இராம. திரு. சம்பந்தம்
இராம. திரு. சம்பந்தம் அல்லது, இராம. திருஞானசம்பந்தம், (இ. 14 ஆகஸ்ட், 2007) தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர், தமிழின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்தவர். மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
பத்திரிகைத் துறையில்
தனது 22 ஆவது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார். பின்னர், 1960இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார். 1961இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், செய்திப் பிரிவுத் தலைவர் என்று பல நிலைகளுக்கு உயர்ந்தார்.
பின்னர், "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் தனது 69ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.
தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார். இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Tamil Nadu News : Veteran journalist dead". தி இந்து. 2007-08-15. Archived from the original on 2007-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
- ↑ Jeffrey, Robin. India's Newspaper Revolution: Capitalism, Politics and the Indian-Language. C. Hurst & Co. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.