எம். எஸ். இராஜேஸ்வரி
எம். எஸ். ராஜேஸ்வரி | |
---|---|
எம். எஸ். ராஜேசுவரி 1940களின் இறுதியில் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மதுரை சடகோபன் இராஜேஸ்வரி |
பிறப்பு | 24 பெப்ரவரி 1932 |
பிறப்பிடம் | சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 25, 2018 | (அகவை 86)
இசை வடிவங்கள் | திரைப்படப் பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1947-2018 |
எம். எஸ். இராஜேஸ்வரி (24 பெப்ரவரி 1932 – 25 ஏப்ரல் 2018) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேசுவரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் இராஜசுந்தரி பாடகியும், நாடக நடிகையும் ஆவார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த ராஜேசுவரியை இவர்களது குடும்ப நண்பர் பி. ஆர். பந்துலு திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவரது முதல் பாடல் மையல் மிகவும் மீறுதே.. 1946 இல் வெளிவந்த விஜயலட்சுமி திரைப்படத்தில் இடம்பெற்றது.[1]
காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் இராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[2]
ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி. ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[2]
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்
- சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
- காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
- சேவை செய்வதே... - மகாதேவி (1957)
- சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
- ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
- எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
- மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
- படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
- அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
- சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
- மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
- பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
- பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
- சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
பெற்ற சிறப்புகள்
2013 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்த் திரைப்படத் துறை நூற்றாண்டு விழாவில் இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.[3]
மறைவு
எம். எஸ். ராஜேஸ்வரி 2018 ஏப்ரல் 25 புதன்கிழமை சென்னையில் கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- எம். எஸ். இராஜேஸ்வரி பாடிய பாடல்களின் பட்டியல்
- காலமானது குறித்தான தகவல், புதிய தலைமுறை தொலைக்காட்சி.