இர. ந. வீரப்பன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
இர. ந. வீரப்பன் |
---|---|
பிறப்புபெயர் | வீரப்பன் |
பிறந்ததிகதி | 8 சூன் 1930 |
பிறந்தஇடம் | நுவரெலியா, இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 3, 1999 | (அகவை 69)
பணி | ஆசிரியர் |
தேசியம் | மலேசியர் |
பெற்றோர் | இரத்தினம் (தாய்) நடேசன் (தந்தை) |
பிள்ளைகள் | திருமேனி, பொன்னி, அருணன், முல்லை |
இர. ந. வீரப்பன் (சூன் 8, 1930 - செப்டம்பர் 3, 1999) மலேசியத் தமிழறிஞரும், தமிழாசிரியரும் ஆவார். ஏறக்குறைய 43 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டி கள ஆய்வுப்பணி செய்து 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டவர்.[1] மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்,[2] தமிழ் இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளைத் தோற்றுவித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இர. ந. வீரப்பன் இலங்கையின் மலையகத்தில் நடேசன், இரத்தினம் ஆகியோருக்குப் பிறந்தவர். தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார். 1953 இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி எனப் பல பள்ளிகளில் பணியாற்றி 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1990 ஆம் ஆண்டு வரையில் கிள்ளான் அப்துல் சமது இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்தார்.[1]
1990களில் இவர் உலகத் தமிழர் குரல் என்ற மாதாந்த சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார்.
தமிழகக் கவிஞர் கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த சுரதா முருகையன் ஆகியோர் இர.ந.வீரப்பனைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளனர். இவரது மகள் வீ. முல்லை நாகராசு ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.[1]
எழுதிய சில நூல்கள்
- மலாய் தமிழ் ஆங்கில அகராதி
- மலேசியத் தமிழர்கள்[3]
- உலகத் தமிழர் (புரட்சிப் பண்ணை, 1985)
- கானல்வரி (புரட்சிப் பண்ணை, 1985)
- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வரலாறு (1992)
- இலக்கிய இதயம் (புரட்சிப் பண்ணை, 1987)[4]
உசாத்துணை
- ↑ 1.0 1.1 1.2 "மலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்". 4 செப்டம்பர் 2009. http://thirutamil.blogspot.com.au/2009/09/blog-post_04.html. பார்த்த நாள்: 30 மே 2014.
- ↑ மலேசியத் தமிழ் இலக்கியம் 2007. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். அக்டோபர் 2007.
- ↑ "இந்த வாரம் கலாரசிகன்". தினமணி. 4 டிசம்பர் 2011. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article635580.ece. பார்த்த நாள்: 30 மே 2014.
- ↑ "இலக்கிய இதயம்" இம் மூலத்தில் இருந்து 2015-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151031084223/http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=328905. பார்த்த நாள்: 30 மே 2014.