினம் 1954 சென்னை
13 கசப்பும் இனிப்பும் புனைவு ? ?
14 காதல் மாளிகை புனைவு ? ?
15 காதலும் கண்ணீரும் புனைவு ? ?
16 காந்தியார் சாந்தியடைய அரசியல் 1950 எரிமலைப் பதிப்பகம், துறையூர்
17 காமராஜர் ? ? ?
18 கிழக்கும் மேற்கும் புனைவு ? ?
19 கேட்கவில்லை புனைவு ? ?
20 கொலைகாரி புனைவு ? ?
21 சிகாகோ சம்பவம் அரசியல் ? ?
22 சிலந்திக்கூடு புனைவு ? ?
23 சென்னையில் ஆசைத்தம்பி அரசியல் ? ?
24 டாக்டர் புனைவு ? ?
25 தனியரசு ஏன்? அரசியல் ? ?
26 திராவிடர்கள் அரசியல் ? ?
27 திராவிட இயக்கம் ஏன்? அரசியல் ? ?
28 தியாகச் சுடர் ? ? ?
29 அரசியல் 1953 மே ?
30 நாம் இருவர் அரசியல் ? ?
31 நினைவுச் சுழல் புனைவு ? ?
32 பயங்கர வாழ்வு புனைவு-சிறுகதைகள் 1944 எரிமலைப் பதிப்பகம், துறையூர்
33 பிணங்கள் புனைவு ?
34 மக்கள் சக்தி அரசியல் ? ?
35 மலர்த்தோட்டம் ? ? ?
36 மழை ? ? ?
37 மனித தெய்வம் ? ?
38 மனைவி புனைவு ? ?
39 முத்துக்குவியல் ? ?
40 முள் புனைவு ? ?
41 வழக்கு - தீர்ப்பு அரசியல் ? ?
42 வறண்ட வாழ்க்கை புனைவு ? ?
43 வாழ்க்கை வாழ்வதற்கே ? ? ?
44 விந்திய வீரன் புனைவு ? ?
45 வெயிலும் நிழலும் புனைவு ? ?
46 வெறுங்கூட்டு புனைவு ? ?

2007-08ஆம் நிதியாண்டில் தமிழக அரசு இவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது. அவரது கதைகள் பிரசண்ட விகடன் இதழில் முதலில் வெளியாகின.[10]

சிறை வாழ்க்கை

திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக மலர்ந்து வந்த ஆசைத்தம்பி, 1946ஆம் ஆண்டிற்கும் 1977ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 10 முறை[4] வெவ்வேறு அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவற்றுள் சில:

  • 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது நடந்த இந்தி எதிர்ப்பு அடையாள மறியலில் கலந்துகொண்டதற்காக விருதுநகர் கிளைச் சிறையில் நான்கு நாள்கள் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டார்.[11]
  • காந்தியடிகள் சுட்டுக் கொல்லப் பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் ஐயோ வேகுதே நெஞ்சம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். 1950ஆம் ஆண்டில் அக்கட்டுரையை 12 பக்க நூலாக டி. வி. கலியபெருமாள் என்பவர் தன்னுடைய எரிமலை பதிப்பக்த்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து காந்தியார் சாந்தி அடைய... வெளியிட்டார். அந்நூலை அன்றைய தமிழ்நாடு அரசாங்கம் தடைசெய்தது. அந்நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பி, அதனை வெளியிட்டதற்காக டி. வி. கலியபெருமாள், து. வி. நாராயணன் என்பவர் எழுதிய அழியட்டுமே திராவிடம் என்னும் நூலை வெளியிட்டதற்காக தங்கவேலு ஆகிய மூவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் சட்டக்கூறு 153 (அ) இன்படி வகுப்பு விரோதத்தைத் தூண்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. 1950 சூலைத் திங்களில் முசிறி நீதிமன்றத்தில் அந்நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பிக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், அதனைக் கட்டத் தவறினால், மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆசைத்தம்பியும் பிறரும் மேல் முறையீடு செய்ய பிணையில் வெளிவருதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த முதலிரு நாள்கள் முசிறி நகரக் கிளைச் சிறையிலும் மூன்று நாள்கள் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார். திருச்சிச் சிறையில் ஆசைத்தம்பியையும் அவரோடு கைது செய்யப்பட்ட டி. வி. கலியபெருமாள், து. வி. நாராயணன் ஆகியோரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு முந்தைய நாள், அவர்களுக்கு மொட்டை போடப்பட்டது. அதனைக் கண்டித்து கா. ந. அண்ணாதுரை தன்னுடைய 30. 7. 1950 நாளிட்ட திராவிட நாடு இதழில் ஆசைதம்பியும் பிறரும் மொட்டைத் தலையோடு இருக்கும் படத்தை வெளியிட்டு அகிம்சா ஆட்சியின் அழகினைப் பார் என்னும் கட்டுரையை எழுதினார். ஆசைத்தம்பியும் பிறரும் செய்த மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்ட திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆசைத்தம்பிக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனையும் 500ரூபாய் அபதாரம் எனவும் தீர்ப்பு வழங்கியது. ஆசைத்தம்பியும் பிறரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துவிட்டு, 25 நாள்கள் சிறையில் இருந்தனர்; ஆக மொத்தம் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஆசைத்தம்பியையும் பிறரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது; அபராதம் கட்டியிருந்தால் திருப்பிக் கொடுக்கும்படியும் ஆணையிட்டது.[12]
  • 1975ஆம் ஆண்டில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் ஆசைத்தம்பி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.[13]

தேர்தல் களத்தில்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உள்ளாட்சி, தமிழக சட்டப் பேரவை, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட ஆசைத்தம்பி, மக்கள் சார்பாளராக அந்தந்த அவைகளில் பணியாற்றினார்.

1946ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை விருதுநகர் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.[4]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1957இல் ஆயிரம் விளக்குத் தொகுதியில் இருந்தும், 1967 இல் எழும்பூர்த் தொகுதியில் இருந்தும் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14]

மதிப்பீட்டுக் குழுத் தலைவர்

1968 – 69ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழுத் தலைவராக (Chairman, Estimates Committee, Tamil Nadu Assembly) ஆசைத்தம்பி பதவி வகித்தார்.[4]

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத் தலைவர்

1971ஆம் ஆண்டில் பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஆசைத்தம்பியை, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக (Chairman, Tamil Nadu Tourism Development Corporation) தமிழ்நாடு அரசு நியமித்தது. 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் அப்பதவியை வகித்தார்.[4]

வெளிநாட்டுப் பயணம்[4]

  • 1968ஆம் ஆண்டில் பொதுவள நாட்டு நாடாளுமன்றப் பேராளர்களில் (Commonwealth Parliamentary Delegation)ஒருவராக இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார்.
  • 1968ஆம் ஆண்டிலும் 1974ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
  • 1972ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றார்.


இறப்பு

1979ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தன் மனைவி பரமேசுவரியோடு அந்தமான் தீவுகளுக்குச் சென்றார். அங்கு தலையில் இருந்த குருதிக்குழாய் வெடித்து போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7ஆம் நாள் அந்தமான் தீவிலேயே மரணமடைந்தார்.[15]

சான்றடைவு

  1. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007: பக் 3, 4
  2. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 8
  3. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 4
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 http://164.100.47.132/lssnew/biodata_1_12/2307.htm
  5. கலைச்செல்வன்; ஆசைத்தம்பி சிற்றரசு; கலைமன்றம், சென்னை; 1953; பக் 30
  6. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 6
  7. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 9
  8. 10.8.1953 நாளிட்ட தனி அரசு இதழின் முகப்புப் பக்கம்
  9. 9.0 9.1 திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 26
  10. திராவிட இயக்கத் தூண்கள்
  11. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 14
  12. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 11-23
  13. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 30
  14. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 29-30
  15. திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 31-32

மேற்கோள்கள்

  • திராவிட இயக்கத் தூண்கள் (1999), க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம
"https://tamilar.wiki/index.php?title=ஏ._வி._பி._ஆசைத்தம்பி&oldid=3621" இருந்து மீள்விக்கப்பட்டது