ஆவூர் கிழார்
ஆவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 322 (வாகை; வல்லாண் முல்லை).
இவரது மகன் கண்ணனார் பாடல் ஒன்றும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது.(அகம்: 202)
ஆவூர் இருக்குமிடம் தஞ்சை மாவட்டம்.
புறம் 322 செய்தி
வல்லாண் எப்படிப்பட்டவன்?
வேந்தனைக் கண்துயில விடாமல் அவனைக் கலக்கிக்கொண்டே யிருப்பவன்.
எதனைக் கலக்குவான்?
வேந்தனின் தன் தண்பணை ஊரைக் கலக்குவான்
வேந்தன் ஊர்
கரும்பைச் சாறு பிழிய உதவும் 'இரும்பின் எந்திரம்' ஒலிப்பதைக் கேட்டுப் பெரிய முதுகினைக் கொண்ட வாளைமீன் பிறழும் நீர்வளம் மிக்க வயல்களைக் கொண்டது.
மறவன் ஊர்
வன்புலம். காட்டு நிலம்.
மறவன் ஊர்ச் சிறுவர்கள்
வரகு அறுத்த வயலில் கருப்பை என்னும் வெள்ளெலி மேயும். சப்பாத்தி முள்ளை நுனியில் குத்திய அம்பை வில்லில் ஏற்றி அந்த எலியைக் குறிபார்த்து எய்து வீழ்த்திய அவ்வூர் மறவரின் சிறுவர்கள் ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்டுப் பெரிய கண்களையுடைய குறுமுயல் மன்றத்தில் வைத்திருக்கும் கரும்பானைகள் உடையும்படி பாயும்.
வல்லாண்மை
மென்புல வல்லாண் தண்பணை வேந்தனைக் கலக்குதல். சிறுவர்களும் வில்லெய்து வல்லாண்மையில் பயிற்சி பெறுவர்.