எருமை வெளியனார்
எருமை வெளியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவர் பாடியனவாக மூன்று பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 73, புறநானூறு 273, 303 ஆகியவை. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் இவரது மகன்.
எருமை என்பது ஓர் ஊர். இக்காலத்து மைசூர் சங்ககாலத்தில் எருமையூர் என்னும் தூய தமிழ்ச்சொற் பெயரோடு விளங்கியது. எருமையூரன் என்பவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன் (அகநானூறு 36). இதனால் எருமை என்பது ஓர் ஊர் என்பதைத் தெளிவாக உணரலாம். எருமையை 'மை' என்னும் சொல்லால் சங்கநூல்கள் வழங்குகின்றன.
வெளியனார் பாடல் தரும் செய்திகள்
அகநானூறு 73
அவன் பொருள் தேடச் சென்றான். அவன் பிரிவால் அவள் வாடுகிறாள். அவன், தான் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டதை எண்ணி அவள் கலங்குகிறாள். தோழி அவளைத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. அவர் சென்றுள்ள இடத்திலும் மழை பெய்யும். அதனைப் பார்த்து, தான் உறுதிமொழிந்ததை எண்ணி, உடனே திரும்பிவிடுவார் என்கிறாள் தோழி.
தலைவி, தலைக்குளிக்காமல் தலையைப் பின்னி முடிந்திருக்கிறாள். எண்ணெய் வழிய அது முடியப்பட்டிருக்கிறது. முத்தணிந்த அவளது மார்பகங்கள் இரவில் பார்க்கும் பூனையின் கண்கள் போல உள்ளன. கற்பு, மடம், சாயல் ஆகியவை அவளிடம் குடிகொண்டுள்ளன. எனினும் பிரிவுநோய் அவளை வருத்திக்கொண்டிருக்கிறது. இனித் தலைவியின் நிலை என்ன ஆகுமோ? என்று தோழி கவலைப்படுகிறாள். தலைவியும் தானும் இருவர் அல்லர்; ஒருவர்; எண்ணமும் ஒன்றுதான் என்றெல்லாம் தோழி எண்ணிப்பார்க்கிறாள்.
தலைவியை அழைத்துச் சில சொல்கிறாள். இதோ பார்! வானம் மின்னுகிறது. கொடி படர்ந்த புதரில் இருள் நிற நாகம் என்னும் யானை சேணோன் எப்போது துஞ்சுவான் என்று பார்த்துக்கொண்டிருக்கும். சேணோன் வயமான் சிங்கம் போல வலிமை மிக்கவன். (தினையைப் பகலில் பரண்மீது ஏறியிருந்து பறவைகளை ஓட்டி மகளிர் காவல் புரிவர். இரவில் ஆடவர் தீப்பந்தத்தைக் கையில் வைத்துக்கொண்டு பயிர்களை அழிக்க வரும் யானைகளை ஓட்டுவர்) இவனுக்குச் சேணோன் என்று பெயர். சேணோன் தன் கையிலிருக்கும் தீப்பந்தத்தை வீசுவது போல வானம் மின்னுகிறது. அவர் வந்துவிடுவார், என்கிறாள் தோழி.
துறை: குதிரை மறம்.
’போர்புரியும் குதிரை வீரனைப்பற்றிப் பேசுவது’ குதிரை மறம். இந்தப் புறநானூற்றுப் பாடல்கள் இரண்டும் இத்துறையைச் சேர்ந்தவை.
புறநானூறு 273
தாய் ஒருத்தி, குதிரைமீதேறிப் போருக்குச் சென்ற தன்மகனை எண்ணிக் கலங்குகிறாள். 'மா வாராதே, மா வாராதே, எல்லா மாவும் வந்தன, என் இளம் புதல்வன் சென்ற மா வாராதே. இரண்டு ஆறுகள் கூடும் ஆற்றங்கரைகளுக்கு நடுவே இருக்கும் மரம் சாய்வது போல என் செல்வன் சென்ற மா சாய்ந்துவிட்டதோ' - இது அவள் கலக்கம்.
புறநானூறு 303
குதிரைமேல் போருக்குச் சென்ற தன்மகன் வெற்றியோடு திரும்புவதைப் பார்த்த தாய் ஒருத்தி சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நிலத்தையே பின்னுக்குத் தள்ளுவது போல அவன் குதிரை பாய்ந்து சென்றது. போர்க்களத்தில் வேல் வீசி, அவளது மகன் பகைவரின் யானைகளைக் கொன்றான். அவற்றின் பிடிகள் புலம்பும்படி கொன்றான். கடலைப் பிளந்துகொண்டு திமில் செல்வதுபோலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டுச் சென்று கொன்றான். அந்த வேலை ஆட்டிக்கொண்டு இதோ அவன் தன் குதிரைமேல் வருகிறான்.