உளவியல் வகைமை
உளவியல் வகைமை (varieties of psychology) என்பது உளவியலில் உள்ள பல்வகைப் பிரிவுகளைக் கூறுகிறது. இதன் வரலாறு 200 ஆண்டுகளுக்கு மேலானது என்பதை நாம் கருத்திற் கொள்ளவேண்டும். மனம் மிகமிகச் சிக்கலான பரந்த தத்துவமாதலால் உளவியலின் சிற்சில பகுதிகளையே ஆராய்ச்சியாளர் அவரவர் நோக்கும் நிலைக்கு ஒத்தவாறு அறிந்து தெரிவித்துள்ளனர். ஆதலால், உளவியலில் இப்போது பல கொள்கைகள் நிலவி வருகின்றன. அவற்றுள் முக்கியமானவைகளை வருமாறு;-
அமைப்பு நிலை முறை
அமைப்பு நிலை முறையை(Structuralism), இலாக் என்ற மெய்யியல் அறிஞர் காலத்திலிருந்து வழங்கிவருகிறது. மனத்தின் நிலைகளை நன்கு உணர்வதற்கு அவற்றிலடங்கிய பகுதிகளையும், அப்பகுதிகள் இணங்கும் விதிகளையும் கண்டுபிடித்தல் இன்றியமையாததாகும். இந்த ஆராய்ச்சிக்குத் தக்க முறை அகக்காட்சியே ஆகும். இம்முறையில் மன நிலைகளை நோக்குமிடத்துக் கல், மண், இரும்பு முதலியவற்றின் சேர்க்கையே கட்டடமாவதுபோலச் சுவை, நிறம், ஓசை, மணம் முதலிய பொறியுணர்ச்சிகளின் சேர்க்கை அமைப்பே உள்ளமாகியது எனக் கருதப்படுகிறது. இப்பொறியுணர்வுகளே அண்மைத் தொடர்பு, ஒப்புமை, வேற்றுமை போன்ற காரணம் பற்றிப் பல தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுச் சிக்கலான மன நிலைகளாக அமைகின்றன. கவனத்திற்கேற்ப அறிவு தெளிவுபடுவதாலும், மனத்திடையே தோன்றும் நிகழ்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் மாறிக் கொண்டே போவதாலும், பழக்கத்தால் அகக்காட்சி முறையில் நன்கு தேர்ச்சிபெற்றவரே செவ்வையாகக் கவனித்துக் கண்டவற்றைக் கண்டவாறே தெரிவிக்கும் திறமை உடையவராக இருப்பர். இது புலன் வழிக்கொள்கை என்றும் கூறுவர்.
குறைபாடுகள்
இடிட்ச்னர் [1] போன்ற அறிஞர் பலர், மனத்தைப்பற்றிய பல நுட்பமான பொருள்களைக் கண்டு பிடித்துள்ளனர். ஆயினும் இக்கொள்கையில் பின்வரும் சில குறைபாடுகள் உள்ளன.
1. மனத்தின் அடிப்படையான பொறியுணர்ச்சிகளின் சேர்க்கையை நன்கு விளக்கவில்லை.
2. புத்திக்கே முதன்மை கொடுக்கப்பட்டு உணர்ச்சி, முயற்சி முதலியவை புறக்கணிக்கப்பட்டன.
3. அனுபவங்களின் இணைப்பில் கவனம் செலுத்தப்பட்டதேயன்றிக் கருத்தை விளக்கவில்லை.
4. அனுபவங்களின் இருப்பு நோக்கப்பட்டதேயன்றிச் சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்க்கையைப் பொருத்துவதெப்படி என்பது ஆராயப்படவில்லை.
செயல்நிலையறிவகை
செயல்நிலையறிவகை[2] : மேலே குறிப்பிட்ட குறைகளை நீக்கவே, இக்கொள்கைத் தோன்றியது. ஒரு சாரார் மனநிலைகளின் அமைப்பை அறிந்து கொள்வதைவிட, அவற்றின் செயல் பயன்களை உணர்வது இன்றியமையாதது என்பர். அம் மனநிலைகள் வாழ்க்கைக்கு எப்படி உதவுகின்றன என்று காண்பதே முதன்மையானது. பொறியுனர்ச்சி, உற்றுநோக்குதல், நினைவு. திட்டமிடுதல் முதலிய மனச்செயல்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு நமது வாழ்க்கையை அமைக்கும். மனத்தை ஒரு கருத்தா என்னலாம். அது ஒரு நிலையில் நில்லாது இடைவிடாமல் மாறிக்கொண்டேயிருக்கும்; நரம்பு, தசை முதலியவற்றின் மூலம் உடலிலும் உயிரிலும் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் பெரும்பாலும் கீழ்த்தர விலங்குகள் புத்தியின் உதவியை நாடாது மறிவினைகளையும், உறுதியான இயல்பூக்கங்களையும் கொண்டு சூழ்நிலைக்கேற்றவாறு செயல் புரிகின்றன. பரிணாம ஏணியில் ஏற ஏற, விலங்குகளுக்குச் சிக்கலான தொழிலாற்றுந் திறமை ஏற்படுகிறது. முன்னைய கொள்கையைவிட இது மனத்தின் இயல்புகளைத் தெளிவுபடுத்துவதில் சிறந்தது. எனினும், இதனின் குறைகள் தெரியவந்தன.
குறைகள்
சூழ்நிலையோடு பொருந்துதல் என்றால் என்ன? உயிர்வாழ்வா? அப்படியானால் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்ற உயிரைத் தியாகம் செய்பவர் சூழ்நிலையோடு பொருத்தமுறவில்லையா? செவ்வையாக வாழ்தல் தான் பொருந்துதலின் கருத்தாயின் செவ்வையாக வாழ்தலாவது யாது? சூழ்நிலை என்பதுதான் என்ன? ஒவ்வொருவரது சூழ்நிலையும் அவரவரது மனநிலைக்கு ஏற்றதல்லவா? போன்ற வினாக்களுக்கு இதில் தெள்ளிய விளக்கங்கள் பெற இயலவில்லை.
நடத்தை வாதம்
இதன்படி[3] மேற்கூறிய இருகொள்கையினரும் மனநிகழ்ச்சிகளே முக்கியமெனக் கருதுகின்றனர். உடல் மாறுபாடுகளில் கருத்துச் செலுத்தவில்லை மனநிகழ்ச்சிகளுக்குக் கருவியளவில் உடலின் செயல்கள் இருக்கின்றன. எனவே, முன்னவையே முதன்மையானவை என்பர். இதற்கு நேர்மாறாக, உடலின் செயல்களே முதன்மையாக ஆராய்தற்குரியவை என்ற கொள்கையும் உண்டு. உடலைத் தவிர உள்ளம் என்ற தத்துவம் தனியாக இல்லை என்ற இயற்கை வாதத்தை, இக்கொள்கையினர் ஏற்றுக் கொள்கின்றனர். தூண்டல்களுக்கும் அவற்றினடியாகவிளையும் துலங்கல்களுக்கும் (Responses) உள்ள தொடர்பை அறிவதே உளவியலின் வேலையாகும். தூண்டல் இன்னதெனத் தெரிந்தால், அதனால் ஏற்படும் துலங்கல் இன்னதென்று உறுதியாகக் கூறலாம்.
முழுநிலைக்காட்சி வாதம்
முழுநிலைக்காட்சி வாதக் கொள்கைப்படி, முழுநிலைக்காட்சிக் கொள்கையை, ஜெர்மானிய உளவியல் அறிஞர்களான, வர்த்தைமர் (Wertheimer) என்பவரது ஆராய்ச்சியும், கேலர் (Kohler), காப்கா (Koffka) என்ற இருவரும் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் இக்கொள்கை விளக்கம் பெற்றது. உள்ளத்தின் பல அமிசங்களைத் திட்டமாக விளக்குகிறது.
நோக்குடை வாதம்
நோக்குடை வாதக்கொள்கையை (Hormic), மக்டூகல் என்ற உளவியல் நிபுணர் உயிரியின் செயல்கள் அனைத்தும் தாம் கொண்ட நோக்கங்களை நிறைவேற்ற நிகழ்கின்றன என்ற கொள்கையை நிலைநாட்டினார். வேட்கை, நோக்கம், திருப்தியடையக் கூடிய செயல்களைத் தூண்டும் ஆர்வம், சக்தி (Horme) இவை உயிரிகளிடம் உண்டு என்கிறார். இதனை ஷோப்பன் ஹார் என்ற அறிஞர், வாழ்வு வேட்கை என்றும், பெர்க்சன் என்பவர் உயிராற்றல் என்றும், யுங் (Jung) என்பவர் லிபிடோ என்றும் கூறுவது போன்றதாகும். இயல்பூக்கங்களே, ஆதித் தேவைகள், இவை செயல்களுக்குத் தேவையான சக்திக்கு இருப்பிடம் ஆகும். உள்ளக்கிளர்ச்சி, முயற்சி, தன்மை இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் வேறு எந்த முறையிலும் கிடைக்கவில்லை. சமூக அறிவியலுக்கு, உளவியல் அடிப்படை என்று மக்டூகல் கூறுகிறார். சமூகவியலுக்கு முகவுரை என்ற நூலில் சமூகவியல், பொருளாதாரம், அரசியல், சட்டம் முதலான துறைகளுக்குப் பயன்படக் கூடிய உளவியல், நோக்குடை வாதமே என்கிறார்.