இளங் கீரந்தையார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இளங்கீரந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை நூல்தொகுப்பில் 148 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

புலவர் பெயர் விளக்கம்

கீரன், தந்தை என்னும் சொற்கள் இணையும்போது கீரந்தை என அமையும். இப்படி அமைவதைத் தொல்காப்பியமும் சுட்டிக் காட்டுகிறது. இதனால் இப்புலவர் கீரன் என்பவரின் தந்தை எனலாம்.

புலவர் பெயர் ஒப்புநோக்கம்

கீரந்தையார் என்பவர் ஒரு புலவர். இவர் அந்தப் புலவர் கீரந்தையாரின் தம்பி என்பதால் இளங்கீரந்தையார் என வழங்கப்பட்டிருக்கலாம்.

பாடல் தரும் செய்தி

முல்லைத்திணை நெறியை இவரது பாடல் தெரிவிக்கிறது. தலைவன் பிரிந்து சென்றான். அவன் திரும்பி வருவதாகச் சொன்ன பருவம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. தலைவி கவலைக் கொள்கிறாள். அவர் சொன்ன கார்ப்பருவம் இது அன்று என்று சொல்லித் தோழி அவளைத் தேற்றுகிறாள். இல்லையாயின் இது என்ன என்று தலைவி கேட்கும் கேள்வி இந்தப் பாடல்.

கொன்றைப்பூவும், குருந்தம் பூவும் பூத்துக் குலுங்குகின்றனவே, கார்காலம் அல்லாமல் இது வேறு என்ன?, என்பது தலைவியின் வினா.

உவமை

செல்வச் சிறுவர்கள் தம் சீறடிகளில் கிண்கிணி அணிந்திருப்பார்களாம். அந்தக் கிண்கிணியில் உள்ள மணிகள் தவளையின் வாயைப் போன்ற அமைப்பைக் கொண்டனவாம். இந்தக் கிண்கிணியைப் போன்று கொன்றைப்பூ பூத்திருக்குமாம்.

"https://tamilar.wiki/index.php?title=இளங்_கீரந்தையார்&oldid=12299" இருந்து மீள்விக்கப்பட்டது