ஏறாவூர் சின்னத்துரை அண்ணாவியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏறாவூர் சின்னத்துரை அண்ணாவியார் (1920) ஈழத்து கூத்துக் கலைஞர். தன் வாழ்நாளில் பத்மாவதி நாடகம், பகையை வெல்லல் நாடகம் என இரண்டு முக்கியமான நாடகங்களை அரங்கேற்றினார். தன் கண்டிப்பாலும், கறாரான ரசனையாலும் நக்கீரர் அண்ணாவியார் என்றழைக்கப்பட்டார். அடிப்படையான கூத்துத் தாளக்கட்டுக்களை வைத்துக் கொண்டு புதிய தாளக்கட்டுக்களை உருவாக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னத்துரை, சண்முகமணியை திருமணம் செய்து கொண்டார். நவமணி, தங்கமணி என இரண்டு மகள்கள். பேராசியர் மெளனகுரு அவர்களின் முறைமாமா (அம்மாச்சி).

தோற்றம்

ஒல்லியான உருவம், இரண்டு காதுகளிலும் ஒளிரும் மின்னி, திருநீற்றுப்பூச்சு, சிலுப்பிவிட்ட பாகவதர் வெட்டுத்தலை, வரிசையான வெண்பல் சிரிப்பு

கலை வாழ்க்கை

சீனி அண்ணாவியாரிடம் கூத்து பயின்றார். கூத்து கலை என்பதில் மிகப்பிடிவாதமாக இருந்ததாலும், விமர்சனங்களை முகத்திற்கு நேரே சொல்லிவிடுபவர் என்பதாலும் நக்கீரர் அண்ணாவியார் என்று அழைக்கப்பட்டார். மத்தளம் அடிப்பது, பாடுவது, கூத்தெழுதுவது, கூத்து பழக்குவது, புதிது புதிதாக கூத்து ஆட்டங்களில் தாளக்கட்டுக்களை உருவாக்குவது இவரின் திறமையாக இருந்தது. 1935-ல் ராம நாடகத்தில் தன் பதினைந்தாம் வயதில் லட்சுமணன் வேடம் போட்டார். அவர் தன் வாழ்நாளில் இரண்டு கூத்துக்கள் மட்டுமே அரங்கேற்றினார். அவ்விரண்டுமே பெரிதும் பேசப்பட்டன. பத்மாவதி நாடகம், பகையை வெல்லல் நாடகம் அவர் எழுதிய நாடகங்கள். 1950-ல் அவரே எழுதி அவரே பழக்கிய கூத்தான "பத்மாவதி நாடகம்" அரங்கேறியது. அதில் அவர் போட்ட உச்சகட்ட தாளக்கட்டை புதிதாக அறிமுகம் செய்திருந்தார். 1953-ல் "பகையை வெல்லல் நாடகம்" அரங்கேறியது. கூத்துப்பழக்குவதில் கையில் பிரம்புடன் மிகவும் கண்டிப்பான அண்ணாவியாக இருந்தார். "ஆட்டம் நறுக்காக இருக்க வேண்டும்; உடல் சரியாக இருக்க வேண்டும்; கூத்து அழகோடு இருக்க வேண்டும்" என்பது அவரின் கொள்கையாக இருந்தது.

சீடர்கள்

  • தங்கவேலு அண்ணாவியார்
  • சின்னையா

அரங்கேற்றிய கூத்துகள்

  • பத்மாவதி நாடகம்
  • பகையை வெல்லல்

உசாத்துணை

  • "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
  • http://arayampathy.lk/maunaguru/320-prof-maunaguru_10