ஏ. கே. நாதன்
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏ.கே. நாதன் A.K. Nathan 白弥敦道 |
---|---|
பிறந்ததிகதி | 14 ஏப்ரல் 1956 |
பிறந்தஇடம் | மலேசியா பூச்சோங் சிலாங்கூர் |
பணி | கட்டமைப்பு வடிவமைப்பு தொழில் அதிபர் |
தேசியம் | மலேசியர் |
கல்வி | மலேசியா பூச்சோங் உயர்நிலைப் பள்ளி |
பணியகம் | எவர்செண்டாய் நிறுவனம் |
அறியப்படுவது | கட்டமைப்பு வடிவமைப்பாளர் புர்ஜ் கலிஃபா வானளாவி சிங்கப்பூர் ஹிட்டாச்சி கட்டடம் பெட்ரோனாஸ் கோபுரங்கள் |
துணைவர் | புவான் ஸ்ரீ புஷ்பா |
பிள்ளைகள் | 1. நரீஷ், 2. ஷாமிலா 3. N.A |
இணையதளம் | எவர்செண்டாய் |
டான் ஸ்ரீ ஏ.கே. நாதன் (மலாய்: A.K. Nathan; பிறப்பு: ஏப்ரல் 14, 1956), மலேசியாவில் கட்டமைப்பு வடிவமைப்பு (Structural Design) தொழில் அதிபர். எவர்செண்டாய் நிறுவனத்தை உருவாக்கியவர்.[1] மலேசிய இந்தியப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஏ.கே. நாதன், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பட்டப் படிப்பிற்காக இந்தியா சென்றார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.[2] அதனால், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு மலேசியாவிற்குத் திரும்பி வந்தார். ஓர் அச்சகத்தில் கடைநிலை ஊழியராக, ஒரு சாதாரண வேலையில் சேர்ந்தார். அதன் பின்னர், ஒரு காப்புறுதி நிறுவனத்தில் சாதாரண முகவராக வேலை செய்தார்.[3]
வாழ்க்கை வரலாறு
ஏ.கே. நாதன், சிலாங்கூர், பூச்சோங் கிராமப் பகுதியில் 1956-ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய தந்தையார், செய்தித்தாள் விநியோப்பாளர். தாயார் ஒரு குடும்பமாது.
டாயாபூமி கட்டுமானம்
அவருக்கு கோலாலம்பூரில் இருக்கும் டாயாபூமி கட்டுமானத்தில் உருக்கு இரும்பு கட்டமைப்பு வடிவமைப்பு ஒப்பந்தம் (Temporary Structural Steel Platform Work) கிடைத்தது. அது ஒரு சின்ன ஒப்பந்தம். நாதனின் அண்ணனால், டாயாபூமி வேலைகளைச் செய்ய முடியவில்லை. அவருக்கு சிங்கப்பூரில் மற்ற வேலைகள் இருந்தன.
அதனால், டாயாபூமி பணிகளைக் கவனிக்குமாறு தன் தம்பி நாதனைக் கேட்டுக் கொண்டார். நாதனுக்கும் கட்டமைப்பு வடிவமைப்பு பணிகளில் அனுபவம் எதுவும் இல்லை. அதனால், துணைக் குத்தகையாளர் ஒருவரை ஒப்பந்தம் செய்தார்.
புரோட்டான் சாகா தொழிற்சாலை
அந்தக் குத்தகையாளர், பல வழிகளில் தன்னை ஏமாற்றி வருவதை நாதன் அறிந்து கொண்டார். வேறுவழி இல்லாமல் அந்தக் குத்தகையாளரை நிறுத்த வேண்டிய நிலை நாதனுக்கு ஏற்பட்டது. இறுதியில், கட்டமைப்பு வடிவமைப்பு தொழிலில் கொஞ்சம்கூட அனுபவம் இல்லாத நாதன், தனிமனிதனாக நின்று டாயாபூமி பணிகளைச் செய்து முடித்தார்.
இந்தச் சமயத்தில், மலேசியா தனது முதல் தேசிய வாகனமான புரோட்டான் சாகாவைத் தயாரிக்கப் போவதாக நாதன் கேள்விப் பட்டார். புரோட்டான் சாகா தொழிற்சாலைக்குக் கட்டமைப்பு வடிவமைப்பு நிர்மாணிப்புகள் அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். அதற்குள் அந்த நிர்மாணிப்புப் பணிகள் ஜப்பானில் இருக்கும் நிப்போன் ஸ்டீல் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனம்தான் தலைமைக் குத்தகையாளர் ஆகும்.
நிப்போன் ஸ்டீல் நிறுவனத்தின் திட்ட நிர்வாகி யாமாக்கி
புரோட்டான் சாகா தொழிற்சாலையில் துணைக் குத்தகை வேலைகள் ஏதாவது கிடைக்குமா என்று நிப்போன் ஸ்டீல் நிறுவனத்தின் திட்ட நிர்வாகியை, ஏ.கே. நாதன் போய்ப் பார்த்தார். நாதனின் நல்ல நேரம் என்று கூட சொல்லலாம். அந்த நிர்வாகியும் நல்ல ஒரு நம்பிக்கையான ஆளைத் தேடிக் கொண்டு இருந்தார். இருந்தாலும், டாயாபூமியைத் தவிர வேறு எந்த வலுவான அனுபவங்கள் நாதனிடம் இல்லை. நாதனுக்கு அது ஒரு பெரிய குறைபாடாக இருந்தது. அதனால், அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனால், ஓர் அதிசயம் நடந்தது. பத்து நாட்கள் கழித்து, நிப்போன் ஸ்டீல் நிறுவனத்தின் திட்ட நிர்வாகி யாமாக்கி என்பவர், நாதனைத் தேடி வந்தார். அடுத்து, புரோட்டான் சாகா தொழிற்சாலையின் கட்டமைப்பு வடிவமைப்பு நிர்மாணிப்பு பணிகள் நாதனிடம் ஒப்படைக்கப்பட்டன. குறிப்பிட்டக் காலக்கெடுவிற்குள் புரோட்டான் சாகா தொழிற்சாலை வடிவமைப்பு நிர்மாணிப்பு பணிகள் செய்து கொடுக்கப்பட்டன. நாதனின் அயராத உழைப்பு ஓர் தெய்வீகச் சன்னதியாக மாறியது. அதில் இருந்து நிப்போன் ஸ்டீல் நிறுவனத்தின் நம்பிக்கைக்கும் அவர் பாத்திரமானார்.[சான்று தேவை]
பொருளாதார மந்த நிலை
1980-களில் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நாதனையும் பாதித்தது. அவருக்குப் பலவாறான பண நெருக்கடிகள். பற்றாக்குறைக்கு கடன் கொடுத்த வங்கிகள் கழுத்தை நெரித்தன. அவரிடம் வேலை செய்தவர்களுக்கு முறையாகச் ஊதியம் கொடுக்க முடியவில்லை. அவருடைய நிறுவனம் திவாலாகிப் போகும் நிலைமைக்கு வந்தது.
இருந்தாலும் நாதன் மனம் உடைந்து போகவில்லை. அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம், இன்று வரை மலேசியர்களிடையே ஒரு தாரக மந்திரமாக விளங்குகிறது.[சான்று தேவை] அவர் சொன்ன வாசகம் இதுதான்.
“ | ஒரு மனிதன் இருந்தாலும் இறந்தாலும் தன்னம்பிக்கை என்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது.
நம்பிக்கையைக் கைவிட்டால் அவன் மனிதனே இல்லை. |
” |
சிங்கப்பூரின் முதல் உள்விளையாட்டரங்கம்
அவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் அவரை எங்காவது போய் தலைமறைவாக இருக்கச் சொன்னார்கள். கடன்காரர்களின் தொல்லைகளைத் தவிர்க்கலாம் என்று அறிவுரை கூறினார்கள். நாதன் மனம் தளரவில்லை. இந்த இக்கட்டானக் கட்டத்தில்தான், நிப்போன் ஸ்டீல் நிறுவனம் மறுபடியும் நாதனுக்கு கை கொடுத்தது.
சிங்கப்பூரின் முதல் உள்விளையாட்டரங்கம் (Singapore Indoor Stadium) கட்டுவதற்கு நாதனிடம் துணைக் குத்தகை வழங்கப்பட்டது. வேலைகளை ஒழுங்காகச் செய்து முடித்தார். இது நடந்தது 1988-ஆம் ஆண்டு. அதன் பிறகு அவர் நிப்போன் ஸ்டீல் நிறுவனத்தின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானார்.
குடியரசு கட்டடம்
சிங்கப்பூரின் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்ட பின்னர், 37 மாடிகளைக் கொண்ட சிங்கப்பூர் ஹிட்டாச்சி கட்டடம், 33 மாடிகளைக் கொண்ட சிங்கப்பூர் கால்டெக்ஸ் கட்டடம் போன்றவற்றைக் கட்டும் ஒப்பந்தங்கள் நாதனுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு Republic Plaza எனும் குடியரசு கட்டடத்தையும் கட்டி முடித்தார். சிங்கப்பூர் குடியரசு கட்டடம் 66 மாடிகளைக் கொண்டது.
அடுத்து மலேசிய அரசாங்கமே அவரை அழைத்தது. மலேசியாவின் இரட்டைக் கோபுரங்களில் இரண்டாவது கோபுரத்தின் கட்டமைப்பு வடிவமைப்பு நாதனுக்கு வழங்கப்பட்டது. அப்போதைய மலேசியப் பிரதமர் துன் மகாதீர் அந்த வாய்ப்பை வழங்கினார். பதினெட்டு மாதங்களில் நாதன் தன் வேலையைச் செய்து கொடுத்தார்.[சான்று தேவை]
மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள்
மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள்தான் இப்போது உலகிலேயே மிக உயரமான இரட்டைக் கோபுரங்கள் ஆகும். இந்த இரட்டைக் கோபுரங்களில் இரண்டாவது கோபுரத்தின் கட்டமைப்பு வடிவமைப்பைச் செய்து கொடுத்தது ஏ.கே.நாதனின் எவர்செண்டாய் நிறுவனம் ஆகும். இந்தக் கோபுரங்கள் 452 மீட்டர் உயரம் கொண்டவை. 83-வது மாடிகள் வரை பைஞ்சுதை (cement) கொண்டு கட்டப்பட்டது. 84-வது மாடியில் இருந்து மேலே அனைத்தும் உருக்கு இரும்பால் பிணைக்கப்பட்டு உள்ளன.
அதன் பின்னர் துபாய் அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்தது. துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபா வானளாவிக்கு கட்டமைப்பு வடிவமைப்பு செய்து தருமாறு நாதன் கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்த புர்ஜ் கலிஃபா வானளாவிதான் இப்போதைக்கு உலகின் உயரமான கட்டிடம் ஆகும். 110 மாடிகளைக் கொண்டது. அதையும் முறையாகச் செய்து கொடுத்தார்.
இதுவரையில் உலகம் முழுமையும் 100 கட்டடங்களுக்கு நாதன் கட்டமைப்பு வடிவமைப்பு செய்து கொடுத்து இருக்கிறார். மலேசியா புத்ராஜெயாவில் இருக்கும் அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு வடிவமைப்பு செய்து கொடுத்ததும் நாதனின் எவர்செண்டாய் நிறுவனமே ஆகும்.
சாதனைகள்
ஏ.கே. நாதன் கட்டமைப்பு வடிவமைப்பு நிர்மாணிப்பு செய்து கொடுத்த முக்கியக் கட்டடங்களின் பட்டியல்:[சான்று தேவை]
- அல்மாஸ் கோபுரம் - துபாய் Almas Tower - Dubai
- ரோஸ் ரோத்தானா கோபுரம் - துபாய் Rose Rotana Tower - Dubai
- கிப்கோ கோபுரம் - கத்தார் Qipco Tower - Qatar
- குடியரசு கட்டடம் - சிங்கப்பூர் Republic Plaza - Singapore
- ஹிட்டாச்சி கோபுரம் - சிங்கப்பூர் Hitachi Tower - Singapore
- பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் - கோலாலம்பூர் Petronas Twin Tower - Kuala Lumpur
- கால்டெக்ஸ் கோபுரம் - சிங்கப்பூர் Caltex Tower - Singapore
- கோலாலம்பூர் கோபுரம் - கோலாலம்பூர் KL Tower - Kuala Lumpur
- டிரெலிஸ் கோபுரம் - சிங்கப்பூர் Trellis Tower -Singapore
- குரோஸ்வெனோர் விடுதி - துபாய் Grosvenor Hotel -Dubai
- எமிரெட்ஸ் கோபுரம் - துபாய் Emirates Tower -Dubai
- யூ.இ. மையம் - சிங்கப்பூர் - UE Square -Singapore
- எம்பையர் கோபுரம் - இந்தோனேசியா Empire Tower -Indonesia
- ஏ.ட்.எம். கோபுரம் - தாய்லாந்து ATM Tower -Thailand
- 21 ஆம் நூற்றாண்டு கோபுரம் - துபாய் 21st Century Tower - Dubai
- செல்சி கோபுரம் - துபாய் Chelsea Tower - Dubai
- கேட் கட்டடம் - துபாய் Gate Building - Dubai
- வினான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரம் - துபாய் Airport Control Tower - Dubai
- மெர்னா கிரவுன் - துபாய் Marina Crown - Dubai
- பாரகான் - சிங்கப்பூர் Paragon - Singapore
- அல் பைசாலா கோபுரம் - சவூதி அரேபியா Al Faisalah Tower - K.S.A
- புர்ஜ் அல் அராப் - துபாய் Burj Al Arab - Dubai
- துமாய் மால் - துபாய் Dubai Mall - Dubai
- துபாய் வெஸ்டிவல் சிட்டி - துபாய் Dubai Festival City - Dubai
- கியூ.எஸ்.டி.பி. - துபாய் QSTP - Dubai
- மோட்டார் சிட்டி - துபாய் Motor City - Dubai
- ஸ்கை துபாய் - துபாய் Ski Dubai - Dubai
- கே.எல்.சி.சி. - கோலாலம்பூர் KLCC - Kuala Lumpur
- பெல்டா பற்பயன் மண்டபம் - கோலாலம்பூர் Felda Multipurpose Hall - Kuala Lumpur
- ஏய்ம்ஸ்ட் - மலேசிய இந்தியர்களின் மருத்துவக் கல்லூரி - கோலாலம்பூர் AIMST - Kuala Lumpur
- புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் - கோலாலம்பூர் Putrajaya International Convention Center - Kuala Lumpur
- ஒன் ராபிள்ஸ் லிங் - சிங்கப்பூர் One Raffles Link - Singapore
- வெஸ்ட் பே லாகூன் = கத்தார் West Bay Lagoon - Qatar
ஏ.கே.நாதனின் தாரக மந்திரம்
"எந்த வேலையைச் செய்தாலும், அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்துவிட வேண்டும். அப்படிச் செய்வதே ஒரு மனிதனுக்கு ‘பிளஸ் பாயிண்ட். காலம் தவறாமையில் கண்ணியமாக விளங்க வேண்டும்" என்று ஏ.கே.நாதன் அடிக்கடி சொல்லி வருகிறார். அதுவே, அப்போதும் இப்போதும் ஏ.கே.நாதனின் தாரக மந்திரமாகவும் விளங்குகிறது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ஏ.கே.நாதன் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.[சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ "Eversendai Engineering (M) Sdn Bhd was incorporated in 1993 to undertake engineering, fabrication design and erection of mechanical and structural work." இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130703044354/http://www.eversendai.com/about_history.php.
- ↑ His university education ended when the money ran out.
- ↑ He started by selling insurance and later got involved in a printing business, which was what he had wanted to pursue as a career.