இராய. சொக்கலிங்கம்
இராய. சொக்கலிங்கம் (30 அக்டோபர் 1898 – 30 செப்டம்பர் 1974) என்னும் இராயப்ப செட்டியார் சொக்கலிங்கம் தமிழறிஞர்; கவிஞர்; சமய அறிஞர்; எழுத்தாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; காந்தியர்.
பிறப்பு
இராய. சொக்கலிங்கம் (இராய.சொ.) சிவகங்கை மாவட்டம் அமராவதிப்புதூரில் இராயப்பச் செட்டியாருக்கும் அழகம்மை ஆச்சிக்கும் மகனாக 1898 அக்டோபர் 30ஆம் நாள் பிறந்தவர்.[1]
கல்வி
சொக்கலிங்கம் தனது ஆரம்பக்கல்வியை ஆசிரியர் சுப்பையா என்பவரின் திண்ணைப் பள்ளியில் தொடங்கினார். பதினெட்டாவது அகவை முதல் இருபதாம் அகவை வரை பண்டித சிதம்பர் அய்யர் என்பவரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.[2] இடையில், தனது ஒன்பதாம் அகவையில் தன் தந்தை பாலக்காட்டில் நடத்திய கடையில் வேலை செய்தார். அப்பொழுது மலையாளம் கற்றார். 1911 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் உள்ள பிலாப்பம் என்னும் ஊரில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார். அங்குள்ள கடையில் பணியாற்றிக்கொண்டே மலாய் மொழியும் ஆங்கிலமும் கற்றார்.[1]
இந்து மதாபிமான சங்கம்
இராய. சொக்கலிங்கம் இளமையிலேயே தமிழார்வம் உடையவராக இருந்தார். குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பர் என்பவருடன் இணைந்து செட்டிநாட்டுப் பகுதியில் தமிழ்ப்பணியில் ஈடுபட்டார். 1917 செப்டம்பர் 10 ஆம் நாள் இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். விவேகானந்தர் படிப்பகத்தை நிறுவினர்.[1][3] அதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இச்சங்கத்திற்கு வருகைதந்த சுப்பிரமணிய பாரதியாயருடன் 1919 நவம்பர் 9 ஆம் நாள் தன் நண்பர்கள் சூழ ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பாரதியார் இச்சங்கத்தைப் பற்றி ஹிந்து மதாபிமான சங்கத்தார் என்னும் தலைப்பில் ஏழு விருத்தங்கள் எழுதியுள்ளார்.
திருமணம்
இராய. சொக்கலிங்கம் 1918 ஆம் ஆண்டில் பள்ளத்தூரில் பிறந்த உமையாள் ஆச்சி என்பவரை மணந்தார். குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் இராயவரம் குழந்தையன் செட்டியாரைத் தன் மகனாகக் கருதினார். 1960 அக்டோபர் 31ஆம் நாள் உமையாள் ஆச்சி காலமானார். அதன் பின்னர் இராய. சொ. அமராவதிப் புதூரில் இருந்து காரைக்குடிக்குக் குடிபெயர்ந்தார்.[1]
இதழாளர்
சொ. முருகப்பா என்பவர் 1920 ஆம் ஆண்டில் தொடங்கிய தன வைசிக ஊழியன் என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பை இராய. சொக்கலிங்கம் 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டார். இதழின் பெயர் ஊழியன் என மாற்றப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இவ்விதழ் காரைக்குடியிலும் சென்னையிலும் இடம்மாறி வெளிவந்தது.
விடுதலைப் போராட்டம்
காந்தியரான ராய.சொக்கலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டில் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகளைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்தார்.
அரசியல்
ராய. சொக்கலிங்கம் 1938 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று 1941 ஆம் ஆண்டு வரை காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அப்பொழுது அங்கு நான்கு தொடக்கப்பள்ளிகளே இருந்தன. அவற்றைப் பதினேழாகப் பெருக்கினார். காந்தி மாளிகை என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் கட்டினார்.
படைப்புகள்
ராய. சொக்கலிங்கம் 28 சமய நூல்களையும் 5 கட்டுரைத் தொகுப்புகளையும் 8 கவிதைத் தொகுதிகளையும் 2 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் 2009-10 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதற்கு ஈடாக ஐந்து லட்சம் ரூபாய் பரிவுத்தொகையாக அவர் மரபுரிமையினருக்கு வழங்கப்பட்டது.
கவிதை நூல்கள்
- தாலாட்டும் கும்மியும்
- காந்தி பதிணென்பா
- புதுமைப்பாக்கள்; 1935; ஊழியன் பிரஸ், சென்னை
- பெண் விலைக் கண்டனச் செய்யுட்கள்; தனவைசிய ஊழியன் பிரஸ், காரைக்குடி.
- காந்திக்கவிதை; 1969; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
கட்டுரை நூல்கள்
- குற்றால வளம்; 1947 மார்ச்; பாரத சக்தி நிலையம்; புதுவை.
- வில்லியும் சிவனும்; 1966; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
- கம்பனும் சிவனும்; 1966; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
தொகுத்த நூல்கள்
- பூசைப் பாமாலை; 1958;
- திருத்தலப் பயணம்; 1966; க.வெ.சித.வெ.அறக்கட்டளை, சென்னை 85
பதிப்பு
- அம்மைச்சி இயற்றிய வருண குலாதித்தன் மடல் (1949 பாரதி பிக்சர் பாலெஸ், காரைக்குடி)
- சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றிய சேதுபதி விறலிவிடு தூது (1947 – இலக்கியப் பதிப்பகம். காரைக்குடி)
- சுப்ரதீபக் கவிராயர் இயற்றிய கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது (1949 – பாரதி பிக்சர் பாலெஸ், காரைக்குடி)
- சேந்தனார் இயற்றிய திருப்பல்லாண்டு (1967)
- சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசலப்புராணம் (5.12.1970 - அருணாசலேசுவரர் கோவில், திருவண்ணாமலை)
ஆகிய நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.
பட்டம்
- 1958 ஆம் ஆண்டில் அவரது மணிவிழாவின் பொழுது காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தினர் தமிழ்க்கடல் என்னும் பட்டத்தை வழங்கினர்.
- 1961 ஆம் ஆண்டில் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபையினர் சிவமணி எனப் பட்டம் வழங்கினர்
- 1963 ஆம் கோலாலம்பூர் அருள் நெறித் திருக்கூட்டத்தினர் சிவம்பெருக்கும் சீலர் என்னும் பட்டம் வழங்கினர்
- வண்கவி வள்ளல் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.[4].
நூலகம்
ராய. சொக்கலிங்கம் தான் சேர்த்து வைத்திருந்த நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கி விட்டார்.
மறைவு
ராய. சொக்கலிங்கம் 1974 செப்டம்பர் 24ஆம் நாள் காரைக்குடியில் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
ராய. சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை "தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்" என்னும் நூலாக சா. கிருட்டினமூர்த்தி, ச. சிவகாமி ஆகிய இருவரும் பதிப்பித்து இருக்கின்றனர். அந்நூலை சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது.[5]
நினைவேந்தல்
இவரது நினைவாக கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ராய. சொக்கலிங்கம் நினைவுச் சொற்பொழிவு நடைபெறுகிறது.[6]
வெளி இணைப்புகள்
இராய. சொக்கலிங்கத்தின் நூல்கள் மின்நூலகத்தில்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 .இராமமூர்த்தி, புலவர் இரா.; தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார், தினமணி 2010 மே 2
- ↑ சித. ராயப்ப செட்டியார், தமிழ்க்கடல் ராய. சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
- ↑ "மலர் மன்னன்; ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!" இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306041401/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=21101175&edition_id=20110117&format=html.
- ↑ சொக்கலிங்கம், ராய; பூசைப்பாமாலை; இந்து மதாபிமான சங்கம், காரைக்குடி; முதற்பதிப்பு 1958, தலைப்புப் பக்கம்
- ↑ தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2005
- ↑ தினமலர், 2013 – மார்ச் – 14