ஆதி குமணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதி குமணன்
ஆதி குமணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆதி குமணன்
அறியப்படுவது எழுத்தாளர்

ஆதி. குமணன் (பிப்ரவரி 9,1950-மார்ச் 28,2005, மலேசிய பத்திரிகை ஆசிரியர்.புகைப்படத்திற்கு நன்றி வல்லினம் தனது எழுத்தின் மூலம் மலேசியப் பொதுவாசகர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியவர். எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பத்திரிகை அதிபராகவும் எழுத்தாளர்களின் நலனுக்குத் துணை நின்றார்.

பிறப்பு, கல்வி

ஆதி. குமணன், பிப்ரவரி 9, 1950-ல் பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த் நகரில் பிறந்தார். இவர் தந்தை ஆதிமூலம். தாயார் சாரதா. இத்தம்பதியினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆதி.குமணன். இவரது அண்ணன் எழுத்தாளர் ஆதி. இராஜகுமாரன். ஆதி. குமணனின் இயற்பெயர் குமணபூபதி. தாயாரின் பராமரிப்பில் தனது ஐந்தாவது வயதில் தமிழகம் சென்றவர் தன் ஆரம்பக் கல்வியை தமிழகத்திலேயே கற்றார். 1970-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் தன் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ஆதி. குமணன் மார்ச் 23, 1970-ல் இந்திராவதி பாயைத் திருமணம் செய்தார். ஆதி.குமணன் - இந்திராவதி பாய் தம்பதிகளுக்கு ஒரு மகன் உண்டு.

பட்டப்படிப்பை முடித்து, 1970-ல் தமிழகத்தில் இருந்து மலேசியா திரும்பிய ஆதி.குமணனை 1972-ல் அவர் தந்தை பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு அழைத்து வந்து 'பார்வதி பாளைகாட்' எனும் துணிக்கடையில் எழுத்தர் வேலை பெற்றுத்தந்தார். தொடக்கத்தில் கோலாலம்பூரில் மலாய் ஸ்டிரீட் பகுதியில் இருந்த 'பார்வதி பாளைகாட்' எனும் துணிக்கடையில் வேலை செய்தார். அந்தத் துணிக்கடை நிர்வாகியான சின்னராசு ஆதி. குமணனின் திறனை அறிந்து அவரை எம். துரைராஜிடம் அறிமுகப்படுத்தினார். எம். துரைராஜின் சிபாரிசின் பேரில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளையின் நாளிதழான தமிழ் மலரில் உதவி ஆசிரியராகப் பணியைத் துவங்கினார் ஆதி. குமணன்.

இதழியல்

தமிழ் மலர் இதழில் உதவி ஆசிரியராக ஆங்கிலத்தில் வந்த செய்திகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியை ஆதிகுமணன் செய்துவந்தார். 1970-களில் தமிழ் மலரில் பணியாற்றிய காலத்திலேயே புதுக்கவிதை வடிவத்தைப் பரவலாக அறிமுகம் செய்யும் வகையில் 'புதன் மலரை’ துவங்கினார். 1976-77-ல் தமிழ் மலரில் நிர்வாகத்தை ஏற்ற புதியவர்களால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் வேலையை இழந்தார். 1977-ல் ஆதி. குமணன் சுயமாக வானம்பாடி (மலேசியா) வார இதழைத் துவங்கினார். துவங்கிய முதல் ஆண்டிலேயே அது 50000 பிரதிகள் வரை விற்றது. மேலும் வானம்பாடி வழி மாதம் ஒரு நாவல் எனும் திட்டத்தைக் கொண்டு வந்து 11 குறுநாவல்களைப் பதிப்பித்தார்.

1981-ஆம்ஆண்டு முன்னால் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவலிங்கத்தோடு இணைந்து 'தமிழ் ஓசை' நாளிதழின் உரிமத்தை வாங்கியபின், ஆதி. குமணனே அதற்கு நிர்வாக ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அதை மூன்றரை ஆண்டுகள் நடத்தினார்.

1990-ல் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கி அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனை வெற்றிகரமாக நடத்தினார். ஆதி. குமணன் ஆசிரியராக இருந்தவரை மலேசிய நண்பனே மலேசியாவில் முதல்நிலை நாளிதழாகத் திகழ்ந்தது. ஞாயிறு ஓசை, மலேசிய நண்பன் இதழில் அவர் எழுதிவந்த பத்தி வடிவிலான 'பார்வை’யும் கேள்வி பதில் பகுதியான 'ஞானபீடமும்’ வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தவை.

அமைப்புப் பணிகள்

1987-ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 5-ஆவது தலைவராக ஆதி. குமணன் பதவி ஏற்றார். 1987 முதல் 2003 வரை 17 ஆண்டுகள் அதன் தலைவராகப் பங்களித்தார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது, அவர் முன்னெடுத்த இலக்கிய நிதி 40,000 மலேசிய ரிங்கிட்டைத் தொட்டது. அதனை முதலீடாகக்கொண்டு சங்கத்துக்கு ஒரு கட்டடத்தை வாங்கினார். அக்கட்டடம் மே 4, 1997 அன்று டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்களால் திறப்பு விழா கண்டது.

தான் தலைவராக இருந்தபோதே மூத்த தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் பொருட்டு டான்ஶ்ரீ ஆதிநாகப்பன், டான்ஶ்ரீ மாணிக்க வாசகம் விருதுகளையும் ஏற்படுத்தினார்.

1998-ல் காம்ன்வெல்த் நடைப்போட்டியில் 50 கிலோமீட்டர் பெருநடை போட்டியில் தங்கம் வென்ற ஜி. சரவணனுக்கு மலேசிய அரசாங்கம் வாக்களித்தபடி 'பெர்டானா' காரைப் பரிசளிக்காததால் தானே முன்னின்று நிதி திரட்டி அவருக்கு ஹோண்டா சிவிக் ரக கார் வாங்கிப் பரிசாகக் கொடுத்தார். இதுபோல குஜராத் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி என நாளிதழ் வாயிலாகத் திரட்டி குஜராத் மற்றும் தமிழகத்திற்கு அத்தொகையை வழங்கினார்.

தோட்டத் தொழிலாளர் சங்கம் போராடிய தோட்டப்பாட்டாளிகளுக்கான மாதச் சம்பளக் கோரிக்கையை தன் பத்திரிகை மூலம் தொடர்ந்து குரல் எழுப்பினார்.

அரசியலில் ஐ பி எப் (இந்தியர் முன்னேற்ற முன்னணி) கட்சியில் துணைத் தலைவராகவும் சில காலம் பணியாற்றினார்.

மறைவு

தனது 55-ஆவது வயதில் மார்ச் 28, 2008-ல் மரணமடைந்தார்.

விருதுகள்

  • பேராக் மாநில சுல்தானிடன் AMN எனும் விருது பெற்றார்
  • சிலாங்கூர் மாநில சுல்தானிடம் SSA எனும் விருது பெற்றார்
  • மாமன்னரிடம் JSM எனும் விருது பெற்றார்

பண்பாட்டு இடம்

ஆதி குமணன் மலேசிய இலக்கியம், மலேசியத் தமிழர்களின் நலம்நாடும் அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இதழாளர். தன் இதழ்களில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார். குறுநாவல் பதிப்புத்திட்டம், இலக்கியப் போட்டிகள் வழியா எழுத்தாளர்கள் உருவாகவும் இயங்கவும் பங்களித்தார். எழுத்தாளர் சங்கப் பணிகள் வழியாக மலேசிய பண்பாட்டு இயக்கம் தொய்வின்றி முன்னேற வழிவகுத்தார்.

எழுதிய நூல்கள்

  • தூரத்து நிலவு - குறுநாவல் (1980)
  • பார்வைகள் - கட்டுரைகள் (1984)

உசாத்துணை

  • ஆதி. குமணன் நினைவு மலர் - 2005
  • உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
"https://tamilar.wiki/index.php?title=ஆதி_குமணன்&oldid=6643" இருந்து மீள்விக்கப்பட்டது