எதிர்மன்னசிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
(எதிர்மன்ன சிங்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எட்டாம் பரராஜசேகரன்
யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னன்
ஆட்சி1591–1617
முன்னிருந்தவர்புவிராஜ பண்டாரம் (ஏழாம் பரராஜசிங்கன்)
இரண்டாம் சங்கிலி (ஒன்பதாம் செகராசசேகரன்)
முழுப்பெயர்
எதிர்மன்னசிங்கம்
தமிழ்எதிர்மன்னசிங்கம்
மரபுஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சம்
தந்தைபெரியபிள்ளை

எதிர்மன்னசிங்க பண்டாரம் அல்லது எதிர்மன்னசிங்கன் (இ. 1617) என்பவன் 1591 க்கும் 1616 க்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டவனாவான். இவன் பரராசசேகரன் என்னும் அரியணைப் பெயருடன் எட்டாம் பரராசசேகரன் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டவன். இவன், 1570 களில் யாழ்ப்பாணத்து அரசனாக இருந்த பெரியபிள்ளை என்பவனின் மகனாவான்.

எதிர்மன்னசிங்கம் அரசனாதல்

எதிர்மன்னசிங்கத்தின் தந்தையான அரசன் பெரியபிள்ளை இறந்தபோது எதிர்மன்னசிங்கத்துக்குரிய வாரிசு உரிமையையும் தாண்டிப் புவிராஜ பண்டாரம் என்பவன் மன்னனானான். இதற்கான காரணம் தெரியவில்லை. போத்துக்கீசரைப் பகைத்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போத்துக்கீசர் புவிராஜ பண்டாரத்தைப் பிடித்துக் கொன்றனர். எதிர்மன்னசிங்கம், புவிராஜ பண்டாரத்துக்குச் சார்பாகப் போரிற் கலந்து கொண்ட போதும், கொல்லப்படும் தறுவாயில் போத்துக்கீசன் ஒருவனாற் காப்பாற்றப்பட்டான். இவன் பெரியபிள்ளையின் மகன் என்றும், பட்டத்துக்குரிய இளவரசன் என்பதையும் அறிந்த போத்துக்கீசத் தளபதியான அந்தரே பூர்த்தாடு, எதிர்மன்னசிங்கத்தை யாழ்ப்பாண அரசன் ஆக்கினான்.

எதிர்ப்பு

கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ் நாட்டை ஆண்ட இவன் போத்துக்கீசரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுத்தான். தன்னுடன் பழகி வருகின்ற போத்துக்கீசர்களுக்குக் கொடைகளும் அளித்து அவர்களைப் பகையாது இருந்தான்.[1] எனினும், போத்துக்கீசக் கீழ் நிலை அதிகாரிகளினால் இவனுக்குப் பல தொல்லைகள் விளைந்ததுண்டு. கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிரிமார்கள் இவனுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்கள் நல்லூரில் தேவாலயம் கட்டுவதற்கு இவனே நிலமும் பணமும் அளித்துள்ளான். அத்துடன், இப்பாதிரிமார்களிற் சிலரும் பிற அதிகாரிகளும் செய்த முறை கேடான செயல்களையும் அவன் கண்டும் காணாதிருந்தான். இதனால், நாட்டில் அவனுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதனால், எதிர்மன்னசிங்கத்தை நீக்கிவிட்டுத் தஞ்சாவூரிலுள்ள இளவரசன் ஒருவனை அரசனாக்கும் திட்டமொன்றும் உருவானது. இதை அறிந்த எதிர்மன்னசிங்கம், போத்துக்கீசரை அணுகி அவர்கள் துணையுடன் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டான்.

போத்துக்கீசரின் குற்றச்சாட்டு

போத்துக்கீசரைப் பகைக்காது இருப்பதற்காகப் பல நடவடிக்கைகளை எதிர்மன்னசிங்கம் மேற்கொண்டபோதும், போத்துக்கீசருக்கு எதிராகக் கண்டியரசன் தென்னிந்தியாவில் இருந்து போர்வீரர்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இவன் உதவுகிறான் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இந்துத் துறவிகளைப் போல வேடமிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கூடாகச் செல்கிறார்கள் எனப் போத்துக்கீசர் குற்றஞ்சாட்டினர். அவர்கள் உண்மையான துறவிகள் என்றும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை போகிறவர்கள் என்று விளக்கியும் போத்துக்கீசர் அதனை நம்பவில்லை. இதனால் எதிர்மன்னசிங்கம் 300 துறவிகளைப் பிடித்து அவர்களைக் கட்டாயமாகத் தோணிகளில் ஏற்றிக் கடலில் விட்டான்.

மதமாற்ற முயற்சி

கத்தோலிக்கக் குருமார்கள் அரசனைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்குப் பெரு முயற்சி செய்தனர். அவ்வப்போது இணங்குவது போல் காட்டிக்கொண்டபோதும், இதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தான். இதற்காகச் சங்கிலி குமாரனைக் குருமார்கள் குற்றம் சாட்டினர். இறுதியாக அரசன் மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனை மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சியையும் சங்கிலி குமாரன் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

மரணம்

எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மாமனான அரசகேசரியிடம் அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான்.

உசாத்துணைகள்

  1. de Silva, A History of Sri Lanka, p.166
  • Abeysinghe, Tikiri (2005). Jaffna under the Portuguese. கொழும்பு: Stamford Lake. p. 66. வார்ப்புரு:Listed Invalid ISBN.
  • de Silva, K. M. (2005). A History of Sri Lanka. கொழும்பு: Vijitha Yapa. p. 782. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8095-92-3.
  • ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=எதிர்மன்னசிங்கம்&oldid=130817" இருந்து மீள்விக்கப்பட்டது