இளங் கீரனார்
Jump to navigation
Jump to search
இளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 18 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399, குறுந்தொகை 116, நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 எண் கொண்ட பாடல்களாக அவை அமைந்துள்ளன. அனைத்தும் அகப்பொருள் பாடல்கள். இவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித்திணைப் பாடல். ஏனையவை பாலைத்திணைப் பாடல்கள்.
பொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
பாடல்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க செய்தி
- சோழரின் உறந்தைப் பெருந்துறை அறல் என்னும் ஆற்றுமணல்-படிவு போல கூந்தலை உடையவளாம் தலைவன் விரும்பும் காதலி.[1]
- மரையா என்னும் காட்டுமான்-ஆட்டை அடித்துப் புலி உண்ட மிச்சத்தை எருவைக் கழுகு தன் பெண்கழுகுக்கு கொண்டு வந்து தரும் காட்டை நினைத்த தலைவன் மனைவியை விட்டுப் பிரியாமல் நின்றுவிடுகிறானாம்.[2]
- உதியன் போரிட்ட களத்தில் இயவர் குழல் ஊதினர்.[3]
- பொறையன் கொல்லிமலை அரசன்.[4]
உவமை நலம்
- ஓமை மரத்துச் செதிள் முதலை உடம்பு போல் இருக்கும்.[2]
- காற்றில் தேக்கிலை பறப்பது பருந்து பறப்பது போல இருக்கும்.[5]
- தாமரையோடு குவளை பூத்திருப்பது போல அவள் முகத்தில் கண் பூத்திருக்கும்.[6]
- குவளை மழையில் நனைவது போல அழுதாள்.[7]
இசை
- மூங்கிலில் வண்டு துளைத்த துளை வழியாகக் காற்று செல்லும்போது ஆயர் ஊதும் குழல் போல் ஓசை கேட்குமாம்.[8]
- காற்றில் அசையும் புதர் மூங்கில் ஒலி யானை பிளிறுவது போல இசை எழுப்பும்.[9]
- ஆம்பல் அம் தீங்குழல் இயவர் ஊதும் இசை.[3]
வாழ்வியல்
- நெல்லிவட்டு - சிறுவர் நெல்லிக்காயை வட்டாக (கோலிக்குண்டாக) வைத்துக்கொண்டு விளையாடினர்.[10]
- இரலை மானின் கொம்பு திரிந்து இருக்கும்.[11]
- மரைமான் நெல்லிக்கனிகளை விரும்பி மேயும் [12]
- அம்பு நுனியில் தீப்பந்தம் வைத்து எய்தனர்.[13]
- மகளிர் மாலையில் பிறை தொழுவர்.[14]
- பல்லியை வாழ்த்தினர்.[15]
- மகளிர் நெற்றியில் திலகம் வைத்துக்கொள்வர்.[16]
- மகளிர் மார்பில் தொங்கும் துணியில் குழந்தைகளைச் சுமந்து செல்வர்.[17]
- பாவை என்னும் பொம்மலாட்டம்.[18]
சொல்லாட்சி
இவரது பாடல்களில் அரிய பல பழமையான சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. இதனாலும், உதியன் அரசனைக் குறிப்பிடுவதாலும் இவர் காலத்தால் முந்திய புலவர்களில் ஒருவர் எனத் தெரியவருகிறது.
- பழஞ்சொல்
- அருமுனை இயவு - போர்க்களம்
- ஆனாது கவரும் - இடைவிடாது
- எல்லையும் இரவும் – பகலும் இரவும்
- ஐ மென் தூவி – வியப்புக்கு உரிய – தொல்காப்பிய உரிச்சொல்
- கடிபதம் – மணம் வீசும் பதம்
- செயிர் தீர் கொள்கை – களங்கமற்ற கோட்பாடு
- சேக்குவம் கொல்லோ – பாதுகாப்பாக உறங்குதல்
- சேண் உறை புலம்பு- தொலைவில் வாழும் தனிமை
- ஞெலி – தீப்பந்தம்
- திருகுபு முயங்க – வளைத்துத் தழுவ
- நீட்டுவிர் அல்லிரோ – காலம் கடத்துவீர்
- பருவரல் எவ்வம் – உடல் துடிக்கும் துன்பம்
- மதிநாள்-திங்கள் – நிறைமதி
- மான்று வேட்டு எழுந்த – ஒருபொருள்-பன்மொழி
- வில்லேர் உழவர்
- வீ தேர் பறவை – பூ தேடும் ஈ
அடிக்குறிப்பு
- ↑ குறுந்தொகை 116
- ↑ 2.0 2.1 அகநானூறு 3
- ↑ 3.0 3.1 நற்றிணை 113
- ↑ நற்றிணை 346
- ↑ அகம் 299
- ↑ அகம் 361
- ↑ அகம் 395
- ↑
- புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
- அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
- நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
- ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், (அகநானூறு 225)
- ↑ நற்றிணை 62
- ↑ கட்டளை அன்ன வட்டரங்கு அமைத்து, கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - நற்றிணை 3
- ↑ திரிமருப்பு இரலை (அகம் 371)
- ↑ அகம் 399
- ↑ ஆடவர் ஞெலி நெஞ்யோடு பிடித்த வார்கோல் அம்பினர் - அகம் 239
- ↑ ஒல் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல் என் மாலை - அகம் 239
- ↑ பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறு என - அகம் 289
- ↑ திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் - நற்றிணை 62
- ↑
- குரும்பை மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணிப்
- பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
- மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
- அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
- செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி - நற்றிணை 269
- ↑ பொறிக் கயிறு அறுந்த பாவை போல் அவள் கலங்கினாள் - நற்றிணை 308