ஏ. கே. கருணாகரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏ. கே. கருணாகரன் |
---|---|
பிறந்ததிகதி | 5 திசம்பர் 1945 |
இறப்பு | 19 நவம்பர் 2022 |
ஏ. கே. கருணாகரன் (5 திசம்பர் 1945 – 19 நவம்பர் 2022) இலங்கையின் பிரபலமான ஒரு கருநாடக இசைக் கலைஞர்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியில் கரவெட்டியில் பிறந்த கருணாகரன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபொழுதே 6 ஆம் வகுப்பில் கருநாடக இசையில் பயிற்சி பெற ஆரம்பித்தார். 1961 இல் யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று சங்கீதரத்தினம் எனும் பட்டம் பெற்றார். அப்பொழுது, பிரபல இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் அக்கல்லூரியின் அதிபராகக் கடமை புரிந்தார். கருணாகரன், அதன் பின்னர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கற்று, சங்கீத வித்துவான், மற்றும் இசை கற்பிப்பதில் டிப்புளோமா பட்டமும் பெற்றார். சென்னையிலும் மகாராஜபுரம் சந்தானத்துடன் கச்சேரிகளில் பாடுவதற்கும் அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
1969 இல் இலங்கை வானொலியில் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். சிறிது காலத்தின் பின் அவர் அங்கு தமிழ் சேவையின் வாத்தியக் குழுவின் தலைவராகப் பணி உயர்வு பெற்றார். இராமநாதன் இசைக்கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டபோது, 1979ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் போதனாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் 1989ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பதவி பெற்றார். அங்கு கருணாகரன் 11 ஆண்டுகள் வரை பணியாற்றி, பல இசை அரங்கேற்றங்களை நடாத்தி கச்சேரி செய்யக்கூடிய பல மாணவர்களை உருவாக்கியபின் 2002ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் இசை விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் மீண்டும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார். கருணாகரன் கர்நாடக இசையையும் பல இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆலாபனா எனும் சங்கீத சபாவை பல ஆண்டுகளாக கொழும்பில் நடத்தி வந்தார்.
இவர் எழுதிய "சங்கீதானுபவம்" என்ற நூல் 2011 சூன் மாதத்தில் கொழும்பில் வெளியிடப்பட்டது.
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- யூடியூபில் ஏ. கே. கருணாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி - இலங்கை வானொலியில் 2022 நவம்பர் 22 இரவு 7.30க்கு ஒலிபரப்பானது.
- பவளவிழா காணும் இசையாளர் ஏ. கே. கருணாகரன்
- இசை உலகின் பெருந்தவமான பேராசான் ஏ.கே.கருணாகரன் | என் சண்முகலிங்கன் அஞ்சலி