உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு பாடல் எண் 264 ஆக வருகிறது. முல்லைத் திணைப் பாடல் அது.
புலவர் பெயர் விளக்கம்
உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காட்டுப் பகுதியில் இருந்த ஓர் ஊர் உம்பற்காடு. இதில் வாழ்ந்த புலவர் இளங்கண்ணனார்.
பாடல் தரும் செய்தி
தலைவன் போர்ப்பாசறையில் இருக்கிறான். கார்காலமும் கூதிர்காலமும் மயங்கி இணையும் காலம் வந்துவிட்டது. பாசறையில் உள்ளவர்கள் இதனை அரசனுக்குச் சுட்டிக் காட்டக்கூடாதா? என்னைப்பற்றி என் தலைவன் நினைக்க வேண்டா. கூதிர் பருவத்தில் அவரது நிலையைப் பற்றியாவது நினைக்க வேண்டாவா? - என்றெல்லாம் தலைவி தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.
உவமை
முசுண்டை(குட்டிப்பிலாத்தி)ப் பூ கும்பல் கும்பலாகப் பூத்துக் கிடப்பது மழைமேகம் இல்லாத வானத்தில் விண்மீன்கள் பூத்துக் கிடப்பது போல உள்ளதாம்.
பழக்க வழக்கம்
கோவலர் கோடல் என்னும் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொள்வர்.