இரா. கிருஷ்ணமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
இரா. கிருஷ்ணமூர்த்தி
பிறந்ததிகதி சனவரி 18, 1933 (1933-01-18) (அகவை 92)
இறப்பு மார்ச்சு 4, 2021(2021-03-04) (அகவை 88)
தேசியம் இந்தியன்
அறியப்படுவது இதழியல், நாணயவில்

முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி[1] சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த நாணயவில் அறிஞர் ஆவார்[2]. தமிழகத்தில் பிரபலமான தினமலர் நாளிதழ் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர். கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் முதன்முதலில் எழுத்துருக்களை உருவாக்கியவர்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது [3] இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. நாணயவியலில் சிறப்பான ஆராய்ச்சி செய்ததால், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம் இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.

தமிழ் வளர்ச்சிக்காக, ஆய்வுகள் நடத்தியவர்; சங்ககால நாணயங்களைத் தேடி, கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர். தமிழ் சீர்மை எழுத்துக்களை பரவலாக்கும் விதமாக கவனத்துடன், தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவு மிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். இப்படி, பன்முகத்திறன்கள் படைத்தவர், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி.


இளமைக்காலம்

தந்தை, தினமலர் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர். தாயார் கிருஷ்ணம்மாள். இந்தத் தம்பதிக்கு, இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரம் கிராமத்தில் ஜனவரி 18, 1933ல் பிறந்தார். நாகர்கோவில் சேது லெக்குமிபாய் பள்ளி என்ற எஸ்.எல்.பி.பள்ளியிலும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும் கற்றார். உயர் கல்வியை, காரைக்குடி மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயி்ன்றார். பின் தினமலர் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

பத்திரிகை ஆசிரியர்

பத்திரிகை ஆசிரியர் பணியை, கல்வித் தகுதியும், வாழ்வு அனுபவமும் நுட்பமாக்கியது. வறுமை, சீரற்ற வளர்ச்சி, சமச்சீரற்ற வாய்ப்பு என, சமூகத்தின் பல அம்சங்களை மனதில் கொண்டு, இதழ் ஆசிரியர் என்ற பணியை நிறைவேற்றிவந்தார். அன்றாட செயற்பாடு, இவற்றை எல்லாம் தொட்டுச் செல்லும். பேச்சில், கவனிப்பில், நிகழ்வுகளில் சமூக நிலையை கண்டு தெளிவார். அதற்கு ஏற்ப செய்திகளைத் தயாரிக்க உணர்த்துவார்.

ஆசிரியர் குழு விவாதங்களில், ‘ஒரு சொல், பல்லாயிரம் உணர்த்தல்’ என்ற அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்வார். தவறு என்று அறிந்தால், அறிவுரைத்து திருத்துவார். பத்திரிகை பணி அவரது பன்முகத்திறனாக வெளிப்பட்டது. தகுதியுள்ளவர்களை இனம் கண்டு, ஆசிரியர் குழு பணிகளில் அமர்த்தி, தினமலர் நாளிதழ் செய்திப்பிரிவை சிறப்பாக நிர்வகித்தார்.

தமிழ் எழுத்து சீர்மை

பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்மை முறையை, தினமலர் நாளிதழில், அமல்படுத்தினார். இந்த எழுத்து முறையில், 1966ம் ஆண்டு, ஒரு பத்தி செய்தியை அச்சுக் கோர்த்து முதன்முறையாக, தினமலர் திருச்சி பதிப்பில் வெளியிட்டார். தமிழக அரசும், ஏனைய தமிழ் இதழ்களும், பதிப்பகங்களும் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் தான் சீர்மை எழுத்து முறையைப் பின்பற்றத் துவங்கின.

நாணயவியல் ஆய்வு

சங்ககாலத்தில் தமிழ் நிலப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட பல நாணயங்களை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார்.[4] அது தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[5] பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயம் தான், முதலில் கிடைத்த சங்ககால நாணயம். இது பற்றி, 1985ல், காசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக்கட்டுரை வாசித்தார். அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அக்கட்டுரை வெளியிடப்பட்டது. பெருவழுதி நாணயம் கி.மு.2 அல்லது, 3ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்.

சங்ககாலத்தில் ஆண்ட சேர மன்னர் மாக்கோதை வெளியிட்ட நாணயத்தையும் கண்டுபிடித்துள்ளார். கிரேக்க நாட்டவர், தமிழகத்துடன் செய்த வாணிபத்தை நிரூபிக்கும் வகையில், நாணயங்களை கண்டுபிடித்துள்ளார். திரேஸ், தெசலி, கீரிட் பகுதியில் உருவாக்கப்பட்ட நாணயங்களை, தமிழகத்தில் கண்டு எடுத்து ஆராய்ந்து, தமிழர் வசிக்கும் பகுதியில், கிரேக்கர்களின் வாணிபத் தொடர்பையும் அதன் காலத்தையும் நிரூபித்துள்ளார்.

கொடைகள்

பயன்மிக்க வாழ்க்கை அமைத்துக் கொண்டவர், முனைவர், இரா. கிருஷ்ணமூர்த்தி. அவரது கொடை பண்பால், பயன்பெற்றவர்கள் ஏராளம்.

கல்வி நிறுவனங்கள், ஏழை மாணவ மாணவியர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் உயர பொருளுதவிகள் செய்துள்ளார். கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர்பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பங்கள் சிலவற்றை, காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் என்ற கிராமத்தில் குடியேற்றியது தமிழக அரசு. அவர்கள் மறு வாழ்வு பெற நிலமும் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், சிறிய அளவிலான படிப்பகம் ஒன்றை அமைத்து சேவை செய்கிறது காஞ்சி மக்கள் மன்றம் என்ற சேவை அமைப்பு. அந்த படிப்பகம் துவங்குவதற்கான பொருளுதவி செய்து ஊக்குவித்தார் முனைவர் கிருஷ்ணமூர்த்தி.

பின்தங்கிய பகுதி ஏழைகள், கல்வி முன்னேற்றத்துக்கு, தினமலர் நாளிதழ் நடத்திவருகிறது, ‘ஜெயித்துக்காட்டுவோம்]]’ என்ற நிகழ்ச்சி. இது, 1998 முதல் ஏழை மாணவ, மாணவியரை படிப்பிலும், வாழ்க்கையிலும் ஆண்டுதோறும் ஜெயிக்க வைக்கிறது. இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 2007 மற்றும், 2012 என, இரண்டு முறை, சென்னையில், மாநகராட்சிப்பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உரையாடி ஊக்கப்படுத்தினார்.

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்புக்குத் தனித்துறை உள்ளது. இந்த துறையில் நவீன வகுப்பறை, ஆய்வகம், படிப்பகம் நவீன தொடர்பியல் சாதனங்கள் பொருத்த வசதியான அறைகள், விவாதக்கூட அரங்கங்கள் உருவாக்கப் போதிய கட்டமைப்பு வசதி பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாமல் இருந்தது. இதை அறிந்த இரா.கிருஷ்ணமூர்த்தி போதிய வசதிகளுடன், தேவையான கட்டடத்தை பெரும் பொருட்செலவில் கட்டியுள்ளார் இதற்கு, ‘இராம சுப்பையர் கிருஷ்ணமூர்த்தி ஊடகக்கூடம்’ என, பெயர் சூட்டியுள்ளது பல்கலை நிர்வாகம். அந்தக் கட்டடத்தை, பிப்ரவரி 22, 2007ல், சக்தி தொழில் குழுமங்களின் தலைவர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் திறந்துவைத்தார்.

பின், இந்த கட்டடத்துடன் விரிவாக்க, ‘பிளாக்’ ஒன்று கட்டப்பட்டது. அதற்கு, 50 சதவீதம் நிதியை முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மீத நிதியை அரசு ஒதுக்கியது. அந்தக் கட்டடத்தை, தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, நவம்பர் 22, 2017ல் திறந்து வைத்தார். கட்டடத்துக்கு, ‘ஆர்.கே. மீடியா பிளாக்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை பெசண்ட் நகரில் உ. வே. சாமிநாதையர் நூலகம் இயங்கி வருகிறது. இதன் இயக்கத்துக்கு ஏராளமாக பொருளுதவி செய்துள்ளார். அங்கிருக்கும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை, நவீன தொழில் நுட்பத்தில், மின்னுாலாக்கும் பணிக்கு தொடர்ந்து பொருளுதவி செய்து வருகிறார். அவரது காலத்துக்கு பின்னும் உதவி தொடர வழிவகை செய்துள்ளார்.

விருதுகள்

நாணயவியல், இதழியல், எழுத்தியல் என, பல துறைகள், முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி உழைப்பால் செழுமையடைந்துள்ளன. அவரது அயராத உழைப்பைப் பாராட்டி, இந்திய அரசு, தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு மையங்கள், அயல்நாட்டு ஆய்வு அமைப்புகள் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

சங்க காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்து, ‘சங்ககாலச் சோழர் நாணயங்கள்’ என்ற தலைப்பில் நூல் எழுதியதற்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, 1988ல் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிப் பாராட்டியது. சங்க காலத்தில் வாழ்ந்த, பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயங்களை ஆராய்ந்து, ‘பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்’ என்ற நூலை வெளியிட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், இதைச் சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகத் தேர்வு செய்து, 1988ல் பரிசு வழங்கிக் கவுரவித்தது.

தமிழகத்தில், சிறந்த வரலாற்று ஆய்வு அறிஞராக, இரா.கிருஷ்ணமூர்த்தியை, தஞ்சாவூர், கே.என்.ஜி. கலைக்கல்லுாரி, வரலாற்றுத்துறை தேர்வுசெய்துள்ளது. இதற்காக, 1991ல் கேடயம் வழங்கிக் கவுரவித்தது. வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் சங்கம், ஆண்டுக் கருத்தரங்கை, கர்நாடக மாநிலம், தர்மசாலாவில், டிசம்பர், 1991ல் நடத்தியது. அந்தக் கருத்தரங்கில், ‘சி.எச்.பிடுல்ப்’ விருது வழங்கிக் கவுரவித்தது. இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், ஆகஸ்ட், 1995ல், ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதில், ‘டி.தேசிகாச்சாரி’ விருது வழங்கிக் கவுரவித்தது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ராயல் நாணயவியல் கழகம், 1997ல், கிருஷ்ணமூர்த்திக்கு, கவுரவ உறுப்பினர் Fellow of Royal Numismatic Society என்ற உயரிய தகுதி தந்து கவுரவித்துள்ளது. கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, ஜூலை 20, 1998ல், ஈரோட்டில் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தன; நினைவுப் பரிசுகளும் வழங்கின. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 1998ல் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம், மே 1998ல், ‘கபிலவாணர் விருது’ வழங்கி கவுரவித்தது.

திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம், பிப்ரவரி 1999ல், ‘நாணயவியல் ஆய்வுச்செம்மல்’ என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது. இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, ஏப்ரல் 2000ல், மெட்ராஸ் தெலுங்கு அகாடமி என்ற அமைப்பு, ‘யுகாதி புரஸ்கார் –2000’ என்ற விருது வழங்கிக் கவுரவித்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, ஜனவரி, 2001ல், ‘நாணயவியல் பேரறிஞர்’ என்ற கவுரவம் வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ் செம்மொழி என்ற தகுதியைப் பெற முக்கிய சேவையாற்றியதற்காக இந்திய அரசு, 2012 – 2013ம் ஆண்டுக்கான, தொல்காப்பியர் விருது வழங்கும் ஆணையை வெளியிட்டது. இந்த விருதை, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கும் விழா, 2015ல் புதுடில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, விருதையும், பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கிக் கவுரவித்தார்.

கணினித் தமிழுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி, கணித்தமிழ் சங்கம் அக்டோபர், 2005ல், ‘கணித்தமிழ் விருது’ வழங்கிக் கவுரவித்துப் பாராட்டியது. தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் வெள்ளிவிழா ஆய்வரங்கு, அக்டோபர் 8, 2018ல் நடந்தது. வரலாற்று ஆய்வுப்பணிகளை கவுரவிக்கும் விதமாக, ‘தமிழ்நாடு வரலாற்றியல் அறிஞர்’ என்ற பட்டத்தை, தமிழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குழு வழங்கியது.

வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் கழகம், 102ம் ஆண்டு மாநாட்டை, கோவாவில் நடத்தியது. அந்த மாநாட்டில், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்தது. விருது வழங்கும் வைபவம், தென்னிந்திய நாணயவியல் சங்கம், சென்னையில் நடத்திய மாநாட்டில் வழங்கியது.

மும்பை பல்கலைக் கழக வரலாற்று துறை, முதுகலை பாடத்திட்டத்தை, 2013ல் மாற்றியமைத்தது. அப்போது, முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘சங்க கால தமிழ் நாணயங்கள்’ என்ற ஆங்கில நூலை பார்வை நூலாக சேர்த்து கவுரவித்துள்ளது. முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து, சங்ககால நாணயவியலின் தந்தை என்ற தலைப்பில், வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்.

ஆய்வு நூல்கள்

தமிழ் நாட்டில் கிடைத்த பழமையான நாணயங்கள், தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, இரா.கிருஷ்ணமூர்த்தி, 19 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் பல இந்திய பல்கலைக் கழகங்களில், பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை முதுகலை பாடத்திட்டங்களில் உயராய்வு பார்வை புத்தகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6] முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள் மற்றும் அவை வெளியிடப்பட்ட ஆண்டு:

  1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – 1978
  2. சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து – 1982
  3. பிற்காலத் தமிழ் வட்டெழுத்து – 1985
  4. சங்ககாலச் சோழர் நாணயங்கள் – 1986
  5. பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் – 1987
  6. சங்ககால மலையமான் நாணயங்கள் – 1990
  7. சங்ககாலச் சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு – சில வரலாற்றுச் செய்திகள் – 2005
  8. சங்ககாலப் பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு – 2010
  9. சங்ககாலக் கொங்கு நாணயங்கள் – 2011
  10. கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட செழிய, செழியன் நாணயங்கள் – 2014[7]
  11. SANGAM AGE TAMIL COINS -– 1997
  12. NON - ROMAN ANCIENT FOREIGN COINS -– 2000
  13. THE PALLAVA COINS –- 2001
  14. A CATALOGUE OF THE SANGAM AGE PANDYA AND CHOLA COINS IN NATIONAL MUSEUM COLOMBO, SRILANKA -– 2005
  15. LATE ROMAN COPPER COINS FROM SOUTH INDIA –- 2007
  16. ANCIENT GREEK AND PHOENICIAN COINS FROM KARUR –- 2009
  17. CHINESE COINS IN TAMILNADU -– 2009
  18. DATING OF SANGAM AGE: IMPORTANT NUMISMATIC FINDINGS -– 2010
  19. SANGAM AGE TAMIL COINS AND ANCIENT FORIEGN COINS FOUND IN TAMILNADU -–- 2016

ஆய்வுக்கட்டுரைகள்

  1. 'Sangam Period Pandya Coins with Tamil - Brahmi Legends' - Journal of the Numismatic Society of India (JNSI), 47, 1985, pp 45–47.
  2. 'Kalabra Coin with a Legend,' JNSI, 1986, p. 48.
  3. 'Sangam Period Chera Coins,' JNSI, 1987, pp. 36–38.
  4. 'Some Unpublished Silver Punch - Marked Coins of the Pandyas,' JNSI, 1988, pp. 25–27.
  5. 'Coins of the Pallava king Mahendravarman I,' JNSI, 50, 1988, pp. 33–34.
  6. 'Some Unpublished and Rare Coins of the Pallavas,' JNSI, 1988, pp. 35–36.
  7. 'Pallava Coin with Lion Symbol,' JNSI, 1989, pp. 90–92.
  8. 'Sangam Period Silver Portrait Coin of Mākkotai,' paper read at the Conference of Oriental Numismatic Society and Indian Coin Society, Nagpur, 1990.
  9. Coins Of The Sangam Age, Dravidian Encyclopaedia, The International School of Dravidian Linguistics, Thiruvananthapuram, 1990, Vol.I, pp. 167–170.
  10. 'Some New Finds of Sangam Period Chera Coins,' JNSI, 1990, pp. 3–6.
  11. 'A Rare Sangam Period Chola Coin,' Studies in South Indian Coins (SINS), I, 1991, pp. 31–32.
  12. 'Oblong Coin with a 'Mother Goddess Symbol' from Karur, Tamilnadu,' JNSI, 1991. pp. 59–61.
  13. 'Two More Pallava Coins with Legends,' JNSI, 1991, pp. 62 – 63.
  14. 'Mākkotai Coins,' Studies in South Indian Coins, II, 1992, pp. 19–28.
  15. 'Seleucid Coins from Karur,' Studies in South Indian Coins, III, 1993, pp. 19–28.
  16. 'Coins from Phoenicia Found at Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, IV, 1994, pp. 19–27.
  17. 'Sangam Age Chera coin with Legend Kuttuvan Kotai' in 'The Hindu,' 22 May, 1994 (Madras edition)
  18. 'Imitation Roman Gold Coins from Tirukoilur hoard', Ex-Moneta, Essays on Numismatics, History & Archaeology in honour of Dr. D.W.MacDowell, Indian Institute of Research in Numismatic Studies, Nasik, 1995, pp. 131–136.
  19. 'Coins from Greek Islands, Rhodes and Crete found at Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1995, pp. 29–36.
  20. 'Copper punch-marked coins from Karur, Tamilnadu,' 1996.
  21. 'A Roman Coin Die from Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1996, pp. 43–48.
  22. Coin Circulation in Ancient Tamil Region C. 400 B.C - C.600 A.D. Paper presented at the Annual Conference of the Numismatic Society of India, 1996.
  23. A Roman Coin bronze die from Karur, Tamilnadu, India. Paper presented at the XII, International Numismatischer, Kongress, Berlin, 1997. (Published in Proceedings, Vol.I, p. 552. Published in Berlin in 2000)
  24. 'A Gold Ring of Athiaman,' Studies in South Indian Coins, 1997, pp. 41–44.
  25. 'A Note on Counterstruck Silver Coinof Makkōtai,' Studies in South Indian Coins, 1998, pp. 35–39.
  26. 'Aksumite Coins of Ethiopia from Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1998 - pp. 58–64.
  27. 'A Coin of Priest - Kings of Judaea from Karur,' Studies in South Indian Coins, 1999, pp. 23–29.
  28. 'Hellinistic period coins from Karur - A Review,' Studies in South Indian Coins, 2000 - pp. 7–21.
  29. Three Unknown Cola Coins of the Sangam Period, Narasimhā Priyā - Prof.A.V.N.Murthy Felicitation Volume, 2000.
  30. 'Some Unknown Ancient Greek Coins from Karur,' Studies in South Indian Coins, 2001, pp. 53–56.
  31. Lion Slayer Motif on an Inscribed Gold Ring from Karur, Studies in South Indian Coins, 2003, pp. 17–19.
  32. 'Some Roman Republican denarii from Karur in South India,' Paper presented at XIII, International De Numismatica, Madrid, 2003, Spain 15th Sept.
  33. Some Fifth Century A.D. Roman Gold Coins and their Imitations from Southern Tamilnadu, India, Paper presented at Colloquium organised by Instituto Italiano di Numismatica, Rome, 2004, 17th Sept.
  34. Late Roman Copper Coins and Imitations of c 4th century A.D. in Sri Lanka, Paper read at the International Seminar on 'Tamilnadu and Sri Lanka: New Evidence on Maritime and Inland Trade' organised by The Tamilnadu Numismatic Society, Chennai and Centre de Recherhe Ernest Babelon, Paris on 2nd December 2004 at Chennai.
  35. 'Sangam Age Pandya Coins with Legend Peruvaluthi in the National Museum, Colombo,' Studies in South Indian Coins, 2005, pp. 58–63.
  36. 'A Satavahana Lead Coin with Bow and Arrow Symbol,' Studies in South Indian Coins, 2005, pp. 35–38. (Co-Author Mohd.Safiullah)
  37. 'Sangam Age Pandya and Chola Coins from National Museum, Colombo,' Studies in SouthIndian Coins, 2005, pp. 43–52. (Co-Author Senarath Wickramasinghe)
  38. 'Two Coins of King Agrippa - I of Judaea from Karur,' Studies in South Indian Coins, Vol.XVI, 2006, pp. 21 –23.
  39. 'Roman Coins associated with Christian Faith Found at Karur and Madurai,' AIRAVATI, Felicitation Volume in honour of Iravatham Mahadevan, Chennai -82, 2008, pp. 67–75.
  40. 'Sangam Age Chera Silver Coin with a Portrait and Roman Type Helmet,' Studies in South Indian Coins, IC, Vol. XVIII, 2008, pp. 43–45
  41. 'Ancient Chera Coins from Banavasi,' Studies in South Indian Coins, Vol.XIX, 2009, pp. 40–47.
  42. 'Another Pallava Coin with Legible Legend Māhameghah,' Studies in South Indian Coins, Vol.XIX, 2009, pp. 59.
  43. 'An Imitation Roman Coin Pendant from Banavasi,' Studies in South Indian Coins, Vol.XX, 2010, pp. 40–43.
  44. 'A Study of Legends on Two Early Chera Coins,' Studies in South Indian Coins, Vol.XX, 2010, pp. 70–73.
  45. 'A Note on Sangam Age Chera Coins from Pattanam in Kerala,' Studies in South Indian Coins, Vol.XXI, 2011, pp. 32–36.
  46. Discovery of yet Another Rare Sangam Age Pandya Coin, Studies in South Indian Coins, 2013, vol. XXIII, p. 29, 30

சான்றுகள்

  1. http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2019/PR060119-1.pdf
  2. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/111415/4/13_chapter2.pdf
  3. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=121714
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-17. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
  5. http://www.dinamalar.com/news_detail.asp?id=1252538
  6. http://archive.mu.ac.in/syllabus/4.52%20%20M.A.%20Numismatics%20&%20Archaeology.pdf
  7. "‘Not one, but two Pandiya kingdoms in Tamil Nadu’". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/chen-society/not-one-but-two-pandiya-kingdoms-in-tamil-nadu-says-r-krishnamurthy-editor-of-tamil-daily-dinamalar/article6354384.ece. பார்த்த நாள்: 18 October 2020. 
"https://tamilar.wiki/index.php?title=இரா._கிருஷ்ணமூர்த்தி&oldid=25858" இருந்து மீள்விக்கப்பட்டது