என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார் (16 ஆகத்து, 1919 - 26 ஆகத்து 1995, நாச்சியார்கோவில்). 'என்.பி.ஏ.' என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் என்ற பல சிறப்புகளுக்குரியவராகத் திகழ்ந்தவர். தந்தையார் பா. தாவூத்ஷாவின் தாருல் இஸ்லாம் மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் ஏராளமாக எழுதிக் குவித்தவர். தந்தையா பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதி வெளியிடும் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றையும் சிறப்பாக எழுதி வெளியிட்டவர்.
1941 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மாணவராக இருந்தபோதும், அதற்குமுன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்ற காலத்திலேயும் தமிழ்மொழிப் புலமைக்கான பரிசுகளைப் பெற்றவர். பள்ளி மாணவப் பருவத்திலேயே தாருல் இஸ்லாம் இதழில் எழுதத் தொடங்கியவர். 1940 இல் ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.