எஸ். செல்லமுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சங்கரப்பிள்ளை செல்லமுத்து (Sangarapillai Sellamuttu, 25 பெப்ரவரி 1916 - 1993) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தொழிலதிபரும் ஆவார். இவர் கொழும்பு மாநகர சபை முதல்வராக 1951 இல் தெரிவு செய்யப்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

சங்கரப்பிள்ளை யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த அதிகார் ஏ. செல்லமுத்து என்பவருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கேம்பிரிட்ச் திரித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]

கல்வியை முடித்துக் கொண்ட இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சர் சிற்றம்பலம் கார்டினரின் அழைப்பை ஏற்று அவரது சிலோன் தியேட்டர்சு நிறுவனத்தில் 1944 இல் இணைந்து அதன் நிதி, மற்றும் சட்ட அலுவல்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றினார்.[2] 1946 இல் அதன் பணிப்பாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் தலைவரானார்.[2][3]

அரசியலில்

உள்ளூர் அரசியலில் ஆர்வம் கொண்ட செல்லமுத்து 1951 ஆம் ஆண்டில் கொழும்பு கறுவாத்தோட்டம் வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு நகர சபைக்குப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[2] 1951 சனவரி 10 இல் இவர் கொழும்பு நகர முதல்வராகத் (மேயராக) தெரிவு செய்யப்பட்டார்.[4] இவருக்கு 17 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரி. ருத்ரா 11 வாக்குகளைப் பெற்றார்.[4] இவரது காலத்தில் களத்துவாவை நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம், துரொலி பேருந்து சேவை அறிமுகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.[2]

சமூகப் பணிகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5] மோதரை சித்தி விநாயகர் கோவில் புனரமைப்பில் இவர் முக்கிய பங்கள்ளிப்பாளர் ஆவார்.[6] இவர் அரச அடைமான வங்கிப் பணிப்பாளர் சபை, மில்லர்சு, கார்கில்சு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.[2]

குடும்பம்

சங்கரப்பிள்ளை செல்லமுத்து 1941 இல் சொக்கநாதன் தம்பையா என்பவரின் மகள் ஞானேசுவரியை (இறப்பு: மார்ச் 2002) திருமணம் புரிந்தார்.[2] இவர்களுக்கு ராஜன், உமேஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். செல்லமுத்து ஆகத்து 1993 இல் தனது 77வது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._செல்லமுத்து&oldid=24398" இருந்து மீள்விக்கப்பட்டது