ஈரல் புழு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈரல் புழு Fasciola hepatica
(ஒன்னேகால் அங்குல நீளமுடையது)
மேய்ச்சல் கால்நடைகளைப் பாதிக்கும் இப்புழு Dicrocoelium dendriticum

ஈரல் புழு (Liver fluke) என்பது முக்கியமாகச் செம்மறி ஆடுகளின் ஈரலில் அழுகல் அல்லது நீர்க்கோவை என்னும் நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணிப்புழு ஆகும். இது மாடு, வெள்ளாடு, பன்றி, நாய், குதிரை முதலிய கால்நடைகளுக்கும் மனிதனுக்கும் கூட இந்த நோயை உண்டாக்கும். இந்தப் புழுவில் பல இனங்களுண்டு.பொதுவாக நீரில் வாழும் இயல்புடையன.[1] அவற்றில் லெல்லாம் டைஸ்டோமம் ஹிப்பாட்டிக்கம் என்பது மிகவும் நன்றாகத் தெரிந்த இனம். இந்த தட்டையான புழு. துளசியிலையைப் போன்ற வடிவுள்ளது. ஒன்னேகால் அங்குல நீளமும் அரை அங்குல அகலமும் இருக்கும். இது இறைச்சி தொழிலில் நட்டம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.[2]

வளரியல்பு

இது வட்டுப்போன்ற இரண்டு உறிஞ்சிகளின் உதவியால் செம்மறி ஆட்டின் பித்தநாளத்தினுள்ளே ஒட்டிக் கொண்டு வாழும். இந்த உறிஞ்சிகளில் ஒன்று இதன் உடலின் முன் முனையிலிருக்கும்; புழுவின் வாய் இந்த உறிஞ்சியின் நடுவில் அமைந்திருக்கும். மற்றொன்று இதற்குச் சற்றுப் பின்னே உடம்பின் நடுக்கீழ்க் கோட்டிலே இருக்கும். வாய்க்குப் பின்னால் உடம்பின் கீழ்ப் பாகத்தில் ஒரு சிறிய தொளை உண்டு. அது பிறப்புறுப் பின்வாயில், அந்த வாயில் வழியாக ஏறக்குறைய 40,000 முட்டைகள் வெளிவரும். இம்முட்டைகள் பித்தம் ஓடி வரும்போது அதனோடு கலந்து ஆட்டின் குடலுக்குள் வரும். பிறகு பிழுக்கையோடு வெளியே வரும். பிழுக்கை ஈரமான அல்லது சதுப்பான இடத்தில் விழுமானால், புழுவின் முட்டை 9 நாள் பொறுத்து [math]\displaystyle{ 1/25 }[/math]அங்குல நீளமுள்ள இளம் உயிரியாகப் பொரிக்கும். இந்த இளம் உயிரி அந்த இடத்திலுள்ள நீரில் நீந்திக்கொண்டிருக்கும். இதற்கு அப்போது முட்டையிலிருந்து கிடைத்த உணவே போதும். வேறு உணவு வேண்டியதில்லை. அதற்கு வாயும் இல்லை. ஆனால் அது 24 மணி நேரமே அவ்வாறு உயிருடனிருக்க முடியும். பிறகு இறந்துவிடும். இதற்குள் அது நீரில் வாழும் பிளனார்பிஸ் வைவிபேரா என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு நத்தையை எதிர்ப்படுமானால், அதன் உட லுக்குள்ளே தொளைத்துக் கொண்டுபோய் வளர்ந்து, அங்கு ஒரு பைபோன்ற கூடு ஆகிவிடும். ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் லார்வாவின் திசுக்கள் 5-8 சிறிய தண்டு போன்ற உயிர்களாக மாற்றியமைக்கப்படும். அந்தத் தண்டு போன்ற உயிர்களை ரெடியா என்பார்கள்.

ரெடியாக்கள் கூட்டைவிட்டு, நத்தையின் ஈரலுக்குள் தொளைத்துக்கொண்டு போகும். அங்கு அவை வளர்ச்சி யடைந்து , 1.5 அங்குல நீளமாகும். நாளடைவில், அதாவது நத்தையுடலில் புகுந்த 41 முதல் 7 வாரத்தில், ரெடியாவின் உடலுக்குள் தலைப் பிரட்டை போன்ற லார்வாக்கள் உண்டாகும். அவற்றின் உடல் வட்டமாகவும், தட்டையாகவும், நீண்டவாலுடன் கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு ரெடியாவிலிருந்தும், இப்படிப்பட்ட தலைப்பிரட்டை போன்ற லார்வாக்கள் பல வெடித்துப் புறப்பட்டு, நத்தையுடலைத் தொளைத்துக்கொண்டு வெளியே வந்து, நீரில் நீந்தித் திரியும். இரண்டு மணி நேரத்தில் அவை புல்லின்மேலே ஊர்ந்து சென்று இலை நுனியை அடையும். அங்கு வால் மறைந்து விடும்.

இளம்புழுக்கள் சிறு கூடுகளாக ஆகி, இலையின் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஈரம் இருக்குமானால் இக் கூடுகள் 6 மாதத்துக்கு மேல் உயிருள்ளவையாக இருக்கும். இங்கு வந்து மேயும் ஆடு புல்லைத் தின்னும் போது இக்கூடுகள் ஆட்டின் இரைப்பைக்கு வந்து சேரும். ஆடுகளில் குடலிள் உள்ள நொதிகள் இக்கூட்டின் மேலுரையினை கரைப்பதால், உள்ளிருந்து இளைய ஈரல் புழு வெளியேறும். இப்புழு மெல்ல ஊர்ந்து பித்த நாளத்தினுள் நுழைந்து, அதன் வழியாக ஈரலை அடையும். அல்லது இரத்தத்தின் வழியாகவும் ஈரலை வந்து சேரும். ஒவ்வோர் ஆட்டின் ஈரலிலும், பித்த நாளத்திலும் சுமார் 200 இளம்புழுக்கள் வரை காணப்படலாம். ஒவ்வொரு புழுவின் உடலினுள்ளும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இரண்டும் வளரும்.

மேற்கோள்கள்

  1. Diseases and Disorders Volume 2. Tarrytown, NY: Marshall Cavendish COrporation. 2008. p. 525. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7772-3.
  2. Piedrafita, D; Spithill, TW; Smith, RE; Raadsma, HW (2010). "Improving animal and human health through understanding liver fluke immunology". Parasite Immunology 32 (8): 572–581. doi:10.1111/j.1365-3024.2010.01223.x. பப்மெட்:20626812. 

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஈரல்_புழு&oldid=17916" இருந்து மீள்விக்கப்பட்டது