அ. யேசுராசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அ. யேசுராசா
அ யேசுராசா.jpg
முழுப்பெயர் யேசுராசா
பிறப்பு டிசம்பர் 30, 1946
பிறந்த இடம் குருநகர்,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்


அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்தவர்.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர். காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.

இவர் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றவர். அஞ்சல் அதிபர், தந்தியாளர் சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சஞ்சிகைகள்

இவரது நூல்கள்

  • தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)
  • அறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" - (கவிதை, 1984, 2003)
  • மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, 1985, 1996)
  • காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, 1994)
  • தூவானம் - (பத்தி, 2001)
  • பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
  • பதிவுகள்" - (பத்தி, 2003)
  • குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
  • திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)
"https://tamilar.wiki/index.php?title=அ._யேசுராசா&oldid=2428" இருந்து மீள்விக்கப்பட்டது