இளவரசர் காங்கின் மாளிகை
இளவரசர் காங் மாளிகை [1] இளவரசர் குங் மாளிகை என்றும் அழைக்கப்படும் இது ஒரு அருங்காட்சியகமும் சுற்றுலா தலமுமாகும். இது பெய்ஜிங்கில் உள்ள சிச்செங் மாவட்டத்தில் சிச்சாஹாய் ஏரிக்கு வடக்கே அமைந்துள்ளது. இது பெரிய சிஹியுவான் பாணி மாளிகைகள் மற்றும் தோட்டங்களைக் கொண்டுள்ளது . கியான்லாங் பேரரசரால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு அதிகாரியான கேசன் என்பவருக்கு முதலில் கட்டப்பட்டது. பின்னர் இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாளிகையில் வசித்த மஞ்சு இளவரசரும் மறைந்த சிங் வம்சத்தின் செல்வாக்குமிக்க அரசியல்வாதியுமான இளவரசர் காங்கின் பெயரிடப்பட்டது.
வரலாறு
சீன வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அதிகாரி என்ற பெயர் பெற்ற கியான்லாங் பேரரசரின் ஆட்சியில் ஒரு முக்கிய அரசவை அதிகாரி கேசன் என்பவருக்காக சிங் வம்சத்தின் போது 1777 ஆம் ஆண்டில் இந்த மாளிகை கட்டப்பட்டது.[2] சிறு வயதிலிருந்தே, கேசன் கியான்லாங் பேரரசரின் ஆதரவுடன் இருந்தார். மேலும், ஏகாதிபத்திய நிர்வாகத்தில் விரைவாக பதவி உயர்ந்து அரசவையில் உயர் மற்றும் பணக்கார அதிகாரிகளில் ஒருவரானார். 1799 ஆம் ஆண்டில், கியான்லாங் பேரரசரின் வாரிசான ஜியாகிங் பேரரசர், கேசனை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி, தூக்கிலிட்டு, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தார். பின்னர், கியான்லாங் பேரரசரின் 17 வது மற்றும் இளைய மகனான இளவரசர் கிங்கிற்கு இந்த மாளிகை வழங்கப்பட்டது.
1851 ஆம் ஆண்டில், சியான்ஃபெங் பேரரசர் தனது ஆறாவது சகோதரர் இளவரசர் காங்கிற்கு இந்த மாளிகையை வழங்கினார்.
1921 ஆம் ஆண்டில், சிங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இளவரசர் காங்கின் பேரன் புவே, கத்தோலிக்க திருச்சபையின் புனித பெனடிக்ட் சபைக்கு ஒரு அடமானமாக இந்த சொத்தை வழங்கினார். பெனடிக் சபை ஒரு பல்கலைக்கழகமாக பயன்படுத்த பாழடைந்த மாளிகையை மீட்டமைக்க முதலீடு செய்தது. 1951 ஆம் ஆண்டில் பாதிரியார்கள் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படும் வரை இது புரென் கத்தோலிக்க பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது.
சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது, 1980களில் புத்துயிர் பெறும் வரை இந்த மாளிகையை பெய்ஜிங் ஏர் கண்டிஷனிங் தொழிற்சாலை பயன்படுத்தியது. 1982 ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் தேசிய மட்டத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கிய வரலாற்று மற்றும் கலாச்சார தளமாக இது அறிவிக்கப்பட்டது. நவம்பர் 1996 முதல், இதன் கட்டிடங்களும் தோட்டங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. 2008 ஆம் ஆண்டு ஆகத்து 24 ஆம் தேதி பெய்ஜிங்கில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் போது இந்த மாளிகையின் புதுப்பித்தல் பணிகள் நிறைவடைந்தன.
அமைப்பு
இந்த மாளிகை பெய்ஜிங்கில் மிகவும் நேர்த்தியான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட ஏகாதிபத்திய மாளிகைகளில் ஒன்றாகும். மேலும் இது பல குடும்பங்களை தங்க வைக்கப் பயன்படுகிறது. இது மொத்தம் 60,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மாளிகையின் கட்டிடங்கள் தெற்கில் அமைந்துள்ளன; தோட்டங்கள் வடக்கில் உள்ளன. இந்த கட்டிடங்களில் பல சிஹேயுவான் முற்றங்கள், இரண்டு மாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு பெரிய பீக்கிங் இசைநாடக அரஙகம் ஆகியவை அடங்கும். சில முற்றங்களில் மாளிகையின் வரலாறு குறித்த நிரந்தர கண்காட்சிகள் மற்றும் தற்காலிக கலை கண்காட்சிகள் உள்ளன.
இந்த மாளிகையைத் தவிர, 28,000 சதுர மீட்டர் தோட்டத்தில் 20 அழகிய இடங்கள், பெவிலியன்கள், சியாங்சுவில் உள்ள தாய் ஏரியிலிருந்து உருவாகும் பாறை உள்ளிட்ட செயற்கை மலைகள் மற்றும் குளங்கள் உள்ளன.
எட்டு மீட்டர் நீளமுள்ள சிற்பத்தூண் ஒன்றுள்ளது. இது காங்க்சி பேரரசரின் கையெழுத்தை அடிப்படையாகக் கொண்ட சீன எழுத்தைக் 福 (fú: lit "fortune") கொண்டுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள்
2005 ஆம் ஆண்டில், இந்த மாளிகை 200 மில்லியன் யுவான் மதிப்புள்ள புதுப்பிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளது.[3] நவம்பர் 2006 இல், கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மாளிகை 24 ஆகத்து 2008 இல் "இளவரசர் காங்கின் மாளிகை" என்றப் பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது. இது மஞ்சு பிரபுக்களின் வாழ்க்கையையும் சிங் வம்சத்தின் அம்சங்களையும் காட்டுகிறது.
இந்த மாளிகையின் உள்ளே பெய்ஜிங் இசைநாடக அரங்கம் பெய்ஜிங் நாடகங்களை மட்டுமல்லாமல், சீன இசைநாடகங்களின் பிற முக்கிய வடிவங்களையும் கொண்டுள்ளது. ஆகத்து 2008 இல், குன்க் செயல்திறன் குழு ஜியாங்சு குன்க் அரங்கத்தின் புளோட்டிங் டிரீம்ஸ் என்ற நிகழ்ச்சியை ஒரு வாரம் நிகழ்த்தியது.[4]
இது உலக நினைவுச்சின்ன நிதியின் 2018 ஆபத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[5]
புகைப்படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Official site". Beijing: Prince Kung's Palace Museum. 2014 இம் மூலத்தில் இருந்து 2018-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180829110151/http://www.pgm.org.cn/newenglish/index.shtml.
- ↑ Li, Raymond (24 August 2008). "Mansion of notorious Qing official draws large crowds for opening". South China Morning Post இம் மூலத்தில் இருந்து 29 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180829053620/https://www.scmp.com/article/650157/mansion-notorious-qing-official-draws-large-crowds-opening.
- ↑ Li, Raymond (24 August 2008). "Mansion of notorious Qing official draws large crowds for opening". South China Morning Post. https://www.scmp.com/article/650157/mansion-notorious-qing-official-draws-large-crowds-opening.
- ↑ "Kunqu returns to its debut venue". China Economic Net. 2008-08-19 இம் மூலத்தில் இருந்து 2018-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180903151046/http://en.ce.cn/National/culture/200808/19/t20080819_16540029.shtml.
- ↑ "Grand Theater, Prince Kung's Mansion". World Monuments Foundation. https://www.wmf.org/project/grand-theater-prince-kungs-mansion.
நூலியல்
வெளி இணைப்புகள்
Coordinates: 39°56′11.52″N 116°22′45.53″E / 39.9365333°N 116.3793139°E