இரா. சொக்கலிங்கம்
இரா. சொக்கலிங்கம் (1856 - 1931) தமிழகத் தமிழறிஞர் ஆவார்.
இளமைப் பருவம்
இரா. சொக்கலிங்கம் காரைக்குடியில் யாழ்ப்பாணத்தார் வீடு என்று சொல்லப்படும் குடும்பத்தில் இராமநாதனுக்கும் முத்துக்கருப்பி ஆச்சிக்கும் மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொண்டார். உடுமலைப்பேட்டையில் தந்தையார் தொடங்கிய வணிக நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். தமது 17ஆவது வயதில் யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரைக் கண்டு அவரிடம் தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். தேவக்கோட்டை வன்தொண்டரிடம் திருமுறைகளையும், மதுரை மெய்யப்ப சுவாமிகளிடம் சித்தாந்தச் சாத்திரங்களையும் கற்றுணர்ந்தார்.
தொண்டுகள்
காரைக்குடியில், மீனாட்சி சுந்தரேசுவரர் வித்யாசாலை என்ற பள்ளியை நிறுவி, அங்கு தமிழ் கற்பிக்கச் செய்தார். திருநல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், அறுபத்து மூவர் திருமடம் நிறுவித் தெய்வத் திருப்பணிகளைச் செய்தார். சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை நிறுவி, தமிழ் இலக்கிய இலக்கணங்களையும், சைவசித்தாந்தத்தையும், சமஸ்கிருத்தையும் கற்றுக் கொள்ள வழிவகை செய்தார். இந்த வித்தியாசாலையில் தாமும் ஓர் ஆசிரியராக கற்றுக் கொடுத்தார்.
இயற்றிய நூல்கள்
- திருப்பத்தூர்ப் புராணம்
- சோழபுர புராணம்
- சிவகாமியம்மைப் பதிகம்
- திருத்தொண்டர் பதிகம்
- ஆதிசிதம்பரேசர் பதிகம்
- மதுரை சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை
- சோமசுந்தர மாலை
- வீரசேகரமாமணிமாலை
- சிவகாமியம்மைப் பிள்ளைத் தமிழ்
- திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ்
- திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழ்
- சுந்தரமூர்த்தி பிள்ளைத்தமிழ்
- மணிவாசகர் பிள்ளைத்தமிழ்
- திருவாரூர்த் திருபத்தந்தாதி
- திருவாலவாய் யமகவந்தாதி
- மகுட தனவைசிய மரபு விளக்கம்
- மெய்கண்ட சிவசரித்திரம்
சிறப்புகள்
இவரை செந்தமிழ்ச் செல்வர் என்று தமிழ்க்கூறு நல்லுலகமும், சித்தாந்த வித்தகர் என்று சைவ உலகமும் போற்றிப் பாராட்டியுள்ளது. இவரைப் பண்டிதமணி, தமிழைத் தகவுணர்ந்தோன் என்று போற்றியுள்ளார்.
மறைவு
தமது 75 ஆவது வயதில் 1931 ஆம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- குன்றக்குடி பெரியபெருமாள்-தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்-மதிநிலையம் -1996.
- மு.அருணாசலம்- தமிழ் இலக்கிய வரலாறு-2005 தி பார்க்கர் வெளியீடு.