இரா. மதிவாணன்
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (ஏப்பிரல் 2024) |
பேராசிரியர். இரா. மதிவாணன் (பிறப்பு: சூலை 1, 1936) சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் ஆவார். இவர் கல்வெட்டு எழுத்தாய்வாளரும், சொற்பிறப்பியல் எழுத்தாளரும் ஆவார். இவர் வரலாற்று ஒளிஞாயிறு[தெளிவுபடுத்துக] என்னும் விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 1936 ஆண்டின் சூலை முதலாம் நாளில் தருமபுரி - உகுநீர்க்கல் ( ஒகேனக்கல்) சாலையிலுள்ள பென்னாகரத்தில் பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார்.[1]
தொழில்முறை வாழ்க்கை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றவர், அவருடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பாவாணருக்குப் பின்னர் அகர முதலித்திட்டத்தில் இயக்குநராகித் திறமுடன் பல மடலங்களை உருவாக்கினார், சொற்பிறப்பியல் அகர முதலியின் 6 தொகுதிகளை வெளியிட்டார். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆய்விலும், எழுத்தாய்விலும் உலகப்புகழ் பெற்றவர், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டவர். வடநாடு முழுவதும், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் சொற்பிறப்பியல் மொழி ஆய்வுக்காகப் பயணம் செய்தவர்.[2][3].
ஆய்வு
இவர் தமிழறிவு, சிந்துவெளி எழுத்தாராய்ச்சி, மொழியியல், சொற்பிறப்பியல், தொன்மை நாகரிக ஆராய்ச்சி, இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, கல்வெட்டு, பாறை ஓவிய எழுத்துகள் போன்ற பல துறைகளிலும் சிறந்த ஆய்வாளர் எனப் பெயர் பெற்றவர். மேற்கண்ட துறைகளில் அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர்.[4].[5][6][7].[8]
விருதுகளும் பரிசுகளும் பராட்டுகளும்
இந்தப் பிரிவு எந்த ஆதாரங்களையும் மேற்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை. |
- 1956ஆம் ஆண்டில் திருக்குறளின் 1330 குறளையும் முழுமையாக ஒப்பித்ததற்காகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதற் பரிசு வழங்கியது.
- 1992ஆம் ஆண்டில் தமிழக அரசின் ‘திருக்குறள் நெறிபரப்பு மையம்’ ‘ திருக்குறள் செம்மல்’ என்னும் விருது வழங்கியது.
- ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலுக்குச் சென்னை கிறித்துவ இலக்கிய கழகம் (CLS) முதற்பரிசு வழங்கியது.(1977).
- வங்கிக் கலைச்சொல் அகராதி பதிப்புக் குழுவில் பணியாற்றியதற்காகப் பாரத மாநில வங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.
- 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் குமரிக்கண்டம் என்னும் வரலாற்றுக் குறும்படம் திரையிடப்பட்டது. இது இவருடைய ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டதாலும், திரைப்பட உருவாக்கத்திற்கு இயக்குநர் ப.நீலகண்டனாருடன் உடனிருந்து பணியாற்றியதற்காகவும், தமிழ்நாட்டு முதலமைச்சரின் பாராட்டும் தஞ்சாவூர் கலைத்தட்டும் வழங்கப்பட்டன.
- மலேசியத் தமிழ்க் குயில் முனைவர் கா.கலியபெருமாள் அவர்கள் தம் சொந்தச் செலவில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சிறப்பு சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தாமும் உடனிருந்து, இவரது பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார். ஈப்போவிலுள்ள பாவாணர் தமிழ்மன்றமும் வள்ளலார் ஒளிநெறி மன்றமும் இணைந்து ‘’தமிழ்ஞாயிறு’’ என்னும் விருது அளித்தன. பாரிட்டு புந்தர் தமிழ்மன்றம் ‘’வரலாற்று ஒளிஞாயிறு’’ எனப் பாராட்டி சிறப்பித்தது.
- 2002 ஆம் ஆண்டில் சிகாகோவிலுள்ள அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, பாவாணர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்தது. 'சிந்துவெளி முத்திரைகளில் உள்ள எழுத்து தமிழே' என்றும், தென்னாட்டிலிருந்து சிந்து வெளி நாகரிகம் வடநாட்டிலும் பாகித்தானத்திலும் ஆபகானித்தானத்திலும் பரவியது. சிந்துவெளி எழுத்துகள் இந்தியப் பிற மாநில ஒதுக்குப் புறங்களிலும் தென்னாட்டு மக்களின் அன்றாட வாழ்விலும் புழக்கத்தில் உள்ளன. மலைக்குகைகளிலும் பாறை ஓவியங்களிலும் சிந்துவெளி எழுத்துகள் தென்னாட்டில் உள்ளன எனும் உண்மைகளை தன் ஆங்கில நூல்கள் வெளிப்படுத்தியதால் ‘’ பேருண்மையாளர்’’ என்னும் பட்டயமும் விருதும் வழங்கிச் சிறப்பித்தது. அட்டுலாண்டா, பிளோரிடா, கலிபோர்நியா, தமிழ் மன்றங்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தின.
இயற்றிய நூல்கள்
- குளிர்காவிரி-1969
- எல்லைப்போர் வில்லுப்பாட்டு-1966
- ஒரு பூமாலையின் பாமாலை-2006
- குறள் அறிமுகம்-1978
- குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்-1978
- திருக்குறள் தேனமுதம்-2005
- பாவாணார் ஆய்வு நெறி-1990
- Language Archaeology-2002
- சொல் என்ன சொல்கிறது-2003
- சொல்லாய்வுக் கட்டுரைகள் 2-2005
- பாவாணாரின் ஞால முதன் மொழிக் கொள்கை-2006
- தமிழ் வளர்ச்சி-1978
- Quotations on Tamil and Tamil Culture-1981
- கன்னடம் மூலம் ஆங்கிலம் கற்க-1997
- தமிழாய்வில் கண்ட உண்மைகள்-2005
- இலெமூரியா முதல் அரப்பா வரை-1977
- கடல்கொண்ட தென்னாடு முதல் சிந்துவெளி வரை-2001
- உலக நாகரிகத்துக்குத் தமிழரின் கொடை
- நாவினில் நற்றமிழ்
- சாதிகளின் பொய்த்தோற்றம்
- அகர முதலி (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி, தமிழக அரசு. 6 தொகுதிகள் )-1986-2001
- அயல்சொல் கையேடு-1996
- ஆந்திர நாட்டு அகநானூறு (காதா சப்தசதி)-1979
- சிவகோட்டாச்சாரியரின் நல்லறக் கதைகள் (சமண பெரியபுராணம்)-1978
- கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்-1978
- பி.எம்,சீகண்டையா - 1979
- டி. பி. கைலாசம் – 1990
- சங்கர குருப்பு-1998
- அபிநவகுப்தர்-
- தொல்காப்பியர் காலம்
- சிலம்பின் காலக்கணிப்பு
- கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்-2005
- சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி
- Indus Script Dravidian-1995
- Indus Script Among Dravidian Speakers-1995
- Indus Dravidian Civilization
- Phonetic Value of the Indus Script-1995
- திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்-2004
- சிந்துவெளி எழுத்தின் திறவு-1991
- தருமபுரி மாவட்டப் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள்-2002
- நாடகம்[9][10][11][12][13][14]
- presence of ancient Tamil words in other Indian languages [15]
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "பாவாணரும் செல்லாராய்ச்சியும்-தமிழ்த்திரு. இரா. மதிவாணன் மேனாள் அகரிமுதலித்திட்ட இயக்குனர், சென்னை". Archived from the original on 2017-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ சொல்லாய்வுக் கட்டுரைகள் / இரா. மதிவாணன்.
- ↑ பிராகிருத மொழி
- ↑ "மேலை நாகரிகங்களில் தடம் பதித்த தமிழ்". Archived from the original on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
- ↑ "உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி!!-பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது". Archived from the original on 2021-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ "மொழிஞாயிறு பாவாணர் இறுதிப் பேருரை இரா.மதிவாணன் உரை". Archived from the original on 2015-02-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "புத்தகங்களுக்குத் தமிழியலில் வெளியான மதிப்புரைகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள்
- ↑ திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துக்கள்
- ↑ கடைக் கழக நூல்களின் காலமும் கருத்தும்
- ↑ தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள்
- ↑ "Book details". பார்க்கப்பட்ட நாள் 2024-04-29.