ஏரம்பையர்
ஏரம்பையர் (1847 – 1914) ஈழத்துத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.[1]
அந்தணர் மரபில் தோன்றிய இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாதகல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். ஏரம்பையர் யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை, சம்பந்தப் புலவர், சங்கர பண்டிதர் ஆகிய மூவரிடமும் தென்மொழி, வடமொழி நூல்களைக் கற்றுத் தெளிந்தார். ஆறுமுக நாவலரோடு தோழமை கொண்ட இவர் சித்தந்த சாத்திரத்தில் திறமை மிக்கவராக விளங்கினார். சைவ பரிபாலன சபை ஒன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்டது. அந்த சபையில் சைவ சமய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவர் கணிதத்திலும் வல்லவர். சேட்டுப் புராணத்தை உரை நடையில் எழுதினார். இவர் சிரார்த்த விதி, கனா நூல், சூரனுடைய முற்பிறப்பின் சரித்திரம், நாகேஸ்வரி தோத்திரம், குவாலாலம்பூர்ச் சிவபெருமானூஞ்சல், கவனாவத்தை வைரவரூஞ்சல், மாதகல் பிள்ளையார் ஊஞ்சல், காளிக்கதிரேசர் ஊஞ்சல், நகுலாசல புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். நீதிசாரம் என்னும் நூலினை வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார்.[2]