அ. துரைராசா
பேராசிரியர் அ. துரைராஜா A. Thurairajah | |
---|---|
யாழ் பல்கலைக்கழகத்தின் 2வது உபவேந்தர் | |
பதவியில் செப்டம்பர் 1988 – ஏப்ரல் 1994 | |
முன்னவர் | சு. வித்தியானந்தன் |
பின்வந்தவர் | கே. குணரத்தினம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை | 10 நவம்பர் 1934
இறப்பு | 11 சூன் 1994 கொழும்பு, இலங்கை | (அகவை 59)
படித்த கல்வி நிறுவனங்கள் | உடுப்பிட்டி அமிக ஹாட்லிக் கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
தொழில் | கல்விமான் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பேராசிரியர் அழகையா துரைராசா (Alagiah Thurairajah; 10 நவம்பர் 1934 – 11 சூன் 1994) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னைநாள் பொறியியல் துறைப் பீடாதிபதியும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
துரைராசா யாழ்ப்பாணம் வடமராட்சியில் கம்பர்மலை என்னும் ஊரிலே, இமையாணனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா ஆகியோருக்கு 1934 நவம்பர் 10 இல் பிறந்தார்.[1][2] தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும்[1][2] கற்று, 1953 சூலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டு குடிசார் பொறியியலில் 1957 ஆம் ஆண்டில் இளமாணிப் பட்டம் பெற்றார்.[1][2]
பின்னர் 1958 மார்ச் வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, நான்கு மாதங்கள் பொதுப்பணித் திணைக்களத்தில் இளைய பொறியியலாளராகப் பணியாற்றினார்.[2] பின்னர் புலமைப்பரிசில் பெற்று பேராசிரியர் கென்னத் ரொசுக்கோ வழிகாட்டலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தார்.[2] 1958 அக்டோபர் முதல் 1961 திசம்பர் வரை துரைராசா மண்ணின் வெட்டுப் பண்புகள் பற்றிய ஆய்வில் ரொசுக்கோவிற்கு உதவினார்.[1][2] இந்த ஆய்வின் மூலம் 1962 சூன் மாதத்தில் "கயோலின் மற்றும் மணலின் சில வெட்டுப் பண்புகள்" என்ற தலைப்பில் துரைராசாவிற்கு முனைவர் பட்டம் கிடைத்தது.[1][2]
துரைராசா இராசேசுவரி என்பாரைத் திருமணம் செய்தார்.[1] இவர்களுக்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[1][2]
பணி
முனைவர் பட்டம் பெற்ற துரைராசா இலங்கை திரும்பும் முன்னர் இலண்டனில் 1962 இல் டெரிசர்ச் என்ற நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார்.[1][2] பின்னர் பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.[1][2] 1971 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் பேராசிரியராக ஆவதற்கு முன்பு கனடா, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1][2] மே 1975 முதல் செப்டம்பர் 1977 வரையும், பின்னர் பெப்ரவரி 1982 முதல் பெப்ரவரி 1985 வரையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2][3] அக்டோபர் 1977 முதல் திசம்பர் 1978 வரை பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2] ஏப்ரல் 1987 முதல் ஆகத்து 1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2]
1988 செப்டம்பர் முதல் 1994 மார்ச் வரை துரைராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[1][2][4] தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி கொழும்பு சென்று அங்குள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார்.[1] 1994 சூன் 11 அன்று இரத்தப் புற்றுநோயினால் ஏற்பட்ட இதய செயலிழப்பினால் கொழும்பில் காலமானார்.[1][2] இவர் இறந்த பின்னர் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.[5]
துரைராசா 1977 முதல் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும், 1979 முதல் இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்திலும், 1985 மே முதல் ஐக்கிய இராச்சியத்தின் குடிசார் பொறியியல் நிறுவனத்திலும் உறுப்பினராக இருந்தார்.[1][2] 1986 இல் இவர் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவராகவும்,[1] அக்டோபர் 1989 முதல் அக்டோபர் 1990 வரை இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார்.[2] இவர் மண் பொறியியலில் நிபுணராகவும் இருந்தார்.[6] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியர் துரைராசாவினால் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 233.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17
- ↑ "Past Deans". பேராதனைப் பல்கலைக்கழகம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-06-11.
- ↑ "Establishment of the Jaffna Campus of the University of Sri Lanka". யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். Archived from the original on 21 July 2012.
- ↑ "'Great man' award to Tamilnet editor". பிபிசி Sinhala. 1 May 2005. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/05/050501_sivaram_award.shtml.
- ↑ "Alagiah Thurairajah".