எஸ். ஆர். கனகநாயகம்
செனட்டர் எஸ். ஆர். கனகநாயகம் S. R. Kanaganayagam | |
---|---|
இலங்கை செனட் சபை உறுப்பினர் | |
பதவியில் 1949–1957 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 16 மே 1904 |
இறப்பு | 15 மே 1989 சிட்னி, ஆஸ்திரேலியா | (அகவை 84)
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்து ஆங்கிலப் பாடசாலை விக்டோரியா கல்லூரி, சுழிபுரம் யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
சுப்பையா இரத்தினசிங்கம் கனகநாயகம் (Suppiah Ratnasingham Kanaganayagam, 16 மே 1904 – 15 மே 1989) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், இலங்கை செனட் சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
கனகநாயகம் 1904 மே 16 இல் பிறந்தவர்.[1][2] இவர் இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சங்கரத்தை என்ற ஊரில் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை இந்து ஆங்கிலப் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.[1] பாடசாலைக் காற்பந்தாட்ட அணியில் இடம்பெற்றவர்.[1] பள்ளிப் படிப்பை முடித்து இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] சிறிது காலம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆனார். இவர் 1933 ஏப்ரல் 10 இல் வழக்குரைஞர் சபையில் (Bar) இல் சேர்த்துக் கொள்ளப்பட்டு[2] யாழ்ப்பாணத்தில் பணியாற்றினார்.[1] கனகநாயகம் இந்துக் கல்விச் சபைக்கு பணிப்பாளராகவும், பிரதித் தலைவராகவும் இருந்தவர். 1953 ஆம் ஆண்டில் இவர் சிமித் முண்ட் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்று படித்தார்.[2]
கனகநாயகம் சத்தியம்மா செல்வதுரை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சாவித்திரி தேவி, கனக ஈசுவரன், மகேஸ்வரன் என மூன்று பிள்ளைகள்.[1]
அரசியலில்
கனகநாயகம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உட்படப் பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.[1] 1947 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 1949 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தனிச் சிங்களச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்ததை எதிர்த்து அக்கட்சியில் இருந்து விலகினார்.[1] பின்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் யாழ்ப்ப்பாணக் கிளையின் தலைவராக இறக்கும் வரை பணியாற்றினார்.[1]
பிற்கால வாழ்க்கை
கனகநாயகம் திருநெல்வேலியில் இந்து அனாதை விடுதி ஒன்றுக்குப் பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1]
ஈழப்போரில் பாதிப்படைந்து யாழ் நகரில் இருந்து 1984 இல் தனது பிறந்த ஊரான சங்கரத்தைக்குச் சென்று வாழ்ந்து வந்தார்.[1] பின்னர் இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.[1][2] இவர் 1989 மே 15 இல் சிட்னியில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 67–68. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Tharmarajah, K. M. (14 மே 2004). "Advocate S.R. Kanaganayagam: A legal luminary well-known for sound interpretation, wit and humour". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2012-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019012126/http://www.dailynews.lk/2004/05/14/fea04.html.
- ↑ "Classified Ads". Tamil Times VIII (7): 22. June 1989. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1989.06. பார்த்த நாள்: 2013-10-22.
வெளி இணைப்புகள்
- 1904 பிறப்புகள்
- 1989 இறப்புகள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கை செனட் சபை உறுப்பினர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- சுழிபுரம் விக்றோரியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்