இளங்கோ கிருஷ்ணன்

பா. இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு: 15 மார்ச் 1979) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.[1] இலக்கியம், இதழியல், திரைப்படம் என மூன்று வெளிகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். குறிப்பாக இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நுண்கதை என்ற படைப்பாக்க வடிவங்களிலும் விமர்சனத்திலும் இயங்கிவருபவர். தத்துவம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளிலிம் இவர் பங்களித்துள்ளார். இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 1 (2022) திரைப்படத்தில் பாடலாசிரியாகப் பணியாற்றியுள்ளார்.[2] இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் 10 பாடல்கள் எழுதியுள்ளார்.[3]

இளங்கோ கிருஷ்ணன்
Ilango krishnan.jpg
பிறப்பு பா.இளங்கோவன்
பணி எழுத்தாளர், பாடலாசிரியர், ஊடகவியலாளர்
குடியுரிமை இந்தியர்
கல்வி பட்டயக் கணக்கறிஞர்
இளங்கலை வணிகவியல்
இணையதளம் ilangokrishnan

பிறப்பு

கோவை மாவட்டத்தில் பாப்பநாயக்கன் பாளையம் எனும் ஊரில் 1979 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் பிறந்த இளங்கோ கிருஷ்ணனின் இயற்பெயர் பா.இளங்கோவன். இவரின் தந்தை பெயர் ச.பாலகிருஷ்ணன், தாயார் பெயர் பா.சரஸ்வதி.

கல்வி

பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள உள்ள சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய இவர் ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் தனது உயர்நிலைக்கல்வியையும் இராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேநிலைக்கல்வியையும் கற்றுள்ளார்.மேலும் இவர், பட்டயக்கணக்காயர் கல்வியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

பணி

ஆனந்த விகடனில் உதவியாசிரியாராக இருந்த இவர், ‘விகடன் தடம்’ என்ற இலக்கிய இதழ் தொடங்கப்பட்ட போது அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தவர். தொடர்ந்து சன் குழுமத்தின் நாளிதழான தினகரன் பத்திரிகையிலும் பின்னர் குங்குமம் பத்திரிக்கையிலும் பணிபுரிந்து வருகிறார்.

நூல்கள்

  1. காயசண்டிகை (கவிதைகள்)
  2. பட்சியன் சரிதம் (கவிதைகள்)
  3. பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் (கவிதைகள்)
  4. வியனுலகு வதியும் பெருமலர் (கவிதைகள்)
  5. மருதம் மீட்போம் (விவசாய வரலாறு தொடர்பான கட்டுரைகள்)

விருதுகள்

  • தேவமகள் அறக்கட்டளை விருது (2007)
  • சென்னை இலக்கிய விருது (2015)
  • வாசக சாலை இலக்கிய விருது (2021)

சிறப்புகள்

கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்பாடல் எனப் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரின் படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.[4] இவரின் நுண்கதையான ‘ஒற்றைக்குரல்” தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சிறப்புத் தமிழ் பாடத்தில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. [5] மேலும் இவரின் கவிதையான அகத்தியம் என்பதில் ஒரு பகுதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் இசை என்பவருடன் இணைந்து 'கருக்கல்' என்ற சிற்றிதழை நடத்தியவர். விகடன் தடம் இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இளங்கோ_கிருஷ்ணன்&oldid=9191" இருந்து மீள்விக்கப்பட்டது